வலைப்பூ நண்பர்களுக்கு வேலை வாய்ப்பு

வலைப்பூ நண்பர்களே,


இதோ, மீண்டும் ஒரு கார்ட்டூன் முயற்சி. ஜூலை மாதத்தில் எங்கள் அலுவலகத்தின் ஒரு newsletter க்கு நான் போட்ட முதல் கார்ட்டூனை

என் முதல் முயற்சி

என்ற தலைப்பில் போட்டிருந்தேன். உங்களுக்கு ஞாபகமிருக்கலாம்..இல்லையெனில் மீண்டும் ஒரு முறை சென்று பார்த்துவிட்டுவரவும் :)
இதோ இப்போது என்னுடைய இரண்டாவது கார்ட்டூன். இது, வலைப்பூ சம்பந்தப்பட்ட கார்ட்டூன்...

disclaimer : யாரையும் புன்படுத்தும் நோக்கம் அல்ல , விளையாட்டாக போடபட்ட கார்ட்டூன் இது..சிரிக்க மட்டுமே ( சிரிப்பு வரவில்லையென்றால்... சாரி ) :)

வீ எம்

சூ டோ கு !!

தலைப்பை பார்த்தவுடன் சூப்பர் ஸ்டார் படத்தை பார்க்க ஜப்பானில் இருந்து வந்த ஒரு ஜப்பானிய ரசிகர் பற்றிய பதிவு என தவறாக நினைத்துவிட வேண்டாம். :)




நாளிதழ்களில் வரும் குறுக்கெழுத்துக்கு மாற்றாக தற்போது மிக பிரபலமாகி வரும் விளையாட்டுத்தான் இந்த சூ டோ கு (SU - DO - Ku). குறுக்கெழுத்து என்பது வார்த்தைகளை அடிப்படையாக கொண்டது. இந்த சூ டோ கு என்களை அடிப்படையாக கொண்டது.. குறுக்கெழுத்து போல , இங்கே க்ளு (CLUE) எல்லாம் கிடையாது. சில அடிப்படை விதிகளை கொண்டு கட்டங்களை எண்களால் நிரப்ப வேண்டும்.

1970 களின் பிற்பகுதியில் அமெரிக்காவில் தான் இந்த விளையாட்டு தோன்றியது, அப்போதைய அதன் பெயர் "NUMBER PLACE". எண்களை கட்டங்களில் பொருத்துவதால் அதன் பெயர் இவ்வாறு அழைக்கப்பட்டது. 1986ல் தான் இந்த விளையாட்டு ஜப்பானுக்கு பரவி பெரும் வரவேற்பை பெற்றது.அங்கே தான் சூ டோ கு என்று மறுபெயர் சூட்டும் விழாவும் நடந்தது.

ஜப்பானிய மொழியில் சூ டோ கு என்றால் "தனி எண்" (SINGLE NUMBER) என்று பொருள்.20 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது சூ டோ கு உலகின் பல பகுதிகளில் பரவியுள்ளது..எப்படி பலருக்கு குறுக்கெழுத்து விளையாட்டு ஒரு வித போதையோ அதே போல் இப்போது சூ டோ கு பலருக்கு என்பது உன்மை..

எனக்கு பல காலமாக பத்திரிக்கைகளில் வரும் குறுக்கெழுத்துக்களை விளையாடுவதில் ஆர்வம் இருந்தது.. ஒரு காலகட்டத்தில், மற்ற வேலைகள் காரணமாக, காலை காபியுடன் சேர்த்து தலைப்பு செய்திகளை படிப்பது என்ற அளவில் மட்டுமே பத்திரிக்கையுடனான நெருக்கம் சுருங்கி விட்டது..சில சமயம் இந்த சூ டோ கு வை பார்த்த போதிலும் அதில் ஏனோ மனம்போகவில்லை..

பூனேவில் இருந்த போது, காலையில் சற்று நேரமிருந்தமையால் இந்த சூ டோ கு வை விளையாட ஆரம்பித்ததில் , மிக பிடித்து போய், நாங்கள் இருவரும் மிக நெருக்கமாகிவிட்டோம்.. !இவ்வளவு நெருக்கமான பிறகு, அவரை பற்றி ஒரு பதிவு போடாமல் இருக்கலாம???

சரி, என்ன விளையாட்டு இது?
81 (9 x 9 ) கட்டங்கள் , அதில் 15 முதல் 24 கட்டங்களில் ஏற்கனவே எண்கள் நிரப்பட்டு இருக்கும். மீதமுள்ள கட்டங்களின் நாம் எண்களை நிரப்பவேண்டும், அது தான் விளையாட்டு..
21 - 25 கட்டங்களில் எண்கள் நிரப்பப்ட்டிருந்தால் அது EASY level, 18 - 20 நிரப்பபட்டிருந்தால் அது MEDIUM level , 15 - 17 கட்டங்கள் மட்டுமே நிரப்பப்பட்டிருந்தால் அது HARD level என்ற மூன்று பிரிவில் இருக்கும்

அட, ஒரு 67 முதல் 76 கட்டத்துல நம்பர் போடனும் ..இது என்ன பெரிய விஷயம்னு நெனைச்சுடாதீங்க.. இருங்க.. மேல சொன்னபடி, சில ரூல்ஸ் இருக்கு.
நீங்கள் முடித்த பின்னர்,

1. ஒவ்வொரு வரிசையிலும் 1 - 9 வரை எண்கள் நிரப்பட்டிருக்க வேண்டும், ரிப்பீட்டு இல்லாமல் (Every Row should have the numbers 1 to 9 )
2. மேலிருந்து கீழாக ஒவ்வொரு கட்டத்திலும் 1 - 9 வரை எண்கள் நிரப்பட்டிருக்க வேண்டும், ரிப்பீட்டு இல்லாமல் (Eveர்y column should have the numbers 1 to 9)
3. பிரிக்கப்பட்டுள்ள, ஒவ்வொரு 3X3 கட்டங்களிலும்,1 - 9 வரை எண்கள் நிரப்பட்டிருக்க வேண்டும், ரிப்பீட்டு இல்லாமல் (Every 3X3 table should have numbers 1 to 9)..

கேட்கும்போது , ஏதோ சாதாரண விஷயம் போலிருந்தாலும்.. விளையாடும்போது உண்மையிலேயே வெகு சுவாரஸ்யமாக இருக்கும்..
முயற்சித்து பாருங்களேன்..
சாம்பிளுக்கு ஒரு சூ டோ கு வை JPG ல் போட்டுள்ளேன்.. பதிவிறக்கம் செய்து முயற்சித்து பாருங்க..

மேலும் இந்த விளையாட்டு பற்றி பல வலைதளங்கள் உள்ளது..
கூகுள் துனையோடு "su do ku " என்று தேடிப்பாருங்கள்...!




நன்றி ! நன்றி ! நன்றி!

நன்றி ! நன்றி ! நன்றி!

175 நாள் விழாவில் நிறைய பேசுவேன்..இப்போதைக்கு இந்த போஸ்டர் மட்டும் தான்!!

வீ எம்

சிறுகதை - யாதார்த்தம்

வடபழனிக்கு ஒரு வேலையாக வந்தேன்..வந்ததே வந்தோம் முருகனை பார்த்துட்டு போகலாம்னு.. கோவிலுக்கு போய் தரிசனம் செய்துவிட்டு , பிரகாரம் சுற்றிவிட்டு, ஒரமாக இடம் பார்த்து அமர்ந்தேன்..

எதேச்சையாக, என்னை கடந்து சென்ற ஒரு உருவத்தை பார்த்தேன். கருநீல புடவையில், சரியாக பார்க்கும் முன்பே என்னை கடந்துவிட்டாள், அவளாக இருக்குமோ? சரியாக பார்க்கலயே .. என்னையே நொந்துக்கொண்டேன். கொஞ்சம் வேகமா திரும்பி பார்த்திருக்கலாமே...

அவளாக இருக்க கூடாது என்று ஒரு பக்கம், ஆனால் பாழாய் போன மனது அவளாக இருக்கட்டுமே என்று ஆசைப்பட்டது...சரி, எப்படியும் சுற்றிக்கொண்டு இந்தப்பக்கம் தானே வரவேண்டும். எதிர்புறத்தை பார்த்து கண்கள் காத்துக்கொண்டிருந்தது, மனது மெல்ல மூண்றாண்டுகள் பின்னோக்கி சென்றது..

விசிட்டர் என்ற செய்தி கேட்டு, அலுவலக வரவேற்பறைக்கு சென்றேன்.. அங்கே HSBC அடையாள அட்டையுடன் ஒரு வாலிபர், நடுத்தர வயது பெரியவர் ஒருவர், சுமார் 23,24 வயது பெண் ஒருவரும் அமர்ந்திருக்க, இதில் யார் நம்மை பார்க்க, என்ற குழப்பத்தோடு, மூவருக்கும் நடுவே நின்று பொத்தாம்பொதுவாக ஐ ஆம் சுரேஷ் என்றேன்...
ஹலோ சார், மென்மையான குரலில் அந்த பென்..
இந்த பெண்ணா?? நம்மை பார்க்கவா? வியப்போடும் , தயக்கத்தோடும்..ஹலோ என்றேன்...
நீங்க.........?
என் பெயர் சுதா.. அறிமுகப்படுத்திக்கொண்டாள்..
என் குழப்பத்தை புரிந்துக்கொண்டிருப்பாள் போல, உடனடியாக உங்க நன்பன் குமார் அனுப்பினார், வேலை விஷயமாக.. சுருக்கமாக சொல்லி முடித்தாள்.

என் கல்லூரி நன்பன் குமார், நேற்று என்னை தொலைப்பேசியில் அழைத்து, தன் தூரத்து உறவுக்கார பெண் ஒருவர் வேலை தேடுவதாகவும், முடிந்த உதவியை செய்யும்படி கேட்டிருந்தான்.. ஒரளவுக்கு புரிந்துப்போனது..
வாருங்கள் என்று அந்த பெண்ணை அழைத்துக்கொண்டு கேண்டினுக்கு சென்றேன்..

டீ ஆர் காபி என்றேன்..

வேண்டாம் சார், நளினமாக மறுத்தாள்

பரவாயில்லை சொல்லுங்க, நோ பார்மாலிட்டிஸ் என்றேன்..

காபி என்றாள். இருவருக்கும் காபி சொல்லிவிட்டு அமர்ந்தோம்.

சார், குமார் சொல்லிருப்பாரு, வேலை விஷயமாக அடுத்த வாரம் தான் உங்களை பார்க்க சொன்னார், பட் இந்த பக்கம் ஒரு வேலையா வந்தேன்..அதான் இப்பவே பார்த்துட்டு போகலாமேனு.. தயக்கமாக பேசினார்.

நோ பராப்ளம், சொல்லுங்க, என்ன படிச்சிருக்கீங்க, எனி எக்ஸ்பீரியன்ஸ் என்றேன்..

எம் சி யே சார், 2 வருடம் எக்ஸ்பீரியன்ஸ் சார், JAVAவில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறேன் சார்.. சொல்லி முடித்தாள்.

வரும்போதே பை நிறைய எடுத்து வந்திருக்கீங்களா இல்லை வழியில சீப்பா இருக்குனு வாங்கிட்டு வந்தீங்களா??

சற்று குழப்பமாக பார்த்தாள்...என்னது சார்?

இல்லை, இவ்ளோ "சார்" சொல்றீங்ளே அதான் கேட்டேன்..

மெதுவாக சிரித்து வைத்தாள், சரியான கடி என்று மனதிற்குள் நினைத்திருக்கலாம்.
சுரேஷ்னே கூப்பிடுங்க என்றேன்..

காபி வந்தது, பேசிக்கொண்டே இருவரும் குடித்து முடித்தோம்.. செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை பரிமாறிக்கொண்டு விடைப்பெற்றார்.

மீண்டும் என் இடத்திற்கு வந்த அமர்ந்தேன்.. அவளை பற்றி அப்போது தான் சற்று யோசித்துப்பார்தேன்.அளவான உயரம், சுமார் என்று சொல்ல முடியாத அதே நேரத்தில் அழகு தேவதை என்றும் சொல்ல முடியாத, பார்ப்பவரை மீண்டும் ஒரு முறை நிச்சயம் திரும்பி பார்க்க செய்யும் வசீகரமான முகம். அழகாகத்தான் இருக்கிறாள். நினைவகளோடு வேலையில் மூழ்கிப்போனேன்..

மறுநாள் சுதாவிடம் இருந்து மின்னஞ்சல்,

ஹலோ சுரேஷ், தங்கள் நேரத்துக்கு மிக்க நன்றி, காபிக்கும் சேர்த்துஇதனோடு என் பயோடேட்டா இனைத்துள்ளேன், மிக்க நன்றி, சுதா என்று சுருக்கமாக இருந்தது.

அவளின் பயோடேட்டாவை ஒருமுறை பார்த்துவிட்டு, சிறு மாற்றங்கள் செய்து, எங்கள் அலுவலக தேர்வுக் குழுவிற்கு அனுப்பி வைத்தேன்.

மறக்காமல் நான் செய்த மாற்றங்கள் குறித்தும், தேர்வுக் குழுவிற்கு அனுப்பியுள்ளதை பற்றியும் பதில் மின்னஞ்சல் அனுப்பினேன்..

ஒரு சனிக்கிழமை காலை 8.30 மனி இருக்கும்.. எழுந்திருக்கலாமா வேண்டாமா என்ற என்னத்தில் படுத்திருந்த என்னை செல்போன் மனி எழுப்பியது, எடுத்து ஹலோ என்றேன்.
ஹலோ சுரேஷ், சுதா ஹியர், குட் மார்னிங். சற்று சகஜமாகி இருந்தாள்..

ஹாய், குட் மார்னிங் எப்படி இருக்கீங்க.. என்ன ஆச்சு? நேர்முக தேர்வுக்கு அழைப்பு ஏதாச்சும் வந்ததா? ஆவலாக கேட்டேன்.

யெஸ், நேற்று மாலை உங்க எச்-ஆர் கிட்ட இருந்து போன் வந்தது, திங்கட்கிழமை பதினோரு மனிக்கு நேர்முக தேர்வு, உங்க கிட்ட சொல்லலாம்னு போன் பன்னேன்.

குட், ஆல் தி பெஸ்ட் , சில பொதுவான விஷயங்களை பேசிவிட்டு, நேர்முக தேர்வுக்கு சில குறிப்புகள் கொடுத்தேன்..

நேர்முக தேர்வு முடிந்தது.. நன்றாக செய்ததாகவும், தேர்வாகிவிட்டதாகவும் தொலைபேசியில் அழைத்து சொன்னாள், சந்தோஷமாக இருந்தது..

நான்கு நாட்களில் வேலைக்கு சேர்ந்தாள், அவ்வப்போது இருவரும் சந்தித்துக்கொண்டோம், நிறைய பேசினோம்.. ஒரிரு மாதங்களிலேயே நல்ல நன்பர்களாகிப்போனோம்..

நளினமாக உடையனிந்து அவள் கடக்கும் போது பலரின் பார்வை அவள் மேல் மொய்த்தது எனக்கு பொறாமையாகவும் இருந்தது

என்னடா மாப்ளே, உன்னை அடிக்கடி சுதா கூட பாக்கறோம்..என்ன மேட்டரு??? மச்சம்டா உனக்கு.. சூப்பர் ஆளுடா .. கலக்கு.. நன்பர்கள் நக்கலடித்தனர்.. டேய் அப்படியெல்லாம் இல்லடா , பொய் கோபம் காட்டினாலும் மனசுக்குள் சந்தோஷமாகவே இருந்தது..

ஆறு மாதங்கள் உருண்டோடியது, இந்த ஆறு மாதத்தில் இருவரும் இன்னும் மிக நெருங்கிய நன்பர்களாகி இருந்தோம்..வாங்க , போங்க எல்லாம் வா போ என்றானது. அவளுக்கு என்ன என்ன பிடிக்கும் என்று நானும் , எனக்கு என்ன பிடிக்கும் என்று அவளும் விரல் நுனியில் வைத்திருக்கும் அளவிற்கு மிக நெருங்கிய நன்பர்களாகிப்போனோம்
சில முறை அவள் என் வீட்டிற்கும் , பல முறை அவள் வீட்டிற்கு நானும் சென்று வந்திருந்தோம்...

மேலும் 2 மாதங்களுக்கு பிறகு, ஒரு நாள் காண்டீனில், சமேசா ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்த நேரத்தில் ...
என்ன சுதா, அப்புறம் என்ன விஷயம்?
உங்கிட்ட பேசறதுக்கு எதுவும் இல்லையா? கேள்விக்கு எதிர் கேள்வி கேட்டாள்
அப்படி இல்லை , சரி சொல்லு, ..லாஸ்ட் டைம் உங்க வீட்டுக்கு வரும் போது அம்மா சொன்னாங்களே, அது என்ன?

...என்ன சொன்னாங்க? இது சுதாவின் எதிர்கேள்வி

நீயும் தானே அங்கே இருந்தே .... சுதாவின் திருமணம் பற்றிய பேச்சு வந்தது .. அவள் வாயாலேயே ஆரம்பிக்க வேண்டுமென எதிர்பார்த்து கேள்வியை வீசினேன்..

ஓ!! அதுவா, ஆமாம்பா உண்மையாதான்யா, எதிர் வீட்டு பசு நிஜமாவே ஒரே பிரசவத்துல 2 குட்டி போட்டுச்சு .. அமைதியாக சொல்லிவிட்டு ஒரு பார்வை பார்த்தாள்.

எனக்கு ரொம்ப முக்கியம் அது.. அந்த பசு 2 குட்டி போட்டா என்ன , 20 குட்டி போட்டாத்தான் எனக்கென்ன?

ஓ! அப்போ எங்க வீட்டுக்கு நீ வந்தா, எங்கம்மா உன்கிட்ட தேவையில்லத விஷயத்தை எல்லாம் பேசுறாங்கனு சொல்றீயா?.. என்னை வம்புக்கிழுத்தாள்.

ஐயோ என்னமா நீ, சரி சரி, உன் கல்யாண விஷயம்ப்பா... சொல்லிமுடித்துவிட்டு.. சே! என்ன மனுஷன்டா நீ, ஒரு பொன்னுகிட்ட பேசி விஷயத்தை வரவழைக்க முடியல . சரண்டர் ஆயிட்டே? மனதுக்குள் சொல்லிக்கொண்டேன்..

ஹ்ம்ம்.. அதை நேரடியா கேட்க என்னடா(அப்பப்போ இதுவும் உண்டு) தயக்கம் உனக்கு ? மீண்டும் கேள்வி வந்தது

அம்மா தாயே, கேள்விக்கு எதிர் கேள்வி கேட்காம பதில் சொல்லமாட்டீயா நீ?

ஆர்டர் பன்ன சமோசா வந்தது

பதில் வரலயே என்றவாறே சுமதியை பார்த்துக்கொண்டே சமாசாவை கையிலெடுத்தேன்...
ஒரு வாரமாவே இந்த பேச்சு வீட்ல போயிட்டு இருக்கு சுரேஷ்.
நீ என்ன சொன்னே சுதா? சமோசாவை கடித்துக்கொண்டே கேட்டேன்..

நான் எதுவும் சொல்லலயே மா, எனக்கும் சேர்த்து தானே நீ சமோசா சொன்னே? கடித்தாள்

ப்ளீஸ், சற்று கோபமாகவே சொன்னேன்...

சரி சரி , சாரி , சொல்லுங்க என்றாள்

நீ தான் சொல்லனும் , நான் கேட்ட கேள்விக்கு என்ன பதில்

பொன்னுக்கு கல்யாணம் பண்ணி வைக்க நேரம் வந்ததா பெத்தவங்க நினைக்கிறாங்க, இதுல நான் என்ன சொல்லட்டும்.. அது சரி உனக்கு எப்போடா? பார்க்க ஆரம்பிச்சுட்டாங்களா இல்லயா, யாரந்த அதிர்ஷ்டசாலி?

தங்கை கீதா இருக்காளே , அவளுக்கு பார்த்துட்டு இருக்கோம், உனக்குத்தான் தெரியுமே, எதுவும் சரியா அமையல..அதான் அம்மா இப்போ ரெண்டு பேருக்கும் சேர்த்து பார்க்கலாம், யாருக்கு முதல்ல முடியுதோ , முடியட்டும்னு சொன்னங்க. நேத்து தான் பேசிகிட்டாங்க

அப்போ கூடிய சீக்கிரமா அந்த அதிர்ஷ்டசாலி வருவானு சொல்லு!

ஹே, அதென்ன அப்போ இருந்து "அதிர்ஷ்டசாலி , அதிர்ஷ்டசாலி":னு...அதெல்லாம் ஒன்னுமில்லை..அவள் அப்படி சொல்வதை மனதுக்குள் ரசித்தாலும், வெளியில் காட்டிக்கொள்ளவில்லை

இல்லை சுரேஷ், உன்கிட்ட இவ்வளவு நாள் பழகியதிலிருந்து சொல்றேன், உனக்கு நல்ல மனசு, கோபம் வந்து பார்த்ததில்லை, ஒரு பிரச்சனையை அடுத்தவங்க இடத்திலும் இருந்து பார்க்கும் குணம், வேலையில சின்சியாரிட்டி.. ரியலி டா, ஷீ ஷ¤ட் பி லக்கி .. சற்று உணர்ச்சிவசபட்டுத்தான் போனாள்.

மீதமிருந்த சமோசா, டீயை முடித்துவிட்டு, கிளம்பினோம்..
இரவு 10.00 மணி, வீட்டில் படுத்திருந்த எனக்கு அவள் சொல்லிய வார்த்தைகள் இதமான இருந்தது... கைத்தொலைபேசி எடுத்து, "என்ன செய்கிறாய்" என்று எஸ்எம்எஸ் அனுப்பினேன்.

ரொம்ப வெயிலடிக்குது அதான் போயி வத்தல் காய போட்டுட்டு வந்தேன்.. நக்கலாக பதில் வந்தது ..

"என்ன கிண்டலா" மற்றொரு பதில் அனுப்பினேன்.

பின்ன ராத்திரி 10 மனிக்கு என்ன பன்னுவாங்க... இதென்ன கேள்வி, படுத்துட்டு இருக்கேன்டா, பதில் வந்தது.

சரி, சாயந்திரம் அதிஷ்டசாலினு சொன்னியே சுதா..,

ஆமா சொன்னேன்பா..என்ன அதுக்கு..

இல்லை.. நாம ஏன் அந்த அதிர்ஷ்டசாலியா இருக்ககூடாதுனு எப்பவாச்சும் நெனச்சிருக்கியா? எதோ ஒரு வேகத்தில் கேட்டுவிட்டேன்..

சற்று நேரம் ஏதும் பதிலில்லை

தப்பா கேட்டிருந்தா மன்னிச்சுடு, மீண்டும் ஒரு எஸ்எம்எஸ் அனுப்பினேன்.

இல்லப்பா, தப்பு இல்லை ..நாளைக்கு ஆபிஸ்ல பேசாலாமே , தூக்கம் வருதுப்பா..

குட் நைட் என்றேன்...

மறுநாள் அலுவலகத்தில் மீண்டும் ஆரம்பித்தேன். என்ன சுதா நேற்று நான் கேட்டதை தப்பா எடுத்துகிட்டியா? சாரிம்மா ..ஹே சுரேஷ் , அதெல்லாம் ஒன்னுமில்லை.. தெரியலமா.. எனக்கு இதுவரைக்கும் காதல்ன்ற என்னமே வந்ததில்லை.. கல்யாணமே கூட ஒன்னும் பெரிய விஷயமா எனக்கு படலமா.. ஏதோ வீட்ல சொல்லுவாங்க பன்னிக்குவேன்..அவ்ளோதான்.. சரி அதை விடு ..அப்புறம் ஏதோ ப்ராஜக்ட் விஷயமா சிங்கபூர் போக வேண்டியிருக்கும்னு சொன்னியே என்னாச்சு? பேச்சை மாற்றினாள்

.கன்·பார்ம்ட், பதினெட்டாம் தேதி கிளம்பனும் , இன்னும் 11 நாள் இருக்குமா..சிறுது நேரம் பேசிவிட்டு இருவரும் கிளம்பினோம்..
மொத்ததில் நாசூக்காக நான் காதலை சொன்னதைப்போலவே அவளும் நாசூக்காக மறுத்துவிட்டாள்...ஆனால் நட்பில் எந்த விரிசலும் விழவில்லை, அதுவரை சந்தோஷம்.

சிங்கப்பூர் பயணத்துக்கான வேலைகளில் நாட்கள் வேகமாக ஓடியது... நடுவிலே சுதாவிற்கு java program ல் ஒரு பிரச்சனை. குறித்த நேரத்தில் முடிக்க முடியாமல் போய்விடுமோ என என்னிடம் சொல்லி வருத்தப்பட்ட, இரண்டு நாட்கள் சனி , ஞாயிறு இருவரும் அலுவலகம் வந்து எட்டு மனி நேரம் அவளுடனேயே செலவழித்து வேலையை முடித்துக்கொடுத்தேன்

மறுநாள் கிளம்ப வேண்டும், படுக்கையில் இருந்தபடியே, எல்லாம் எடுத்து வைத்துவிட்டேனா என்று யோசனையில் இருந்தவனை எஸ்எம்எஸ் சத்தம் அழைத்தது..
சுதாவிடம் இருந்து தான், ஒற்றை வரியில், "சுரேஷ்" என்று,என்னமா? பதில் அனுப்பினேன்..நாளைக்கு இந்த நேரம் நீ ரொம்ப தூரத்துல இருப்பே இல்லையா?ஆமாம் சுதா ஒரு மாதம் இல்லயா? என்னை மறந்துடுவீயா சுரேஷ்?
ஸ்டுப்பிட்..என்ன பேத்தல் இது, எப்படி உன்னை மறப்பேன்..
ஹ்ம்ம்..என்னமோ மாதிரி இருக்குடா, பர்ஸ்ட் டைம் நம்ம நட்பு ஆரம்பிச்சு, இப்படி போறே இல்லயா?ஆமாம்மா எனக்கும்தான் கஷ்டமா இருக்கு..பட் அபிஷியல் என்ன பன்னட்டும்?சரிப்பா மணி பத்து, நீ தூங்கு, காலையில நிறைய வேலை இருக்கும்.. ட்ராவல் பன்னனும்.சரிம்மா குட்நைட்

மறுநாள் காலை அனைவருக்கும் சொல்லிவிட்டு, விமான நிலைய செக்-அப் முடித்துவிட்டு விமானத்தில் ஏறுவதற்கு காத்திருந்த நேரத்தில் மெசேஜ் வந்தது சுதாவிடமிருந்து.,.
சுரேஷ், நீ சொன்னது மாதிரி நடக்குமா..?

புரிந்துக்கொண்டபோதிலும் காட்டிக்கொள்ளாமல் பதில் அனுப்பினேன், என்ன நான் சொன்னது?

அந்த அதிர்ஷ்டசாலியா ஏன் நான் இருக்ககூடாது சுரேஷ், பதில் வந்தது..
சந்தோஷமாக இருந்தது..
வெறுமனே பை, டேக் கேர்மா மெசேஜ் அனுப்பிவிட்டு செல்போனை அனைத்தேன்..
சுதாவை விட்டு பல மைல் தூரம் கடல் தாண்டி வந்துவிட்டேன்..
எஸ் எம் எஸ் தொடர முடியவில்லை என்ற போதிலும்.. எங்கள் அலுவலகத்தில் உள்ள இன்டர்னல் சாட்டிங் சிஸ்டம் மற்றும் மின்ஞசல் மூலம் தொடர்பு கொண்டோம்..
சுதாவிடம் இருந்து ஒரு நாள் தொலைப்பேசி வந்தது...
ஷேம நல விசாரிப்புகள் முடிந்து, விஷயத்துக்கு வந்தாள்..
சுரேஷ், என் கடைசி எஸ்எம்எஸ் க்கு நீ எதுவும் சொல்லலயே..
என்ன சொல்றதுனு தெரியலயே..
ஏன்? நீ தானே ஆரம்பிச்சு வெச்சே.. நேரடியாக கேட்டாள்..ஓ! அப்போ உனக்கே அது தோனல..நான் கேட்டதாலே. வந்ததா .. ?
ஏ..அப்படி இல்லை..எனக்கும் இருந்திருக்கும்னு நினைக்கிறேன்..
ஆமா சுதா மனசுல தோனுச்சு சொல்லிட்டேன்.. அப்புறம் யோசிச்சா...தங்கச்சி இருக்கா ..என்ன பன்றதுஇதெல்லாம் சரியா வருமானு இருக்கு.. ஒன்னுமே புரியலை..
அப்போ நீ இல்லைனு சொல்லிட்டேனு எடுத்துக்கவா? பாவமாக கேட்டாள்..
இல்ல இல்லைமா, சுதா, இல்லைனு சொல்ல முடியல..அதே நேரம் எப்படி இது நடக்கும்னு தெரியல..என்னமோ மாதிரி இருக்குமா..
சரி , யோசிச்சு சொல்லுப்பா..சற்று நேரம் பேசிவிட்டு தொலைப்பேசியை துண்டித்தோம்..
பார்காமலே காதல், நாக்கறுத்த காதல், மூக்குடைத்த காதலுக்கிடையில், ஐ லவ் யூ சொல்லாமல்..கடிதம், ரோஜா தராமல்.. மெல்ல ஒரு காதல் ஆரம்பித்திருந்தது...
பனி முடிந்து, சென்னை வந்தேன்..
முன்பெல்லாம் இரண்டு நாளைக்கு ஒரு முறை சந்தித்துக்கொண்டவர்கள், இப்போது ஒரு நாளைக்கு மூன்று முறை சந்தித்து கொள்ள காரணத்தை ஏற்படுத்திகொண்டோம்..
என் மனது மட்டும் நிலையாக இல்லை.. குரங்கு மனசு என்றால் என்ன என்பது அப்போதுதான் புரிந்தது..
இது நடக்குமா, நிச்சயமா வீட்ல ஒத்துக்க மாட்டாங்க .. தங்கை வேற கல்யாண வயசுல ... என்ன பன்றது சுதாவை ஏமாத்தற மாதிரி இருக்குமா... இல்லை வேண்டாம்னு சொல்லிடலாமா? அதற்கும் மனசு வரலயே.....
ஓவ்வொரு முறை பேசும்போதும் அவள் கேட்பதும் , நான் குழப்பமாக பதில் சொல்வதும்..இப்படியே போனது..
ஒரு முறை அப்படி பேசும் போது..
என்ன சுரேஷ்..நீ எனக்குத்தானே? நேரடியாக கேட்டாள்..என்ன சொல்றதுனு தெரியலயே சுதா ..உங்க வீட்ல ஒத்துப்பாங்களா? கேட்டேன்இல்லைப்பா ஒத்துக்க மாட்டாங்க..ஆனா எனக்கு நீ வேணுமே, கனவனாக... நீ மட்டும் சரினு தெளிவா சொல்லிட்டா , நான் எங்க வீட்ல கேட்பேன்... ஆனா உன் கிட்ட இருந்தே சரினு பதில் வரலயே..
இப்படியே மூன்று மாதங்கள் ஓடிபோனது..
ஒரு வெள்ளிகிழமை பேசினோம், சரி சுதா நான் ஞாயிற்றுகிழமை எங்க வீட்ல பேசிடறேன்.. சரிப்பா, மிகவும் மகிழ்ந்து போனாள்..
முதல் முறையாக ஐ லவ் யூ சொன்னேன்.. மீ டு, அவளும் சொன்னாள்..
இருவருமே அன்று மாலை நடக்கபோவதை அப்போது அறியவில்லை..
வீட்டிற்கு வந்தேன்.. மணி 9.30, வழக்கமாக 7.30 மனிக்கெல்லாம் வீட்டுக்கு வரும் கீதா இன்னும் வரவில்லை.. அனைவரும் பதட்டமாகி போனோம்..
எங்கெல்லாமோ தேடியும் 11.30 மனிவரை எந்த செய்தியும் இல்லை..
11.45 ஒரு போன், யாரோ ஒருவன் பேசினான்... கீதாவும் நானும் நான்கு மாதங்களாக காதலித்தோம்,. நீங்க ஒத்துக்கமாட்டீங்கனு தெரியும்.. அதனால், மதியம் ஒரு கோவிலில் திருமணம் செய்துக்கொண்டோம்..
தொலைப்பேசி துண்டிக்கப்பட்டது..

வீடே சூனியம் பிடித்தது போலாகியது.. உறவினர்கள் வந்தனர்.. விசாரித்ததில் மறுநாள் கீதா இருக்குமிடம் தெரிந்தது.. போய் பேசி பார்த்தோம் ..வரவே முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டாள்..

மகளே இல்லை என உதறிவிட்டு அப்பா அம்மா இருவரும் வந்துவிட்டனர்..

அதே கவலையில் அம்மாவிற்கு உடல் நலக்குறை ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்த்தோம்..

இரண்டே நாளில் என்னவெல்லாமோ நடந்துவிட்டது..

இரண்டு நாட்கள் லீவு எடுத்துவிட்டு , அம்மா கொஞ்சம் தேறி வீட்டுக்கு வந்ததும் அலுவலகம் வந்தேன்..
இடையிலே சுதாவிடமிருந்து போன் வந்தது..

அவசர வேலையாக சேலம் போகிறேன்..வந்து சொல்கிறேன்.. பொய் சொன்னேன்.... வீட்ல பேசிட்டியா என்ற கேள்விக்கு கூட, வந்து சொல்கிறேன் என கூறிவிட்டேன்

புதன்கிழமை இருவரும் தனியாக சந்திதோம்.என்னப்பா ஆச்சு, எனி ப்ராப்ளம்? முகமே சரியில்லையே... என்னப்பா.. ஒத்துக்கலயா?? திட்டுனாங்களா??

என்னை சகஜத்திற்கு கொண்டு வரவா அல்லது ஆழம் பார்க்கவா தெரியவில்லை, அடிக்கடி கேட்கும் அந்த இரண்டு கேள்விகளை கேட்டாள்
நான் யார் செல்லம்? நீ யார் செல்லம்.. ?

மற்ற நேரங்களில் சொல்வது போல "என் செல்லம்" "உன் செல்லம்" என்று சொல்லாமல் அவளை பார்த்தபோதே, புரிந்துக்கொண்டாள்
என்ன ஆச்சு, எதுவா இருந்தாலும் சொல்லு..
அனைத்தையும் சொல்லி முடித்தேன்.. கடைசியாக அம்மா என்னை அழைத்து , அவ தான் குடும்ப மானத்தை வாங்கிட்டா.. நீ அப்படி எதுவும் செய்ய மாட்டேனு தெரியும்.. இருந்தாலும் கேக்கறேன்பா.. என் தலைல கை வெச்சு சத்தியம் பன்னு , அப்படி எதுவும் பன்ன மாட்டேனு.. வேறு வழி தெரியாமல் சத்தியம் செய்ததையும் சேர்த்தே சொல்லி முடித்தேன்..
அவள் கண்கள் கலங்கிபோனது, மனதை போலவே..

4 நாட்கள் கழித்து சற்று தெளிந்த பிறகு,

என்னப்பா, நிச்சயமா நடக்காதா? சுதா தான் ஆரம்பித்த்தாள்..

தெரியலமா..என்ன பன்னட்டும்...?
அம்மாவ நினைத்தா..ஏற்கனவே உடம்பு முடியாக இருக்காங்க..சுதா, தன் பொன்னு இப்படி பன்னிட்டாளேனு நினைச்சு அம்மா இப்படி ஆயிட்டாங்க..அதே மாதிரி தானே aunty க்கும் இருக்கும்..

ஆமா சுரேஷ்..என்னப்பா பன்னலாம்..நீயே சொல்லுமா...இல்லப்பா நீ சொல்லு..

எனக்கு என்னமோ இது நடக்காதுனு படுது சுதா...அப்போ உங்க வீட்ல பாக்கற பொன்னை..இழுத்தாள்

இல்லைமா எப்படி முடியும் என்னால? உன்னால முடியுமா??என்னை ஒரு மாதிரி பார்த்தாள்..
நிச்சயமா இப்போ போய் வீட்ல இதல்லாம் சொல்ல முடியாது .. அதே நேரத்துல வேற கல்யானமும் பன்னிக்க முடியாது.. இப்படியே கல்யாணம் பன்னிக்காம கடைசி வரைக்கும் இருந்திடலாமா?

தலையாட்டினாள்.........

அன்றோடு அடிக்கடி பார்த்துக்கொள்வதெல்லாம் நின்று போனது....

மூன்று மாதத்தில் எனக்கு வேறொரு கம்பெனியில் வேலை கிடைத்து , இந்த வேலையை ராஜினாம செய்துவிட்டு சென்றேன்.. கடைசியாக அவள் என்னிடம் சொன்னது "என்னை மறந்துடாதே சுரேஷ்.."

இரண்டு மூன்று மாதங்கள் அவளோடு மின்னஞ்சல், தொலைப்பேசி மூலம் தொடர்பிருந்தது..,பின்பு அதுவும் நின்று போனது..

ஒரு வருடத்துக்கு பிறகு என் நன்பன் மூலம் அவளுக்கு திருமணமான விஷயம் தெரிந்துக்கொண்டேன்..

மீண்டும் நிகழ்காலத்திற்கு வந்தேன்..
கண்கள் கலங்கி இருந்தது...

இதோ நான் சற்று முன்பு பார்த்த பெண் .. அவளே தான்...சுதா ..சுதாவே தான்...
பார்க்கலாமா , வேண்டாமா என்று நான் யோசித்துக்கொண்டிருக்கும் போதே அவளும் என்னை பார்த்துவிட்டாள்..
அருகில் வந்தாள்.. என்ன பேசுவதென்றே தெரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தோம்...அவள் தான் ஆரம்பித்தாள் ... எப்படி இருக்கே சுரேஷ்.....??ஹ்ம்ம்.. நீ??இருக்கேன் ..

என்னங்க இங்கே வாங்க.. சற்று தள்ளி நின்று யாரோடோ பேசிக்கொண்டிருந்தவரை அழைத்தாள்...

இது என் ·பிரண்ட் சுரேஷ், சுரேஷ் இவர் என் கனவர் ஸ்ரீராம் , அறிமுகப்படுத்தி வைத்தாள்.. அவரும் இரண்டு வார்த்தை பேசிவிட்டு , சுதா பேசிட்டு இரு நான் அவரை அனுப்பிட்டு வரேன்.. என்னிடமும் எக்ஸ்க்யூஸ் கேட்டுக்கொண்டு, ஏற்கனவே பேசிக்கொண்டிருந்தவரை நோக்கி நடந்தார்...

கல்யாணம் .......... ? இழுத்தாள் இல்லை என்பது போல தலையாட்டினேன்..
கீதா.......?ஹ்ம்ம்..நல்லா இருக்கா.. போன மாசம் தான் கொழந்தை பொறந்தது..வேற என்ன
பேசுவதென்று புரியாமல் மெளனமாகவே இருந்தோம்... இருவர் கண்கள் கலங்கி இருந்தது இருவருக்கு மட்டுமே தெரிந்தது...

அதற்குள் ஸ்ரீராம் வந்தார்.. சற்று நேரம் என்னிடம் பேசிவிட்டு.. , இருவரும் விடைப்பெற்றுக்கொண்டனர்..ஒரு நாள் வீட்டுக்கு வாங்க சுரேஷ்... ஸ்ரீராம் அழைத்தார்... சரிங்க என்றேன்..

மெதுவாக நடந்து கோயில் வாசலை நோக்கி வந்தேன்

கீதாக்கு குழந்தை பிறந்ததை சொன்னேனே, அப்பவே எனக்கு அடுத்த வாரம் நிச்சயதார்த்தமுனு சொல்லியிருக்கலாமோ????

சொல்லாம விட்டது நல்லதா?? தப்பா?? மனதிற்க்குள் போராட்டம்..

திரும்பிப்பார்த்தேன் .. அமைதியே உருவான முகத்தோடு சிரித்துக்கொண்டிருந்தார் முருகர்...

(வார்த்தைகள் - 1976)

சிறுகதை - மாயவரத்தான்

சென்னை மந்தைவெளி பேருந்து நிறுத்தம். மாலை சுமார் 5.30 மணி..
ஐயா, வணக்கமுங்க.. இந்த விலாசத்துக்கு எப்படி போவோனுங்க?

குரல் கேட்டு, வெகு சுவாரஸ்யமாக அப்போது தான் பார்த்துவிட்டு வந்த திரைப்படத்தை பற்றி அலசிக்கொண்டிருத்த இரண்டு இளைஞர்களும் எரிச்சலாக திரும்பிப்பார்த்தார்கள்..

கையில் கசங்கிய காகிததுண்டுடன் அந்த பெரியவர் நின்றுக்கொண்டிருந்தார்..கலைந்த தலை, மெல்லிய கூன் விழுந்த தேகம், கறுத்த நிறம், பழுப்பேறிய வேட்டி, சட்டை, தாடி , மீசையுடன் பார்பதற்கே சற்று முகம் சுளிக்கும்படி தான் இருந்தார்.. கையில் ஒரு மஞ்ச கலர் துனிப்பை... வெற்றிலை கரையேறிய பற்கள் தெரிய சிரித்தவாறே "இந்த வெலாசம் எங்க இருக்கு தம்பி..."

வேண்டா வெறுப்பாக, குடு இப்படி என்று துண்டு சீட்டை வாங்கி பார்த்த இருவரில் ஒருவன்,

என்னய்யா இது ஈரமா, பாதி எழுத்து அழிஞ்சு போயிருக்கு, தெரு பேர கானோம், சைதாப்பேட்டைனு மட்டும் இருக்கு..,... தண்ணில போட்டுடியா??

இல்லை தம்பி, பஸ்ல வந்த கசகசப்பு, வேர்வைல நெனஞ்சு போச்சுப்பா..

அவர் செல்லி முடித்த அடுத்த நொடியில், வலது கையிலிருந்த காகித துண்டை இடது கைக்கு மாற்றிக்கொண்டான். மேலும் ஒரு முறை பார்த்துவிட்டு, அவரிடமே திருப்பி கொடுத்தான்.. திருப்பி கொடுத்தான் என்பதை விட , அவர் மேல் வீசினான் என்று தான் சொல்ல வேண்டும்..

சொல்லுப்பா, எப்படி போவனும்? ஒரு மைல் தூரம் இருக்குமா? அப்பாவியாக கேட்டார்.

ஹ்ம்ம்ம்.. ஒரு மைல் தூரமில்லை, ரெண்டு சேவல் தூரம் போகனும்.. நக்கலடித்து விட்டு சிரித்தான்..கூட இருந்தவனும் சேர்ந்துக்கொண்டான்..

அவர்களின் நையாண்டியை கூட புரிந்துகொள்ளாமல், பதிலுக்காக காத்திருந்தார் பெரியவர்...

எந்த ஊருயா நீ? சைதாபேட்டைல இருக்க தெருவுக்கு மந்தைவெளில வந்து விசாரிச்சு உயிரை வாங்குற..

மாயவரம் பக்கம் தம்பி.. ஒரு சின்ன கிராமம்..

ஆமா, ஆமா , நீ இருக்க லட்சனத்துக்கு சின்ன கிராமத்துல இல்லாம, போயஸ் கார்டன்லயா இருப்பே??மூஞ்சி , மொகரைய பாரு.. எப்படிய்யா இங்கே வந்தே??

கோயம்பேடு வந்து எறங்கி ஒரு தம்பிய கேட்டேன்..அந்த தம்பி தான் ஒரு பஸ்ல ஏத்திவுட்டுச்சு.. இங்கே வந்துட்டேன்..

யோவ், பஸ் சைதாப்பேட்டை வந்தப்ப என்ன பன்னிட்டு இருந்தே?? எறங்கி தொலச்சி இருக்க வேண்டியது தானே..

தெரியலயேப்பா.. ஒடம்பு வலி...அப்டியே கண்ணு அசந்துட்டேன்..

நல்ல ஆளுயா நீ.. அப்படி ஓரமா நில்லு, சைதாபேட்டைனு போட்டு பஸ் வரும்..ஏறிப்போ..

சரிப்பா, ரொம்ப நன்றி... அமைதியாக நின்றார் பெரியவர்...

இருவரும் மீண்டும் திரை விமர்சனத்தை தொடர்ந்தனர்...தம்பி , மீண்டும் இடைமறித்தார்..

என்னய்யா ரோதனையா போச்சு உன்கூட..என்ன வேணும்? டீ சாப்பிட 2 ரூ வேணுமா???தம்பி,

சாமி புன்னியத்துல காசு கொஞ்சம் இருக்குப்பா... அது வேணாம்..

ஆமா, இவரு ரிஸர்வ் பேங்க் கவர்னர்.. நக்கலடித்தான்.. சரி என்ன சொல்லு...

எழுதப்படிக்க தெரியாதுப்பா, கொஞ்சம் சைதாப்பேட்டை பஸ் வந்தா சொல்லுங்கப்பா...

ஆமாய்யா, மாயவரத்து பக்கத்து கிராமத்துல இருந்து ஒரு மஞ்ச பைய தூக்கிட்டு வர காட்டானுங்களுக்கு வழி சொல்லி பஸ் ஏத்திவிடத்தான் இவன் மந்தைவெளியிலும் , நான் அன்னா நகர்லயும் இருக்கோம் பாரு....

தம்பி, கொஞ்சம் தயவு பன்னுங்கப்பா..

யோவ், இப்ப எதுக்கு நீ அங்கே இருந்து இவ்ளோ தூரம் இங்கே சென்னைக்கு வந்தே... நீயெல்லாம் வரலைனு சென்னை அழுதுச்சா?? வந்துடறானுங்க பாரு ஒரு மஞ்ச பைய தூக்கிட்டு, குளிப்பானுங்களோ , மாட்டானுங்களோ.. அழுக்கு துனிய போட்டுகிட்டு... பட்டிக்காட்டானுங்க..
மானம் பாத்த பூமி , மழை இல்லாம பட்டுப்போச்சுய்யா.. அறுப்பு இல்ல, கழுனி வேலையுமில்ல..வவுறு காயுது.. எங்க பிரசிடென்ட் ஐயா தான் மெட்ராஸ்ல கல்லு ஒடைக்கற வேலை இருக்கு போய் பொழச்சிக்கோடனு வெலாசம் கொடுத்து அனுப்பி வெச்சார்... பொறுப்பாக பதில் சொன்னார்...

அவர் சொல்லியதை இவர்கள் காதில் வாங்கியதாகவே தெரியவில்லை.. அவர்கள் கவனமெல்லாம் சாலையை கடக்க எதிர் பக்கத்தில் நின்றுக்கொண்டிருந்த அந்த இரண்டு நவநாகரீக காலேஜ் பெண்கள் மீதே இருந்தது...

டேய் மாப்ளே, அங்க பாருடா ரெண்டு சூப்பர் ·பிகர் வருது.. அந்த மஞ்சள் சுடிதார் சூப்பர்டா ..டேய் அதவிட பச்சை டீ சர்ட், ஜீன்ஸ் போட்டிருக்காளே அவ சூப்பர்டா... பஸ் ஸ்டாப்புக்கு தான் வராங்கடா... கவர் பண்ணமுடியுதானு பாரு...

தம்பி... பஸ் வந்தா... பெரியவர் இடைமறித்தார்...

அட, இந்தாளு வேற .. யோவ்..அப்படி ஓரமா போயி நில்லு வந்தா சொல்றேன், ஏறிப்போ... போயா..கொஞ்சம் தூர போய் நில்லு.. தொன தொனனு அறுக்காத .. புரியுதா..

டேய் இன்னும் கொஞ்சம் தூர போய் நிக்க சொல்லுடா அந்தாள.. பிகருங்க வர நேரத்துல அவன் பக்கத்துல நின்னு பேசிட்டு இருந்தா நம்ம இமேஜ் என்ன மச்சி ஆகறது... மந்தைவெளிகாரன் எரிச்சலோடு சொன்னான்..

இரண்டு பெண்களும் ஒரு வழியாக சாலையை கடந்து வந்து , இவர்களுக்கு ஒரு 10 அடி தள்ளி நின்றார்கள்...

இருவரில் ஒருவன் சீப்பை எடுத்து தலை சீவிக்கொண்டான், மற்றொருவன் ஒரு படி மேலே போய் பாக்கெட்டில் இருந்த கருப்பு கண்ணாடியை எடுத்து மாட்டிகொண்டான்...

மாப்ள, ஒரு தம் போடலாமாடா.. ஸ்டைலா ஒரு தம் போட்ட சூப்பரா இருக்கும்டா.. நிச்சயம் நம்மள பார்பாளுங்க... என்ன சொல்ற...

எதிர் திசையில் இருந்த பெட்டிக்கடைக்கு சென்று சிகரெட் வாங்கி பற்றிவைத்து புகை விட்டார்கள்...aனால் இந்த பெண்கள் தான் அவர்களை கண்டுக்கொண்டாதாகவே தெரியவில்லை...
அதுவரை வேறொரு திசையில் பார்த்துக்கொண்டிருந்த பெரியவர் இந்த பக்கம் திரும்பி அவர்கள் இல்லாததை கண்டு திகைத்துப்போனார்.. இப்போ யாரை கேட்பது என்று சுற்றுமுற்றும் பார்த்தவர் கண்களில் அந்த பெண்கள் பட்டனர்..
அருகே சென்றார்..

தாயி, கொஞ்சம் சேதாபேட்டை பஸ் வந்தா சொல்லுங்க தாயி.. பாவமாக சொன்னார்

இரண்டு பெண்களும் அவரை ஏற இறங்க பார்த்துவிட்டு, ஏதும் சொல்லாமல் சற்று தள்ளி நின்றனர்..

பெரியவர் சற்று நெருங்கி..அம்மாடி கண்ணுங்களா படிக்கத்தெரியாதாவன்மா ..ஒத்தாசை பன்னுங்கம்மா.. கெஞ்சும் தொனியில் கேட்டார்.

ஒ ! காட், வாட் இஸ் திஸ் நியூசன்ஸ், ஹைலி இர்ர்ரிடேட்டிங் யா... நுனி நாக்கு ஆங்கிலத்தில் வெளுத்து வாங்கினாள் ஜீன்ஸ் போட்டவள்...

யெஸ், இதுக்கு தான் ஆட்டோல போலாம்னு சொன்னே.. கேட்டியா , அந்தாளு மூஞ்சியும் , துனியும், கொமட்டிட்டு வருதுடி.. ·பீல் லைக் வாமிட்டிங், யூ நோ !! ஒத்து ஊதினாள் சுடிதார்..

இன்னமும் அவர்கள் பதிலுக்கு காத்திருந்தார் பெரியவர்...

கொஞ்சம் கூட நாகரிகம் இல்லாம, சே.. இதுக்கு தான்யா இந்த வில்லேஜ் ஆளுங்கள சிட்டிக்குள்ள வர கவர்மெண்ட் தடை போடனும்.. பேசிக்கொண்டே இன்னும் சற்று தள்ளிப்போய் நின்றுக்கொண்டனர்...

டேய்! அங்க பாருடா அந்த நாட்டுபுறத்தான் அந்த பிகருங்கள பிடிச்சிக்கிட்டான்.. நல்ல வேணும் அதுங்களுக்கு.. இவ்ளோ ஸ்மார்ட்டா ரெண்டு பேரு லுக் விட்டுட்டு இருக்கோம்.. நம்ம பக்கமே திரும்பாம...நக்கல் புடிச்சவளுங்க...நல்லா வேனும்... அல்ப சந்ஷோசம் அடைந்தார்கள் அந்த இரண்டு இளைஞர்கள்..

பெரியவர் அங்கிருந்த மேலும் நாலைந்து பேரிடம் கேட்டு பார்த்தார்...
யோவ் தூர போயா,

தள்ளி நில்லுயா வந்தா சொல்றேன்,

கழுத்தறுப்பு... நானே அண்ணா நகர் பஸ் எப்பவரும்னு தெரியாம நிக்கறேன்,

பெரிசு, ஒதுங்கி நில்லு... வந்தா சொல்லுவாங்க..

இப்படிபட்ட பதிலே வந்தது.... பாவமாக சற்று ஒதுங்கி நின்றார்.. யாரவது சொல்லுவார்கள் என்ற நம்பிக்கையில்...


ஒரு பேருந்து வந்து நின்றது... அது சைதாப்பேட்டை போகுமா? பெரியவர் தவித்துப்போய் விட்டார்
ஐயா இது போவுமா, போவுமா அனைவரிடமும் கேட்டுப்பார்த்தார்.....பதில் வரவில்லை..

அனைவரும் அந்த பேருந்தில் ஏறுவதிலும்.. பின்னால் வரும் அடுத்த பேருந்தை நோக்கி ஓடுவதிலேயே குறியாக இருந்தார்கள்..

பெரிசு, இது போவாது இது அன்னா நகர் போது... அதோ பின்னாடி வருது பாரு அது போவும் ..போ .. யாரோ ஒருவர் சொல்லிவிட்டு முதல் பேருந்தில் ஏறினார்...

பெரியவர் பின்னால் நிற்கும் இரண்டாவது பேருந்தை நோக்கிச்சென்றார்...

ஜீண்ஸ¤ம், சுடிதாரும் கூட முதல் பேருந்தில் ஏறி ஜன்னலோரும் இருக்கையில் அமர்ந்தார்கள்..

இளைஞர்களும் சுறுசுறுப்பானார்கள், டேய் உனக்கு பஸ் வந்தாச்சு... ·பிகருங்க கூட அதுலதாண்டா ஏறுதுங்க .. போய் ஏறு .. என்ஜாய் பன்னு,

சரிடா அப்புறம் நான் கிளம்பறேன்... நாளக்கு காலைல மறக்காம வீட்டுக்கு வா..

டேய் மாப்ள சீக்கிரம் ஓடுடா வண்டிய எடுத்துட்டான்... சொல்லிக்கொண்டே , பக்கத்து சந்தில் சென்று மறைந்தான் ஒருவன் மந்தைவெளிகாரன்...

ஓடி வந்தவன் ஜன்னல் கம்பியை பிடித்து ..லாவகமாக வலதுகாலை படிக்கட்டின் நுனியில் வைக்கவும், டிரைவர் ஆக்ஸிலேட்ரை வேகமாக மிதிக்கவும்.. எதிர்பாராதவிதமாக கால் இடறி அவன் கீழே விழ .. ஒரு சில மனித்துளியில் அனத்தும் நடந்துவிட்டது.....
கீழே விழுந்தவன் உருண்டு போய் ஓரமாக இருந்த ஒரு பாறையில் தலை மோதி, நினைவிழந்து கிடந்தான்.. பின்னந்தலையில் அடிபட்டு ரத்தம் வழிந்துக்கொண்டிருந்தது...
நிறுத்ததில் இருந்து ஒரு இருவது அடி தள்ளி முதல் பேருந்து சடன் பிரேக் அடித்து நின்றது .. இரண்டாவது பேருந்தும் பின்னாலேயே நின்றது..

கூட்டம் கூடிவிட்டது...
மூச்சிருக்கா பாரு ,

போலிஸ் கேஸ் ஆக போதுப்பா.. பாத்து..

அய்யோ , யாரு பெத்த புள்ளயோ.. பாவம்...

இவனுங்க எல்லாம் இப்படித்தான் பா, வண்டி நிக்கற வரைக்கும் ஸ்டைலா பாக்க வேண்டியது.. கிளம்பின உடனே வந்து ஏறவேண்டியது..ஹீரோனு நினைப்பு...

உயிர் இருக்குய்யா, கொஞ்சம் தள்ளுங்கப்பா...காத்து விடுங்க..

பல விதமான குரல்கள் வந்த வண்ணம் இருந்தது...

யாராச்சும் ஒரு துணி இருந்தா குடுங்கப்பா ... தலைல ஒரு கட்டு போட்டு கொஞ்சம் ரத்ததை நிறுத்தலாம்.. யாரோ ஒருவர் சொல்ல .. அவரவர் மற்றவரை பார்த்தார்கள்..யார் தருவார்கள் என்று..

ஒருவன் தன் கைக்குட்டையை நீட்டினான்.. ஏம்ப்பா , இதை வெச்சி கட்டி பிரயோஜனமில்லை... கொஞ்சம் பெரிய துனியா வேனும்..

முதல் பேருந்தின் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்த ஒருத்தர்... ஏம்மா அந்த மஞ்ச துப்பட்டாவ கொஞ்சம் குடும்மா...

கேட்காதது போல், வெடுக்கென முகத்தை திருப்பிக்கொண்டாள் மஞ்ச சுடிதார்..

சரி சரி ஏறுங்கப்பா..நாம கிளம்பலாம்... மணியாச்சு ... ஆறு மணிக்கெல்லாம் வடபழனி டிப்போ போகனும்..ஏற்கனவே லேட்டு... இரண்டாவது பேருந்து கண்டக்டர் குரல் கொடுத்தார்...

யோவ், பெரிசு.. எங்க எறங்கி போற?? சைதாப்பேட்டை தானே கேட்ட ..ஏறு, ஏறுய்யா... அடுத்த பஸ் எப்போ வரும்னு தெரியாது.. லேட்டாகும்... ஏறு...யோவ்.... கண்டக்டர் குரல் கொடுக்க அதை காதில் வாங்காமலேயே இறங்கினார் பெரியவர்...

அடிப்பட்டவனுக்கு அருகில் வந்தார்.. இன்னமும் ரத்தம் வழிந்துக்கொண்டிருந்தது..

இந்தாங்கய்யா.. இதை வெச்சி கட்டி அந்த ரத்ததை கொஞ்சம் நிறுத்துப்பா... மஞ்ச பையில் வைத்திருந்த ஒரே வேட்டியை எடுத்து நீட்டினார் அந்த பெரியவர்...

என்னய்யா புதுசா இருக்கே?? யாரோ ஒருவன் கேட்டான்..

ஆமாங்க, நாளைக்கு மொத தடவையா வேலைக்கு போறப்ப கட்டிக்கலாமுனு நல்லா தோச்சி , இஸ்திரி போட்டு எடுத்துட்டு வந்தேன்யா... பரவல்ல... நான் பாத்துகறேன்.. நீ கட்டுய்யா..ரத்தம் நிக்கட்டும்... கட்டுபோட்டு ஆஸ்புத்திரி தூக்கிட்டு போங்கப்பா.. பாவம் , யாரு பெத்த புள்ளயோ... கொஞ்ச நேரம் முன்னாடி என்கிட்ட கூட நல்லா பேசிட்டு இருந்துச்சு... இப்போ...இப்படி ஆயிபோச்சே. தாயி மகமாயி அந்த புள்ளய காப்பாத்தி குடுதாயி.... வேண்டிகொண்டே பேருந்து நிறுத்தம் நோக்கிச் சென்றார்..

வேட்டி சுத்தமாக இருந்தது, அந்த மாயவரத்தானின் மனசு போலவே!!

சாமி, சைதாபேட்டை போற பஸ் வந்தா கொஞ்சம் சொல்லுப்பா..எழுத படிக்க தெரியாது....வேறு யாரிடமோ அந்த பெரியவர் கேட்பது காதில் விழுகிறது ......................

சிறுகதை - முகமூடி

புதியதாக வாங்கிய ஹோன்டா சிட்டியை நிறுத்திவிட்டு, வீட்டினுள் நுழைந்தான்.

படபடப்புடன் அவன் மனைவி ஓடி வந்தாள்..என்னங்க ! என்னங்க !!.. பதட்டத்துடன் அழைத்தாள்

என்ன ஆச்சு சரளா , என்ன இவ்ளோ பதட்டமா இருக்கே?

உங்க தங்கச்சிய என்னனு கேளுங்க.. படபடப்பு மாறாமல் சொன்னாள்..ஏன் என்ன அச்சு

இப்போ , சொல்லுடி என்ன ஆச்சு ?? ...

அவளை இன்னைக்கு சாயந்திரம் தி.நகர் ல ஒரு ரெஸ்டாரண்டல பார்த்தேங்க, யாரோ ஒரு பையனோட,அவங்க பேசிட்டு இருந்ததை பார்த்தா எனக்கு சந்தேகமா இருந்தது..வீட்டுக்கு வந்து விசாரித்து பார்த்தாகாதல் னு சொல்றா.. மூச்சை நிறுத்தாமல் சொல்லி முடித்தாள்..

தேவி, சற்று அதிகப்படியாகவே சத்தம் போட்டு தன் தங்கையை அழைத்தான்..

மாடியறையில் இருந்த தேவி, தயக்கமாக வந்து நின்றாள்... ஏதும் பேசவில்லை..

உங்க அண்ணி என்னமோ சொல்றாளே என்னது அது?

இல்லைனா அது வந்து.. வந்து...தேவி மென்று விழுங்கினாள்

வந்து ,போயி எல்லாம் வேண்டாம்..என்ன விஷயம்னு சொல்லு, எரித்துவிடும் பார்வை பார்த்துக்கொண்டே கேட்டான்.

வந்து...அவர் பெயர் சுந்தர், என் கூட காலேஜ்ல படிக்கறார், ரொம்ப நல்லவர், பி இ., இறுதியாண்டு, ஏற்கனவே கேம்பஸ் இண்டர்வியுல ஒரு மிக பெரிய நிறுவனத்துல தேர்வாகிட்டாரு.. இன்னும் 6 மாசத்துல கை நிறைய சம்பாதிப்பார்னா...வேக வேகமாக சொல்லிமுடித்தாள்

நம்ம அளவுக்கு வசதியான குடும்பமா???

அப்படி இல்லைனா, ஆனா நல்லா சம்பத்திச்சு வசதியா வந்துடுவாருனா..எனக்கு நம்பிக்கை இரூக்கு..

எந்த ஊரு பையன்??

இங்க தான்னா..மெட்ராஸ்ல, கே கே நகர் ல இருக்காரு....

என்ன சாதி ?

"............." சாதி வகுப்பை சார்ந்தவர்னா அவர்..

"........." சாதியா?? நாம என்ன சாதினு தெரியுமா உனக்கு???? நம்ம சாதிய விட மதிப்புல குறைஞ்சது அந்த சாதினு தெரியுமா உனக்கு?
இல்லைனா வந்து , ரொம்ப ரொம்ப நல்லவர்னா... அவரைத்தான் கல்யாணம் பண்ணிக்கப்போறேன்னா.. ஒரு வருஷமா நாங்க ரொம்ப சின்ஸியரா.. அவள் முடிக்கும் முன்பே.....

அடி செருப்பால, என்ன தைரியம் உனக்கு..என்கிட்டயே இப்படி பேசுறியா?? எங்கே இருந்து வந்துச்சு இவ்ளோ தைரியம்..?? சாதி விட்டு சாதி மாத்தி கல்யாணம் பண்ணி கொடுத்தா என் கவுரவம் என்ன ஆகறது.. மரியாதையா சொல்றேன் கேட்டுக்கோ..காதல் , கத்திரிக்கா எல்லத்தையும் மூட்டைகட்டி வெச்சிட்டு, ஒழுங்கு மரியாதையா இருந்துக்கோ..இல்லை காலேஜும் வேண்டாம் ஒரு எழவும் வேண்டாம்..வீட்ல இரு.. சீக்கிரமே நம்ம சாதில ஒருத்தனை பாக்கறேன்..கழுத்த நீட்டு.... மூச்சு விடாமல் சொல்லி முடித்தான்..

இல்லனா, அவர் தான்.. முடிவு பண்ணிட்டேன்னா ..அவள் முடிக்கும் முன்னரே ஆக்ரோஷமாக கத்தினான்வெட்டி போட்டுறுவேன் ரெண்டு பேரையும்..தெரியும்ல உன் அண்ணனை பத்தி உனக்கு..

அண்ணா, நா சொல்றதை கொஞ்சம்.............................

ஒரு மயி.... கேக்க முடியாது...சரளாஆஆஆஆ ... அடித்தொண்டையில் இருந்து கத்தினான்.... அருகில் ஓடி வந்த சரளாவை பொலேரென அறைந்தான்.. என்னடி பன்ற வீட்ல.. 1 வருஷமா இந்த பொட்ட நாயி ஊர் மேயுது... இது தெரியாம........ உன்னை வெட்டுனா சரியாபோயிடும்..
இதோ பாரு...நீ இனிமே காலேஜுக்கு போக வேண்டாம்.. அடுத்த மாசமே உன் கல்யாணத்துக்கு ஏற்பாடு பன்றேன்...

முடியதன்னா.. நான் அவரை தான் கல்யா.....அவள் முடிக்கும் முன்பே பளாரென உதை,

கன்னத்தில் அறை விழுந்தது.. "................ அம்மா , அப்பா இல்லாத பொன்னுன்னு கொஞ்சம் செல்லமா வளர்த்தா இவ்ளோ தூரத்துக்கு ஆகிட்டியா நீ" என்ன நெஞ்சழுத்தம்டி உனக்கு.. போடி உள்ளே.. முடியை பிடித்து இழுத்து சென்று ஒரு அறையில் தள்ளி கதவை சாத்தினான்..

ஜன்னல் வழியாக அவளை பார்த்து உறுமினான்.. பேரு என்ன சொன்னே... சுந்தரு தானே.. இறுதியாண்டு...நாளைக்கு காலைல அவனை கால் வேற , கை வேறயா பிரிச்சு ஆஸ்பத்திரில படுக்க வெக்கறேன் பாரு..

உடனடியா தொலைபேசி எடுத்து நம்பர் சுழற்றினான்..

"..டேய் சந்தானம், நான் தான் பேசறேன்... அஞ்சு லட்சம் ஹாட் கேஷ் வாங்கிகோ... சுந்தர்னு பேரு... டி எஸ் ஆர் என்ஜினியரிங் காலேஜ், கடைசி வருஷம் .. கே கே நகர்ல இருந்து வர பையன்.. காலைல பதினோரு மனிக்கு அவன் கை, கால் ஒடஞ்சி ஆஸ்ப்பத்திரில இருக்கான்னு தான் எனக்கு நியுஸ் வரனும்... புரிஞ்சுதா?"
படாரென லைனை கட் செய்தான்...

சரளா , இங்கே வா, நல்லா கேட்டுக்கோ, அவ அந்த அறைய விட்டு வெளிய வரக்கூடாது...சாப்பாடு , தண்ணி எல்லாம் அங்கே தான்.. புரிஞ்சதா...

சரிங்க , தலையாட்டினாள்....

கோபத்தில் கன்கள் சிவந்திருந்தது... பாக்கெட்டை துழாவி.. கிங்க்ஸ் சிகரெட் பாக்கெட் எடுத்து , ஒரு சிகரெட்டை வாயில் வைத்து பற்ற வைத்தான்... புகையை ஆவேசத்துடன் இழுத்து விட்டான்...

செல்போன் சினுங்கியது, எடுத்து ஹலோ என்றான்.."...ஹ்ம்ம் ஓகே சார், நிச்சயமா ... முடியும். சார்.. காலையில ரெடியா இருக்கும் ..கவலைபடாதீங்க.. இல்லை சார், எனக்கு புரியுது.. சரி சார்... ஒகே ஷ்யூர் , முடிஞ்சுடும் .. நீங்க கேட்ட மாதிரி நல்லா வரும் நம்பிக்கையா இருங்க , எஸ்..10 மணிக்கு ரெடியா இருக்கும்.. ஒகே...குட்நைட் சார்"

செல்போனை அனைத்து, மேஜை மீது தூக்கி எறிந்தான்..

சரளா , ஒரு கப் டீ எடுத்துட்டு வா.. அடுத்த 5 நிமிடத்தில் டீ வந்தது .. இரண்டு சிப் பருகினான்...ஒரமாக சரளா ஒடுங்கி நின்றிருந்தாள்...

இதோ பாரு, நாளைக்கு காலையில முடிச்சு தர வேண்டிய வேலை...எப்படியும் முடிக்கனும்னு வந்தேன்.. எல்லாம் பாழ்.. என் மூடே போச்சு இப்போ.. ..ஆனா வேற வழியில்லை முடிச்சு தரேனு சொல்லிட்டேன்.. இப்போ போன் கூட வந்தாச்சு.. முடிச்சே ஆகனும்.. நீ ·ப்ளாஸ்க்ல டீ போட்டு வெச்சிட்டு , அப்படியே கீழே என் சிகரெட் பாக்கெட் இருக்கு எடுத்து வந்து கொடுத்துட்டு போய் அந்த சனியன் கூட படு.. நான் இந்த வேலைய முடிச்சுட்டு காலையில பேசிக்கிறேன்... சரியா??
சரியென்று அவன் சொன்னபடியே செய்துவிட்டு சென்றாள் சரளா..
மற்றொரு சிகரெட் பற்ற வைத்துக்கொண்டு, மேஜை மேலிருந்த பேப்பர், பேனா எடுத்து எழுத ஆரம்பித்தான்

"......யோவ், என்ன மனுஷன்யா நீ, நீயெல்லாம் ஒரு பொறுப்பான அப்பனா? தூத்தேரி...என்னய்யா உன் பொன்னு ஆசைப்பட்டுச்சு?? கூட படிக்கறவனை காதலிக்குது.. காதலிக்கறது அவ்ளோ பெரிய குத்தமாயா??? சாமிங்க கூட காதல் பன்னுச்சுய்யா..படிச்சது இல்லையா நீ. இதோ பெரிசா மாட்டி வெச்சி கும்பிட்டுக்குனு வரீயே முருகரு...அவரு கூட காதக் கல்லானம் தானேயா பன்னாரு..
என்னயா பெரிய சாதி. உலகத்துல ரெண்டே சாதி தான் இருக்குய்யா ஒன்னு ,மனுச சாதி , இன்னொன்னு மிருக சாதி... காதல சேத்து வெச்சி நீ மனுச சாதியா இருக்கனுமா ..இல்ல சாதி வெறி பிடிச்ச மிருக சாதியா திரியனுமானு நீயே முடிவு பன்னுயா...
சாதி சாதி னு ஏன்யா இப்படி சாதி பைத்தியம் புடிச்சு, உன் பொண்ணு வாழ்க்கைய பாழடிக்கப்பாக்கற??காதலிக்கறவன் நல்லவனா , உன் பொண்ண கடைசி வரைக்கும் கண் கலங்காம காப்பாத்துவானானு பாருய்யா... அத உட்டுட்டு..சாதி , மதம்னு ... ஏன்யா இப்படி மனுசன கூறு போட்டு பாக்குறீங்க?
ஏன்யா.. நீ என்னய்யா உசந்த சாதின்றதால அம்மா வவுத்துல 15 மாசமா இருந்தே?? எல்லாரும் 10 மாசம்தான்யா...
இத பாரு.. இப்போ மட்டும் நீ நம்ம ராதாம்மா காதலுக்கு சரி சொல்லாங்காட்டி போன, நானே மொத ஆளா நின்னு அந்தம்மா கூட்டிட்டு போயி அந்த பையனக்கு கட்டி வெப்பேன்..அதனால என் உசிரு போனா கூட கவலையில்லை..சொல்லிட்டேன்...
உங்க வூட்டு சோத்த துன்னுட்டேன்யா, அதான் இப்படி கொஞ்சிக்கினு இருக்கே..இல்ல மவனே...எல்லவனையும் வகுந்துடுவேன்..
ராதாம்மா இந்த வேலைக்காரன் இருக்கான்மா.. கவல படாம தெகிரியமா இரு.. ரெண்டுல ஒன்னு பாத்துடலாம், உனக்கும் அந்த கனேசுக்கும் தான் கல்லானம் , என் தலையே போனாலும் இது நடக்கும்..இது எங்கம்மா மேல சத்தியம்"

திரும்ப திரும்ப படித்து பார்த்து, சில மாற்றங்களை செய்தான்..

மறுநாள் காலையில் தருவதாக ஒப்புக்கொண்ட "காதல் சாதி" திரைப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் குப்பத்து கதாநாயகன் பேச வேண்டிய அனல் பறக்கும் வசனத்தை எழுதி முடித்த திருப்தியில் பேனாவை மூடிவைத்து விட்டு மற்றொரு சிகரெட் எடுத்து பற்ற வைத்தான், வேகமாக வளர்ந்து வரும் இளம் திரைப்பட வசனகர்த்தா வித்யபாரதி..

அடுத்த அறையில்.. அழுது அழுது வீங்கிய கண்களுடன், சுந்தருக்கு எதுவும் ஆகிவிட கூடாதென கடவுளை வேண்டியவாறு நொறுங்கி போய் படுத்திருந்தாள் தேவி.....

சிறுகதை - இடையை கையில் பிடித்து..

கொஞ்ச நாட்களாகவே இந்த ஆசை இருந்தது... வீட்டில் பூர்த்தி செய்துக்கொள்ள முடியவில்லை , அம்மாவிற்கு தெரிந்தா திட்டுவாங்க! என்ன பன்றது?.. நானும் எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்று காத்திருந்தேன், இதோ இப்போதுதான் வீட்டை விட்டு இவ்ளோ தூரம் வந்துட்டேனே.. அதுவும் பூனாவுல தனியா கெஸ்ட் ஹவுஸ்ல இருக்கேன்.. இந்த வாய்பை விட கூடாது.. முடிவு செய்தேன்.. மதியமே அலுவலக வேலையெல்லாம் முடித்துக்கொண்டு 2.30 மணிக்கெல்லாம் கெஸ்ட் ஹவுஸ் வந்தேன்... மெதுவாக கெஸ்ட் ஹவுஸ் இன்சார்ஜிடம் பேச்சு கொடுத்தேன் ... அப்படி இப்படி சில விஷயங்களை பேசி விட்டு .. மெதுவாக "................" வேனுமே கிடைக்குமா?? ஆவலாக பதில் எதிர்பார்த்து காத்திருந்தேன்.. "நஹி சாப்" ஹிந்தியில் சொன்னான்..எனக்கு சற்று ஏமாற்றமாகத்தான் போனது... ஏன் என்றேன்..நான் கெஸ்ட் ஹவுஸ்ல தான் இருக்கனும்.. வெளில போக கூடாது சார், சாரி என்றான் இந்தியில்.
என்ன செய்ய இப்போ... நமக்கு மொழி தெரியாது, எப்படி போய் என்னனு கேட்கிறது?
சரி எங்கே இருக்கும் சொல்லு நான் போயிட்டு .. ஹ்ம்ம்..... இங்கே ரூமுக்கு வந்து..... ஏதும் பிரச்சனை இல்லையே? சற்று இழுத்தேன்.. இல்ல சார் .ஒன்னும் பிரச்சினை இல்லை .. ஏற்கனவே இங்க தங்கின நிறைய பேர் பன்னியிருக்காங்க..
அப்பாடா சந்தோஷம்.. ரெண்டு நாளா மழை, ஆனா இன்னைக்கு வெய்யில். கொஞ்சம் அதிகம் தான்.. .. இப்போ வேனுமா??.. இருக்கட்டுமே நல்ல அனுபவமாக தான் இருக்கும்...
இன்னைக்கு ஓகே! அப்புறம் பின்னாடி ஏதாச்சும் பிரச்சினை வந்துட்டா.. அட அதெல்லாம் வராது... சீப் பா போனதானே .. நம்ம காஸ்ட்லியா தானே பார்க்க போறோம்.... மனதை தேற்றிக்கொண்டேன்.
சரி இடத்தை கேட்டுக்கொண்டு, டிரஸ் செய்துக்கொண்டு கிளம்பி சென்றேன், சைகை பாஷை , அப்படி இப்படி அறைகுறை இந்தியில் பேசி, விலை எல்லாம் கேட்டு .. சரியாக எண்ணி கொடுத்து ..
ஆஹா ! இதோ நான் கொஞ்ச நாளாகவே அனுபவிக்க வேண்டும் என ஆசைப்பட்ட விஷயம் .. என் கையில் இப்போது .மனசு சந்தோஷபட்டது.. இங்கேயே ஆரம்பிக்கலாமா??ஐயோ! வேண்டாம் மனசு சொன்னது, கொஞ்சமாவது? ஹேய் என்ன அவசரம் .கைக்கு தான் வந்தாச்சே .. பொறுமையா ரூமுக்கு போய் அனுபவிக்கலாம்ல மீண்டும் மனசு சத்தம் போட்டது..
சரியென்று, மெதுவாக இடையை பிடித்து அருகில் கொண்டுவந்து.. "உனக்காக தான் இவ்ளோ நாள் ஐயா வெயிட்டிங்" என்று சொன்னேன்...
புரிந்திருக்குமா??? புரிந்தால் என்ன , புரியாட்டி என்ன...
கெஸ்ட் ஹவுஸ் வந்து சேர்ந்தேன்.. என்ன சார் கிடைத்ததா?? கேட்ட இன்சார்ஜிடம் ஹ்ம்ம்ம் என சொல்லிவிட்டு ரூமுக்கு வந்து .. கட்டிலில் போட்டுவிட்டு ..கதவை தாழிட்டேன்...


கட்டிலில் அமர்ந்து , மீண்டும் இடையை கையில் பிடித்து, மேலாடையை எடுத்துவிட்டு, உதட்டோடு உதடு வைத்து அனுபவித்து உறிஞ்சினேன்...அடா அடா ! எவ்வளவு அருமை..


இந்த வெயிலுக்கு இதமா, ... மொத்தமாக உறிஞ்சி குடித்துவிட்டு , காலி பெப்சி பாட்டிலை கட்டிலில் வீசிவிட்டு சற்று நேரம் உறங்கலாமென படுத்தேன்.


டாக்டர் சைனஸ் என்று சொல்லிவிட்ட காரணத்துக்காக 3 மாதம் என்னை குளிர் பானங்களை கண்களால் கூட பார்க்க கூடாது என்று கண்டிஷன் போட்டு , சுமார் 1.5 மாதம் கடைபிடிக்க வைத்த அம்மாவிற்கு இது தெரிந்தால் என்ன ஆகும் என்ற நினைப்போடு உறங்கிபோனேன்...................................

வீ எம்.

Kutty Break

Dear Friends,
Due to some unavoidable circumstances, I took a short break and it will continue for the next few days.
Will be back soon. My first posting would be the risk analysis part II.

Sorry For the Break

Regards
V M