சிரிப்பு வருது - நக்கீரன், விகடன், குமுதம் கவனிக்க..
அ.தி.மு.க பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான செல்வி ஜெ ஜெயலலிதாவின் 61வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுதும் அதிமுகவினரால் கோலாகலமாக மொண்டாடப்படுகிறது.
ஆங்காங்கே ப்ளக்ஸ் பேனர் , போஸ்டர், அம்மா-எம் ஜி ஆர் பாடல்கள், அண்ணதானம் என்று தமிழகம் திருவிழா கோலத்தில் களைகட்டியுள்ளது. அம்மாவிற்கு நம்முடைய பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்..
ஒரு கட்சி தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டம் என்றால், இதுவெல்லாம் சகஜம்தானே?? அதிலும் அ தி மு க தலைவியின் பிறந்தநாள் விழாவில் இதெல்லாம் இல்லாது இருந்தால் தானே அதிசயம்.. இதில் என்ன சிரிப்பு என்ற உங்கள் கேள்வி புரிகிறது.
உண்மையில் கொண்டாடங்களை பார்த்து சிரிப்பு வரவில்லை. குறிப்பாக ஒரு ப்ளெக்ஸ் பேனரை பார்த்து தான் சிரிப்போ சிரிப்பு.
கின்டியில் ஜி எஸ் டி சாலையில் இந்திய அறிவுசார் சொத்துரிமை கழகத்துக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள ஒரு பேனரின் வாசகம் தான் சிரிப்புக்கு காரணம்.
ஒரு பக்கம் எம் ஜி யார், நடுவில் மிகப்பெரிதாக ஜெயலலிதாவின் ஐந்து முகங்கள் கொண்ட பிரம்மாண்ட பேனரின் வாசகம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
இலங்கை தமிழர் நலனுக்காக பாடுபடும் ஒரே தலைவி எங்கள் புரட்சிதலைவி அம்மாவின் 61 வது பிறந்தநாள் ... என்று போகிறது அந்த வாழ்த்து வாசகம்..
இலங்கை தமிழருக்கு ஆதரவாக அம்மா எப்படியெல்லாம் போராடுகிறார் என்பது ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் நன்றாக தெரியும்.
"ஈழத்தமிழர் என்று யாரும் இல்லை", "போர் என்றால் உயிர் இழப்பு இருக்கத்தான் செய்யும்", "இலங்கை ராணுவம் அப்பாவித்தமிழர்களை கொல்வது இல்லை" என்பது போன்ற அம்மாவின் அறிக்கைகள் மிகப்பிரபலம்.
ஆனாலும் இப்படி ஒரு பேனரை வைத்த அந்த தொண்டருக்கு நகைச்சுவை உணர்வு மிக அதிகம். ஒரு வேளை அவர் அம்மாவை நக்கலடிக்கிறாரோ?
அ தி மு கவினரே இதை படித்தால் சிரிக்கத்தான் செய்வார்கள். ஏன், அம்மாவே இதை படித்தால் நமுட்டு சிரிப்பு சிரிப்பார்..
ஜூ வி, குமுதம், நக்கீரன் நிருபர்கள் யாராவது இந்த பேனரை கவர் செய்து தங்கள் அடுத்த இதழில் ஒரு ஸ்டோரி எழுதலாம், அது கவர் ஸ்டோரியாகவும் இருக்கலாம்.. காமெடி ஸ்டோரியாகவும் இருக்கலாம்..