Showing posts with label இடைத்தேர்தல். Show all posts
Showing posts with label இடைத்தேர்தல். Show all posts

திருமங்கலத்தில் வைகோ வெற்றி

திருமங்கலம் வாக்கு என்னிக்கை முடிவடையும் தருவாயில் உள்ள இந்த நிலையில், 12 சுற்றுகள் எண்ணிக்கை முடிந்துள்ளது. இன்னும் 2 அல்லது 3 சுற்று மட்டுமே மீதமுள்ள நிலையில் தி மு க வெற்றி உறுதியாகியுள்ளது.

தே மு தி க - 11,000 & சரத்தின் ச மு க 700 வாக்குகளும் பெற்றுள்ளது.

தி மு க வின் லதா அதியமான் தனக்கு அடுத்தபடியாக உள்ள அ தி மு க வின் முத்துராமலிங்கத்தை விட சுமார் 36,150 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்( தி மு க - 70,000 , அ தி மு க - 34,000).

40,000 வாக்குகள் வித்தியாசத்தில் தி மு க வெற்றி பெறும் என எதிர்பார்ப்பு உள்ளது

தலைப்பு பற்றிய விளக்கம். ம தி மு க வென்ற தொகுதியை ஜெ க்கு வைகோ தாரைவார்த்துவிட்டார், ஏமாளி, கோமாளி, அடிமை என்றெல்லாம் விமர்சனம் இருக்கிறது..

உண்மையில் வைகோ மிகத்தெளிவாக இருந்திருக்கிறார்.. எப்படியும் தோற்கப்போகும் இந்த தொகுதியில் நாம் ஏன் நின்று செலவு செய்யவேண்டும் என்றே இந்த தொகுதியை அ தி மு க தலையில் கட்டிய வைகோ விற்கு தான் உண்மையான வெற்றி.

குறிப்பாக திருமங்கலம் பேச்சை வைத்து தான் தன்னை ஜெ பொடாவில் கைது செய்தார் ஜெ, அதற்கு பழிவாங்கும் விதத்தில் இந்த தொகுதியை ஜெ க்கு தாரை வார்ப்பது போல வார்த்து தன் வஞ்சத்தை தீர்த்துக்கொண்டார் வைகோ.. அவரை பொறுத்தவரை இது அவரின் பெரு வெற்றி

திகு திகு திருமங்கலம் யாருக்கு?

இடைத்தேர்தல் காரணமாக கரன்சி மழை, புகார் மழை, புகழ்ச்சி மழை, வசை மழை என்று திருமங்கலம் எங்கும் மழை பொழிகிறது..

தலைவர்களின் உச்சகட்ட பிரச்சாரம், அதிரடி புகார்கள், அடிதடி, வசை பாடுதல், மக்களுக்கும் இலவசங்கள், வாக்குறுதி, கோஷம் என இடைத்தேர்தலுக்கே உரிய அம்சங்களுடன் திருமங்கலம் தன் வாக்குப்பதிவை எதிர்நோக்கியுள்ளது..

பா ஜ க வும் , பா ம க வும் இந்த இடைத்தேர்தலில் இருந்து ஒதுங்கிக்கொண்டு எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று தன் நிலையை அறிவித்துவிட்ட நிலையில், களத்தில் தி மு க , அ தி மு க, தே மு தி க , ச ம க கட்சி வேட்பாளர்களும், சுயேட்சைகளும் கச்சை கட்டியுள்ளனர்..
இருப்பினும் நேரடி போட்டி என்னவோ தி மு க மற்றும் அ தி மு க விற்கு தான்.. ஒரளவு தே மு தி க வும் இவர்களுக்கு ஈடுகொடுத்து நிற்கிறது.. சரத்தின் ச ம க விற்கு இது முதல் தேர்தல்..

அனல் கக்கிய பிரச்சாரம் ஒருவழியாக இன்றோடு ஓய்ந்து, நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைப்பெற இருக்கிறது


இரண்டு முக்கிய கட்சிகளும் வெற்றிக்கனியை பறித்தே ஆகவேண்டும் என்று முட்டி மோதுகிறது. இந்த இரண்டு கட்சிகளுமே இந்த வெற்றியை கவுரவ பிரச்சனையாக பார்க்கிறது.

பா ஜ க போட்டியில்லை. இந்த தொகுதியில் பா ஜ க விற்கு ஓட்டு வங்கியும் இல்லை.. அ தி மு க வுடன் கம்யுனிஸ்ட்கள் இருப்பதாலும், பா ஜ க விஜயகாந்துக்கு கொக்கி போட்டு வருவதாலும் , பா ஜ கவினரை தே மு தி க விற்கு ஓட்டு போட சொல்லி வாய்மொழி உத்தரவு போகலாம்.. ஆனால் தே மு தி க வை விட பா ஜ க தொண்டர்கள் அ தி மு க விற்கே வாக்களிக்க விரும்புவர்.

பா ம க வின் நிலை தான் புரியவில்லை.. அவர்களுக்கும் இங்கே பெரிய வாக்கு வங்கி இல்லை. வாய் மொழி உத்தரவு அ தி மு க ஆதரவாக போகலாம், பணபலம், ஜாதி, தனி நபர் செல்வாக்கு என்ற வகையில் ஒரு சாராரின் வாக்கும் தி மு க விற்கும், ஒரு சாரார் வாக்கு அ தி மு க விற்கும் போகவே வாய்ப்பு அதிகம்.

பா ஜ க போட்டியிடாதது, போன முறை தி மு க கூட்டனியில் இருந்த கம்யூனிஸ்ட்கள் இப்போது தங்களுடன் இருப்பது, மேலும் பா ம க வின் நடுநிலை, மின்சார வெட்டு, விலைவாசி போன்றை அ தி மு க வின் ப்ளஸ்.
கடந்த தேர்தலில் ம தி மு க நின்று வென்ற தொகுதி இது. நியாயமாக ம தி மு க வே இப்போது போட்டியிட்டிருக்கவேண்டும், ஆனால் அ தி மு க விற்கு தொகுதியை வைகோ தாரை வார்த்துவிட்டார் என்ற குறை ம தி மு க வின் ஒரு சிறு பகுதியினரிடம் இருக்கிறது. இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்றாலும், அ தி மு க விற்கு ஒரு சிறிய , மிகச் சிறிய மைனஸ்.

தி மு க விற்கு என்று பார்த்தால், கம்யுனிஸ்ட் , பா ம க கூட்டனியை விட்டு சென்றது மிகப்பெரிய மைனஸ், கட்சியின் ஒரு பிரிவு தி மு க விற்கு எதிரான மனநிலையில் இருப்பது, விலைவாசி, மின்வெட்டு, சன் டீ வி யின் நடுநிலை , எப்போதும் இருக்கும் ஆளுங்கட்சிக்கு எதிரான மக்கள் மனநிலை போன்றவை மிகப்பெரிய மைனஸ்.

மதுரை தினகரன் எரிப்பு சம்பவம் தாக்கத்தை ஏற்படுத்தப்போவதில்லை என்பது மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் பளிச்சென தெரிந்தது.

ப்ளஸ் என்று பார்த்தால், அதிகமாக எதுவுமில்லை.. , ஆட்சி அதிகாரம்,பென் வேட்பாளர், இலவசங்கள், கிலோ அரிசி 1 ரூபாய், அழகிரி.. இவை மட்டுமே.. வேண்டுமானால், தே மு தி க பிரிக்கப்போகும் அ தி மு க வாக்குகளை சொல்லலாம்.

இந்த இரண்டு கட்சிகளின் ப்ளஸ் மற்றும் மைனஸ் வைத்து பார்க்கும் போது, தி மு க விற்கு போன்ற இடைத்தேர்தலில் கிடைத்தது போல வெற்றி அவ்வளவு சுலபமாக கிடைத்திட வாய்ப்பில்லை என்றே தோண்றுகிறது.,

தி மு க வின் வெற்றி என்பது நூலிழையில் மட்டுமே இருக்கும் என்றே நினைக்கிறேன்..போன முறை மதுரை மேற்கு இடைத்தேர்தலில் தி மு க வின் கவுஸ்பாட்சா 30,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.. ஆனால் இந்த முறை 30,000 வித்தியாசம் இருக்குமா என்பது சந்தேகமே..

அனல் கக்கும் மதுரை

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் சுட்டெரித்து வந்த வெயில் குறைந்து சற்று இதமான குளிர் காற்று வீசுகின்ற போதிலும், ஒரே ஒரு பகுதியில் மட்டும் இன்னும் அனல் வீசுகிறது. ஆம்.. அது மதுரை மேற்கு... சிவாஜியின் அனலை காட்டிலும் இடைத்தேர்தல் அனலில் சிக்கித்தவிக்கிறது மதுரை மேற்கு. ஆங்காங்கே வாக்குவாதம், கைகலப்பு, பண விநியோகம், உள்குத்து, குழிபறிப்பு , பரஸ்பர குற்றச்சாட்டுக்கள் என்ற சமீபத்திய தேர்தல் ட்ரெண்ட் எதற்கும் பஞ்சமில்லாமல் மேற்கு தொகுதியில் தேர்தல் திருவிழா உச்சக்கட்ட களைக்கட்டுகிறது.

திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளருக்கும் - அதிமுக வேட்பாளருக்கும் தான் போட்டி என்றாலும் களத்தில் தேமுதிக, பாஜக, புதிய தமிழகம் மற்றும் சுயேச்சைகளும் அனல் கிளப்பிக்கொன்டிருக்கிறார்கள்.

வெற்றி மாலை யாருக்கு???

திமுக கூட்டணியின் ப்ளஸ் :

  • மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு ஆட்சியாளர்கள் மீது ஒரு பெரிய வெறுப்பு எண்று எதுவும் இல்லாதது (தினகரன் தாக்குதல் தவிர்த்து)
  • கிலோ அரிசி 2 ரூபாய்இலவச வண்ண தொலைக்காட்சி மற்றும் 2 ஏக்கர் இலவச நிலம்.
  • ஆளுங்கட்சி என்கிற அதிகாரம்.அழகிரியின் வேகம்.

தி மு க கூட்டணியின் மைனஸ்

  • தினகரன் அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம்.
  • வழக்கமான காங்கிரஸ் பேரியக்கத்தின் ஒத்துழையாமை இயக்கம்
  • இலவசங்களை வழங்குவதில் ஏற்பட்ட சில குளறுபடிகள்
  • சன் டிவி அளித்து வந்து பிரச்சார சப்போர்ட்
  • அதிமுக வின் இரட்டை இலை

இந்த இடைத்தேர்தலை பொறுத்தவரை, முதல் மைனஸ் தவிர்த்து மற்றவைகள் மிகப்பெரிய தாக்கத்தையோ , திமுக கூட்டணியின் வெற்றியை பாதிக்கும் என்றோ சொல்ல முடியாது.


தினகரன் அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவத்தின் தாக்கம் எந்த அளவிற்கு இடைத்தேர்தலில் இருக்கும் என்பது அனைவராலும் ஆவலோடு எதிர்பார்க்கப்படுகிறது. தி மு க கூட்டணிக்கு இது பெரும் பிண்ணடைவாகவே பார்க்கப்படுகிறது.

ஆனாலும் சற்று யோசித்துபார்த்தால், 3 பொதுமக்களின் உயிர் பலி வாங்கிய சம்பவம் என்றாலும், இதனை பலரும் தயாநிதி + கலாநிதி மற்றும் தி மு க விற்கு இடையேயான பிரச்சனையாக பார்க்கின்றனர் என்பதே நிஜம். உபயம் : பத்திரிக்கைகள் + கலைஞரின் அனுபவம் (தருமபுரி நிகழ்வு பொதுமக்கள் மனதில ஏற்ப்படுத்தியது போன்ற வடுவை மதுரை ஏற்படுத்தவில்லை அல்லது ஏற்படுத்திவிடாமல் பார்த்துக்கொள்ளப்பட்டது என்பதை நினைவில் கொள்க)

உடன்பிறப்புக்களளை பொறுத்த வரை, இந்த தாக்குதலை குறித்து அவர்கள் வருத்தப்பட்டாலும், இதனை மிகப்பெரிய குற்றம் என்று அவர்கள் பார்க்கவில்லை. தினகரன் செய்தது மிக பெரிய தவறு அதன் காரணமாகவே உணர்ச்சிவேகத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்பதே அவர்களின் கருத்தாக உள்ளது. அதிலும் இந்த தாக்குதலை நடத்தியது மதுரை தி மு கவினர் என்பதால் நிச்சயமாக இந்த தாக்குதலை ஒரு காரணமாக எடுத்துக்கொண்டு திமுகவிற்கு எதிராக வாக்களிக்கப்போவதில்லை.

என்னதான காங்கிரஸ் தொண்டர்களுக்கு இந்த தாக்குதல் குறித்து மிக பெரிய வருத்தம், கோபம் இருந்தாலும், களத்தில் இருப்பது தங்கள் கட்சி என்பதாலும், தி மு க , அதிலும் குறிப்பாக அழகிரியின் ஆதரவு அவர்களுக்கு எப்போதும் தேவை என்பதாலும், நிச்சயமாக அவர்களின் வாக்குகளும் சிதறப்போவதில்லை.


பா ம க - ஆரம்பத்திலிருந்தே இவர்களுக்கு சன் டிவி, தினகரன், தயாநிதி மீது இருந்து வந்த கோபம், மற்றும் தயாநிதியை இப்போது கட்சியில் இருந்து ஓதுக்கிவைத்துள்ள காரணத்தால் இந்த சம்பவத்தை இவர்களும் மிகப்பெரிய கொடூரமாக நினைத்து வாக்களிக்காமல் இருக்கப்போவதில்லை.

தோழர்களின் வாக்கு வங்கியில் மட்டுமே சிறய அளவில் ஓட்டை விழ வாய்ப்புள்ளது.


யாருக்கு இந்த வெற்றி முக்கியமோ இல்லையோ அழகிரிக்கு இந்த வெற்றி மிக முக்கியம் (காங்கிரஸை விட) . இந்த வெற்றியை வைத்துதான் அழகிரி இந்த தாக்குதலுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என மதுரை மக்கள் தீர்பளித்துள்ளார்கள் எனறும், தென்மாவட்டங்களில் தன் சாம்ராஜ்யத்திற்கு எந்த சேதாரமும் இல்லை என்று கூறி வலம் வர முடியும்.

ஏன் தி மு க கூட்டனியில் உள்ள கட்சிகளின் வாக்குகளை மட்டும் பற்றியே எழுதினேன் என்று யோசிக்கலாம்.. ஆம், கடந்த சில தேர்தல்களில், ஜனநாயக கலாசார முறையில் நிகழ்ந்த சில உருட்டுக்கட்டை , அடிதடி, வாக்குசாவடி கைப்பற்றுதல் காரணத்தாலும், தற்போதைய கள நிலவரத்தாலும், பொது மக்களில் பலர் வாக்களிக்க வருவார்களா என்பது சற்று சந்தேகமே.ஆக கட்சியின் தீவிர உறுப்பின்ர்கள், கட்சி சார்ந்தவர், கட்சி அபிமானிகள் வாக்குகள் மட்டுமே அதிக அளவில் பதிவாகும் (கள்ள ஓட்டு என்னிக்கை இதை விட அதிகமாக இருக்கலாம் என்பது வேறு :) )


ஆக, பொதுமக்கள் பலர் முன்வந்து வாக்களிக்காத பட்சத்தில், தினகரன் சம்பவத்தின் பாதிப்பு காங்கிரஸின் வெற்றியை சற்றே பாதிக்கலாமேயொழிய மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தப்போவதில்லை என்பதே நிதர்சனம்.

அப்படி ஏற்படப்போகும் அந்த சிறு பாதிப்பையும், அதே போல இரட்டை இலை மந்திரத்தால் ஏற்படப்போகும் பாதிப்பையும் கிழ்க்கண்ட விசயங்கள் சரிக்கட்டிவிடும் என்றே தோன்றுகிறது..

  • அதிகார பலம் (துஷ்பிரயோகம் என்றும் எடுத்துக்கொள்ளலாம்) :)
  • வாரியிரைக்கப்படும் கரண்சி நோட்டுக்கள்
  • முன் தேதியிட்ட கலர் டீவி டோக்கன்கள்
  • நம் எம் ல் ஏ ஒரு ஆளும் கூட்டனியின் எம் எல் ஏ வாக இருக்கட்டுமே என்ற மக்களிள் பொதுவான மனநிலை

மேலும், கலாநிதி + தயாநிதி ஆரம்பத்தில் காண்பித்த வேகம் இப்போது இல்லை. அதே வேகம் இப்போது இருந்திருந்தால், தன் கையில் இருக்கும் மிக வலுவான சன் என்னும் மீடியா முலமே திமுக கூட்டணியின் எதிர்ப்பு பிரச்சாரத்தை முடுக்கிவிட்டிருந்தால்..திமுக விற்கு பெரும் தலைவலியாக இருந்திருக்கும்.. பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்ற வகையில் தான் கலாநிதி தயாநிதி இருக்கிறார்கள்.

தேமுதிக கவனிக்கப்படவேண்டிய கட்சியாக உருவெடுத்திருந்தாலும் அது அதிமுகவின் , குறிப்பாக எம் ஜி ஆர் சேர்த்து வைத்துள்ள வாக்கு வங்கியில் தான் சேதாரம் ஏற்படுத்தப்போகிறது.


தேர்தல் நாளன்று என்ன நடக்கப்போகிறது , எந்தளவிற்கு வாக்குபதிவு இருக்கும், வாக்குப்பதிவு அமைதியாக நடக்குமா, கள்ள வோட்டு கனஜோராக இருக்குமா.. என்பதெல்லாம் புரியாத புதிராகவே உள்ளது.. ஜீன் 26 அன்றே தெரியவரும்..


மிக பெரிய அளவில் வன்முறை அலம்பல் இல்லாமல் தேர்தல் நடக்கும் பட்சத்தில் , வெற்றி விளிம்பின் வெகு அருகில், மிக மிக நெருக்கத்தில் இரு கூட்டனி வேட்பாளர்களும் இருந்தாலும், திமுக கூட்டணி வேட்பாளர் ராஜேந்திரன் சற்று (நூலிழையிலாவது) வெற்றிக்கோட்டை முதலில் தொட்டு கோட்டைக்கு போவார் என்றே தோன்றுகிறது, அழகிரி தேரில் ஏறி. மன்னிக்கவும் அழகிரி தோளில் ஏறி..

குறிப்பு: இது என் தனிப்பட்ட கருத்து மட்டுமே.


யார் வெல்வார்?? உங்கள் கணிப்பு என்ன?? கருத்து பெட்டியில் சொல்லுங்கள்..

வீ எம்