பெரும்பாலான மக்களால், துளசி, வில்வம், அரச மரம், அருகம், வேப்பமரம் ஆகியவை தெய்வத்தன்மை வாய்ந்த தாவரங்களாக மதிக்கப்படுகிறது. இந்த தாவரங்கள் எல்லாம் மிகுந்த மருத்துவ குணம் நிறைந்தது, பாதுகாக்கப்படவேண்டியவை என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
தெய்வீகத்தன்மை என்று வரும் போது, கடவுள் நம்பிக்கையுள்ளோர் இதனை முற்றிலும் ஏற்றுக்கொண்டும், கடவுள் நம்பிக்கை இல்லாதோர் தெய்வீகத்தன்மை என்பதனை மட்டும் விடுத்து, இந்த தாவரங்களின் மருத்துவ குணங்களுக்காக இவை பாதுகாக்கவேண்டும் என்பதனை ஏற்றுக்கொள்கின்றனர்.
இரண்டாம் வகையை சார்ந்த எனக்கு துளசியுடன் ஏற்பட்ட ஒரு நிகழ்வை பகிர்ந்துக்கொள்ளவே இந்த பதிவு.
சமீபத்தில் (டோண்டு சார் சமீபத்தில் அல்ல) 2 மாதங்கள் முன்பு, ஒரு வீட்டை விலைக்கு வாங்கி , சில ஆல்டரேஷன் செய்ய ஆரம்பித்தோம். கார் பார்க்கிங் வரவேண்டிய இடத்தில் ஒரு துளசி மாடம் இருந்ததை அகற்ற வேண்டிய சூழல் வந்த போது, அம்மா சற்று வருத்தப்பட்டு இதை என்ன செய்வது என்று கேள்வி எழுப்பியபோது, எடுத்து பின்புறத்தில் வைத்து தினமும் தண்ணீர் ஊற்றி வளர்கலாம் என்று என் கருத்தை சொன்னேன்.
ஆனால் அம்மா, பெரியம்மா , சித்தி என அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரே குரலில் இல்ல இல்ல சாமி செடி அப்படியெல்லாம் செய்யக்கூடாது, தினமும் பூஜை பன்னனும், தீட்டு படாம பார்த்துக்கனும், பூஜை பண்ணலைனா , இல்ல குளிக்காம் கிட்ட போய் தீட்டு பட்டா ஆகாது , செடி வாடிப்போயிடும் அப்புறம் குடும்பத்துக்கு நல்லதல்ல என்று தங்கள் கருத்தை சொன்னபோது எனக்கு சற்று வியப்பு
துளசி செடியை பாதுகாக்கப்பட வேண்டியது என்பதில் மாற்றுக்கருத்து இல்லையெனினும், குளிக்காமல் அருகே சென்றாலோ , தீட்டு பட்டாலோ, பூஜை செய்யாவிட்டாலோ செடி பட்டுவிடும் என்ற அவர்கள் கருத்து வியப்பளித்தது..
எனது கருத்தினை சொன்ன போது, அவர்கள் அனைவரும் இது கடவுள் சம்பந்தப்பட்டது, அதிலும் குறிப்பாக பிராமணர்கள் தான் துளசி மாடத்தை பாதுகாக்க சரியானவர்கள் என சொன்னது மேலும் வியப்பளித்தது.
சரியென்று, எங்களுக்கு அந்த வீட்டை விற்ற பிராமனரை தொடர்புக்கொண்டு அவரை வந்து அந்த மாடத்தை எடுத்து செல்ல சொல்லிவிட்டோம்.
ஆனால் மற்ற வேலை காரணமாக 2 மாதமாகியும் அவர் இன்னும் வரவில்லை அந்த துளசி மாடமும் ஒர் ஓரத்தில் வைக்கப்பட்டுள்ளது.
கட்டுமான வேலை நடப்பதால், அந்த மாடத்தை சுற்றி சுற்றித்தான் வேலை செய்துக்கொண்டிருக்கிறார்கள், கட்டுமான வேலை நடைப்பெறும் இடத்தில் அந்த மாடத்தையோ செடியையோ தொடாமல் இருப்பது சாத்தியமில்லை. ஆக சில நேரங்களில் மாடத்தை தொடுவதும் இருக்கும்.
கட்டுமான வேலைக்கு வருபவர்கள் குளித்துவிட்டு தான் வருவார்களா தெரியவில்லை. பாவம், கச கச வெய்யிலில் வேலை செய்பவர்கள், மாலையில் ஒரு வழியாக குளிக்கலாம் என்று வரலாம். அதில் தவறில்லை
மருத்துவ குணம் கொண்ட செடி பட்டு விட கூடதென்று நானும் தினமும் காலையில் தண்ணிர் ஊற்றுகிறேன். சனி, ஞாயிறுகளில் லேட்டாக குளிப்பதால், அந்த இரண்டு நாட்களில் குளிக்காமல் தான் தண்ணீர் விடுகிறேன்.
வெள்ளிக்கிழமைகளில் அம்மா அந்த மாடத்திற்கு விளக்கேற்றுகிறார் என்பதையும் இங்கே சொல்லவேன்டும்.
இன்று வரையிலும், சுமார் 2 மாதம் ஆகிறது, அந்த செடி நன்றாகத்தான் உள்ளது.
அனைவரும் சொன்னபடி, தினமும் பூஜை செய்யாவிட்டால் பட்டுவிடும், தீட்டு பட்டால் செடி பட்டுவிடும், குளிக்காமல் தொட்டால் செடி பட்டுவிடும் என்பதெல்லாம் என்னவாயிற்று என தெரியவில்லை.
குறிப்பாக, பிராமணர் வீட்டில் தான் நன்றாக வரும் என்று சொன்னது??
பிராமணர் அல்லாத எங்கள் வீட்டிலும் செடி நன்றாகத்தான் வளருகிறது
இப்படிப்பட்ட கருத்துக்கள் எப்படி விதைக்கப்பட்டிருக்கும் என புரியவில்லை. அரிய மருத்துவ வகை செடிகளை பாதுகாக்கும் நல்ல நோக்கத்தில் கடவுள்நம்பிக்கையோடு தொடர்பு படுத்திவிட்டிருக்கலாம் . பின்னாளில் மற்ற நம்பிக்கைகளும் சேர்ந்து மருவியிருக்கலாம்..
எது எப்படியோ, என் வீட்டிலிருப்போர் கருத்துக்கு பிறகு என் மனதில் ஏற்பட்ட ஒரு சலசலப்புக்கு இந்த 2 மாதத்தில் கண்கூடாக விடை கிடைத்தது.
இங்கே ஒன்று - எதை எதையோ காரனம் சொல்லி செடி பட்டுவிடும் என்று சொன்னவர்கள் ஒரு முறை கூட நிதர்சனமான உண்மையான தண்ணிர் ஊற்றாவிடில் செடி பட்டுவிடும் என சொல்லவேயில்லை.. சில நேரங்களில், நம்மில் ஊறிப்போன சில நம்பிக்கைகள் நிதர்சனமான உண்மைகளை கூட மறைத்துவிடுமோ? .. யோசிக்கவேண்டிய விஷயம்..
டிஸ்கி: இந்த பதிவில், கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை குறை சொல்லியோ, பிராமண சமுகத்தை குறை சொல்லியோ எதுவும் இல்லை , எதையும் திசை திருப்பி கும்மியடித்து குளிர்காய்பவர்கள் தயவு செய்து ஒதுங்கியிருக்கவும். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களை மட்டும் பகிர்ந்துக்கொள்ளவும்.
நன்றி
வீ எம்