Showing posts with label வைகோ. Show all posts
Showing posts with label வைகோ. Show all posts

மருத்துவர் ராமதாஸ், வைகோ, திருமா..கலைஞர்

ஈழ விவகாரத்தில் கலைஞர் மீது கடுமையான விமர்சனம் விழுந்துவருகிறது. ஜெயலலிதாவை கூட நியாயப்படுத்த தொடங்கிவிட்டார்கள்.

இரு விதமான நபர்கள்.. ஒன்று கருணாநிதி என்றாலே வேப்பங்காய் என கசக்கும் பிரிவு, கலைஞரை ஆதரிக்கும் / கலைஞர் சார்ப்பு என்றிருக்கும் பிரிவு மற்றொன்று (நடுநிலையானவர்கள் என்று யாரும் இல்லை என்பதே உண்மை - சும்மானாச்சும் நான் நடுநிலை என்று சொல்லிக்கொள்ளலாம் அவ்வளவே).

இதில் முதல் பிரிவானவர்கள் எப்போது நேரம் கிடைக்கும் கருணாநிதியை வறுத்தெடுக்க என்று பார்த்திருந்தவர்கள், கிடைக்கும் போதெல்லாம் தவறாமல் வறுத்தெடுத்துவிடுவார்கள் (சில நேரங்களில் தங்களை நடுநிலைவாதி என்று சொல்ல்லிக்கொள்வார்கள் :) )

கலைஞர் ஈழ விசயத்தில் எந்த வித முடிவு எடுத்திருந்தாலும் அவர்களின் விமர்சன முறை மாறி இருக்குமே தவிர கருணாநிதி எதிர்ப்பு எதிர்ப்பாக தான் இருந்திருக்கும்.. ஆக கலைஞர் இவர்கள் வாய்க்கு மெல்ல அவல் கொடுத்துவிட்டார் என்று சொல்வது தவறு.

ஆனால் இரண்டாவதாக உள்ள பிரிவினரின் விமர்சனத்திற்கு நிச்சயம் கலைஞரே காரணம். முழுக்க முழுக்க.. !

ஏன் எப்படி எதற்கு என்பதை பற்றி விரிவாக (அள்ள அள்ள குறையாமல் வரும்) அடுத்த பதிவில் பார்க்கலாம்..

இங்கே நம் மற்ற தலைவர்கள் மருத்துவர் அய்யா, திருமா, வைகோ பற்றி பார்க்கவேண்டியுள்ளது.. இவர்கள் மூவருமே ஈழ விசயத்தில் தங்கள் மேல் எந்த விதமான எதிர்வினை விமர்சனங்கள் விழாமல் பார்த்துக்கொண்டார்கள். நடந்துக்கொண்டார்கள் என்று நிச்சயம் சொல்ல முடியாது, சந்தர்ப்ப சூழ்நிலையை பயன்படுத்தி அப்படி பெரிதாக விமர்சனம் விழாது பார்த்துக்கொண்டார்கள். மூவருமே எந்த பதவியிலும் இல்லை என்பதே பெரிய ப்ள்ஸாகி போனது..

மருத்துவர் ராமதாஸ் - காங்கிரஸ் முன்னாள் தலைவரின் சம்பந்தி, விடுதலைப்புலிகள் பற்றி வெளிப்படையாக பேசிவந்தார் சில மாதங்களுக்கு முன்.. சீமான் , அமீர் , திருமாவளவன் விஷயத்தில் சிலிர்த்தெழுந்த சிங்கக்குட்டி காங்கிரஸ் தலைகள் எல்லாம் ஏனோ இவர் விஷயத்தில் மட்டும் குட்டிப்போட்ட நாய்குட்டிகள் போல ஈனஸ்வரத்தில் முனக மட்டுமே செய்தார்கள். அங்கேயும் பெரிய எதிர்ப்பு விமர்சனம் இல்லை.

ஈழத்தமிழருக்கு துரோகம் செய்யும் இந்திய அரசே என்று இவர் குரல் கொடுத்தாலும் , தன் மகன் உட்பட இவரது கட்சியினர் அதே இந்திய காங்கிரஸ் அரசின் அமைச்சர்கள் என்பது மட்டும் நியாபகம் வரவே வராது. தப்பித்தவறிக்கூட எங்களின் அமைச்சர்கள் ராஜினாமா செய்ய சொல்வேன் என்று வாயிலிருந்து வந்துவிடாது. கலைஞரின் செயல்கள் திருப்தியில்லை திருப்தியில்லை என்று பல்லவி பாடுவார் ஆனால் தி மு க அமைச்சர்கள் பதவி விலகிடவேண்டும் என்று மட்டும் (மனதில் இருந்தாலும்) கேட்டிட மாட்டார் .. மூச்.. கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொறிந்துக்கொள்வதா???

இத்தனைக்கும் எப்போது போயஸ் தோட்டத்து கதவுகள் அகல திறக்கும் , அன்னையிடம் விடை பெற்று அம்மாவிடம் அடைக்கலம ஆகலாம் என்று காலம் பார்த்திருக்கிறார்.. போராட்டம் , போராட்டம், அறிக்கை, தமிழிழ ஆதரவு கூட்டம் அனைத்திலும் பங்கேற்றுக்கொள்வது என்ற செய்கைகளை வகுத்துக்கொண்டதன் மூலம் தன் கட்சியினர் மத்திய அமைச்சர் பதவி பற்றி பெரிய எந்த பெரிய விமர்சனமும் வராது பார்த்துக்கொள்கிறார்.. அப்படியே தப்பித்தவறி நிருபர் கேட்டுவிட்டால்.. மத்திய அமைச்சரவையே முடியப்போகிறது இப்பப்போய் என்று இழுத்தடித்து மழுப்பத்தெரியாதா என்ன.. )கலைஞரிடன் கூட்டணியில் இரு முறை இருந்தவர் ஆயிற்றே..!) ஒரு வேளை மன்மோகன் பா ம க விற்கு இன்னுமொரு அமைச்சர் பதவி என்று சொன்னால், இல்லைங்க இருக்கட்டும் ஆட்சி முடியப்போகுதே இப்போ போய் எதுக்கு என்று சொல்வாரென நீங்கள் நினைத்தால்.. அய்யோ பாவம் அப்பாவி சார் நீங்க.. ஒரு பக்கம் அமைச்சர் பதவி , ஒரு பக்கம் அம்மாவின் பார்வைக்கு வெயிட்டிங்.. அம்மா கை விட்டுவிட்டால், உதவும் என்று காங்கிரஸின் கையையும் விடாமல்.. அதே நேரத்தில் ஈழ ஆதரவும் பேசி, மத்திய அரசை எதிர்க்கும் போராட்டங்களில் தலைகாட்டியும், குறிப்பாக காங்கிரஸின் பரம திடீர் எதிரிகள் திருமா, சீமானுடன் கைக்கோர்த்து சாமர்த்தியாக மிகக் குறைந்த அளவு விமர்சனத்துடன் பாலன்ஸ் செய்து ஆட்டம் ஆடி வரும் மருத்துவரை பார்த்தால்... "ஆடாத ஆட்டம் இல்லை, போடாத வேஷம் இல்லை..."

வைகோ - இவருக்கு பதவி தோளில் போடும் துண்டும் அல்ல, இடுப்பில் இருக்கும் வேட்டியும் அல்ல.. அவரின் வீட்டு மொட்டை மாடியில் வத்தல் காயப்போட பயன்படும் ஒரு துணி அவ்வளவே.. எந்த பதவிக்கும் தானோ தன் கட்சிகாரங்களோ வந்தே பல மாமாங்கம் ஆச்சே , வேற வழியில்லை.. வாடாம் காயப்போடற துனி அது இதுனு சொல்லி சமாளிக்கனும்.. ஒரு பக்கம் ஈழத்துக்கு வீர வசனமெல்லாம் பேசி, இந்தியா , இலங்கை , பர்மா, பாகிஸ்தான், பங்களாதேஷ்னு கோபால் பல்பொடி விளம்பரம் மாதிரி பேசி உணர்ச்சிமயமா தாக்கினாலும் வீட்டுக்கு போனா முதல் வேலையா போன் போடற நம்பர் போயஸ் தோட்டது நம்பரா தான் இருக்கும்..

மக்களை கொல்வது புலிகள்னு போயஸ் தோட்டத்துல இருந்து குரல் வந்தா மட்டும் இவருக்கு காது டமார செவிடாகிடும் பாவம்.. இவர் என்ன பன்னுவார்.. ஜெயிக்கறமோ தோக்கறமோ 2009 தேர்தல்ல நிக்கறதுக்கு 2, 3 சீட்டும், கொஞ்சம் லஷ்மி கடாட்சமும் வேணுமே... வெட்டிகிட்டு வந்து 3 வருஷம் கூட ஆகலயே அதுக்குள்ள போய் அண்ணேனு ஒட்டிக்க தன்மானன் இடம் தராது..

இன்னும் 2 வருஷம் போனா 2011 ல , பாசிச வெறிபிடித்த ஜெயலலிதாவை இந்த நாட்டை விட்டு விரட்டாது ஓயமாட்டேனு , என்னை எட்டி உதைத்தாலும் , ஏறி மிதித்தாலும் என் அண்ணன் அண்ணன் தான், அவர் தம்பி வைகோ தான்.. மதியிழந்தேன் மானம் இழக்கவில்லைனு கண்ணியாகுமரில இருந்து கத்திகிட்டே வந்து கோபாலபுரத்துல தொபுக்கட்டீர்னு விழலாம்.. ஆனா இப்ப 2009 க்கு அம்மா தானே ஆதரவு.. அம்மா என்னா சொன்னாலும் 2 காதுலயும் பஞ்சு அடைச்சுகிட்டு எல்லா ஈழத்தமிழர் கூட்டத்துக்கு (தி மு க தவிர) போயிட்டு நரம்பு புடைக்க, நெஞ்சு துடிக்க நாலு பக்க வசனத்தை வெசனமா பேசிட்டு வந்து தன்மானத்தை காப்பத்திக்கிட்டதால, பெருசா விமர்சனம் வராம பார்த்துகிட்டு வண்டி ஓடுது.. அப்படியே கேட்டாலும், கூட்டணி அமைத்தோம், கொள்கை விடவில்லை.. ஒரு கூட்டில் கழுகும் காகமும் தத்தம் கொள்கை விடாது இருத்தல் தவறானு வீர வசனம் பேசவா சொலித்தரணும்.. 1 வருஷமா , 2 வருஷமா... ஓட்டுமொத்தமா கல்லூரி வாழ்க்கை கணக்கா கலைஞர் கிட்ட பாடம் படிச்ச மாணவர் ஆச்சே , சோரம் போவாரா (பேசுறதுல மட்டும்) வைகோவை பார்த்தால் ஆட்றா ராமா, ஆட்றா ராமா..ஆட்றா ராமா.. என் தாளத்துக்கு ஏத்த மாதிரி ஆட்றா ராமா

திருமா - .. பாவம் இவர் பத்தி என்ன சொல்றதுனு தெரியல.. பரிதாபமா இருக்கு. தமிழக காங்கிரஸ் காரனுக்கு வீரம் வந்தது (தன் கட்சியோட கோஷ்டிக்காரன் வேட்டி கிழிப்பை தவிர்த்து) வேற ஒருத்தர் கிட்ட வம்புக்கு போனான்னு சொன்னா அது நம்ம திருமா கிட்ட தான்.. திருமாவும்.. போன் போட்டு போன் போட்டு நாங்க பன்னல, நாங்க பன்னல , எங்க தப்பு இல்லனு சொல்லி சொல்லி அவர் செல்போன் காசும் , பேட்டரி சார்ஜும் போனது தான் மிச்சம்.. அவர் என்ன பன்னுவார் வேற வழி??? காங்கிரஸை ஏதாச்சும் சொல்லப்போய் பெரியவருக்கு கோவம் வந்து போ வெளியே நு அனுப்பிட்டா?? மருத்துவர் தான் இருக்காரேனு நம்பி போயிடமுடியுமா?? .அவருக்கே இன்னும் கதவு திறக்கல.. இவருக்கு போயஸ் தோட்டத்த்கு சந்து கூட திறந்து இருக்குமானு சந்தேகம் தான்..

ஆயிரந்தான் ஈழத்தமிழர் போராட்டம் , உண்ணா விரதம் இருந்தாலும், 2009 இல்லனா கூட 2011 ல நாலு எம் எல் ஏ வாச்சும் வேனுமே... உணர்வுக்கு ஈழத்தமிழர்களா இருந்தாலும் , நாலு எம் எல் ஏ க்கு தமிழனத்தலைவர் தானே.. அவரை திருப்தி படுத்தவாச்சும் அப்படி இப்படி பேசிகிட்டு, கலைஞர் செய்வார், நாளைக்கு செய்வார், நாளை மறுநாள் நிச்சயம் ஏதாச்சும் செய்வார்னு அறிக்கை விட்டு அப்படியே காங்கிரஸ் கிட்ட பவ்யமா போயி காலத்தை ஓட்டனும்.. கூழுக்கும் ஆசை மிசைக்கும் ஆசை.. ! திருமாவை நினைத்தால் ... சிரிக்கறேன், சிரிக்கறேன் சிரிப்பு வரல, அழுகுறேன், அழுகுறேன் அழுகை வரல

ஜெயா, வைகோவுக்கு ஆப்படிக்கும் நாள் தூரத்தில் இல்லை

விடுதலையாகி இன்று வைகோ மதுரை வந்தபோது , சமீபத்தில் கைதான இயக்குனர்கள் அமீர், மற்றும் சீமான் வைகோவை சந்திதார்கள்.

பின்பு பத்திரிக்கையாளர்களிடம் பேசிய வைகோ இது மரியாதை நிமித்த சந்திப்பு என்றும், இந்த இயக்குனர்கள் தமிழகத்தின் உரிமை போராளிகள் என்றும், இவர்களை கைது செய்தது கண்டிக்கத்தக்கது என்று கூறினார்.

இவர்களை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்

வைகோ அண்ணாச்சி, ஜெயிலுக்கு போனா உடனே இழுத்து போர்த்தி தூங்கிடுவீங்களா? பேப்பர் எல்லாம் படிக்கவே மாட்டீங்களா?? அவங்கள கைது செய்ய சொல்லி யார் குரல் கொடுத்தாங்க தெரியுமா?

மதுரையில சொன்னத அப்படியே ரயிலேறி சென்னை வந்து போயஸ் தோட்டத்து பக்கமா பாத்து சொல்லுங்க அண்ணாச்சி.. அப்புறம் அன்பு சகோதரி உங்களுக்கு அடிக்குற ஆப்பு எவ்ளோ பெரிசுனு எல்லோரும் பார்க்கட்டும்..

அன்புச்சகோதரி பயங்கரவாதிகள், தீவரவாதிகள் நு சொல்லுவாங்கலாம்.. அருமை அண்ணன் வந்து தமிழர் நலன் காக்கும் போராளினு சொல்லுவாராம்.. போங்கடா டேய்... !

கலைஞரே - திசைமாறிடுமா தமிழின உணர்வு?

நீண்ட நெடிய மவுனத்திற்கு பிறகு இப்போது தான் தமிழ உணர்வுடன் ஒட்டு மொத்த தமிழகமும் (ஒரு சில மைனாரிட்டி தமிழ் எதிர்ப்பாளர்கள் நீங்கலாக) ஈழத்து தமிழர்களுக்கு ஆதரவாக திரண்டு வந்துள்ளனர்.

ராஜீவ் காந்தியின் சம்பவத்துக்கு பிறகு அமைதி காத்தோம். 18 வருடங்கள் ஈழ ஆதரவு நிலையை வெளிக்காட்டாது, உள்ளேயே பொதித்து வைத்தோம்.. நேர்ந்துவிட்ட ஒரு துன்பியல் சம்பவத்துக்காக தன்டனைக்காலாமான 18 ஆண்டுகள் உருண்டோடி இதோ இப்பொழுது ஒருமித்த கருத்து வந்துள்ளது.

இந்த நேரத்தில் வந்துள்ள வைகோ கைது என்ற செய்தி, இந்த உணர்வை திசை திருப்புமா?

காலையில் ஜெயலலிதாவின் அறிக்கை "விடுதலை புலி ஆதரவு / பிரிவினைவாதம் பேசுவோரை நான் ஆட்சியில் இருந்திருந்தால் கைது செய்து இருப்பேன்" என்று , மாலையில் வைகோ கைது.

கலைஞரே, ஏன் இந்த முடிவு?

நாளை முதல் தலைப்பு செய்திகளில் 'வைகோ கைது' மற்றும் அது தொடர்பான அரசியல் செய்திகள் முன்னிலைப்பட்டு, ஈழம் பற்றிய செய்திகள் பின்னுக்குத்தள்ளப்படுமா?

பலவாறான கருத்துக்கள் வரலாம். வைகோ மட்டும் ஏன் கைது?
விடுதலை புலி ஆதரவு என்றால், ராமதாஸ், பழ நெடுமாறன், பாரதிராஜா, சீமான், அமீர், திருமா என்று பலரை நோக்கி கைகள் நீளலாம்..

இன்று ஈழ்விடுதலைக்காக உங்களுடன் நிற்கும் அனைவரையும் நோக்கி இரு விரல் நீளலாம்.. என்ன செய்வீர்கள்? அனைவரும் உள்ளே சென்று விட்டல் , பிறகு??

இல்லை பிரிவினைவாதம் என்று சொல்லப்பட்டாலும், கேற்றவாறு விரல்களும், கைகளுலும் நீளும்..

நிச்சயம் வைகோவிற்கு பரிந்து இல்லையென்றாலும், ஈழத்து பிரச்சனையில் ஒன்றுப்பட்டோரின் ஒற்றுமையை குலைக்க ஒரு கூட்டம் காத்திருக்கிறது.. என்ன செய்யப்போகின்றீர்கள்?

ஈழத்துப்பிரச்சனைகளை பின்னுக்கு தள்ளிவிட நேரம் பார்த்துக்கொண்டிருக்கும் சில பத்திரிக்கை, தொலைகாட்சி ஊடகங்களும், வைகோ கைதினை வைத்து நடுவில் புகுந்து குட்டையை குழப்பிடுவார்களோ?

குறிப்பாக தங்களின் (உள்நாட்டு) !! பிரச்சனைக்காக, தங்களை தற்காத்துக்கொள்ள சன், தினகரன் எப்போது தமிழக அரசியலில் குழப்பம் ஏற்படுத்தி ஆதாயம் கானலாம் என்று காத்திருக்கிறது.. அதே போல, இந்து, தினமலர் போன்ற பத்திரிக்கைகள் உங்களுக்கே தெரிந்த காரணங்களுக்காக ஈழம் குறித்து ஏற்பட்டிருக்கும் ஒற்றுமையை எப்படி திசை திருப்பலாம் என்று காத்திருக்கிறது.. இந்த நிலையில் அவர்களுக்கு இந்த செய்தி அல்வா சாப்பிட்டது போல் ஆகாதா?

ஜெயலலிதா தந்திரமாக ஒரு சித்து விளையாட்டு விளையாடிவிட்டாரோ என தோண்றுகிறது

இலங்கை பிரச்சனை பேசியதற்கு வைகோ கைது என்று திரித்து பாமரனை நம்ப வைத்திடும் அளவுக்கு சாமர்த்தியம் நிறைந்தவர்கள் நம் பத்திரிக்கையாளர்கள்..

மேலும் மூக்கு , கண் , காது வைத்து சின்டு முடித்து, இந்த பிரச்சனையை முன்னுக்கு எடுத்து வந்து ஈழப்பிரச்சனையை பின்னுக்கு தள்ளிட சாமர்த்தியம் நிறைந்த கழுகார்களும், வம்பானந்தாக்களும், ராங் கால் ராஜாக்களும் இங்கே அதிகம்.

கலைஞரே, இந்த கைதின் காரணத்தை தெளிவாக மக்களிடம் எடுத்து செல்லவேண்டிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது.. நிச்சயம் இப்போது உங்களோடு கைக்கோர்த்திருக்கும் தமிழீழ ஆதரவாளர்களிடம் இருந்தும் கேள்விக்கனைகள் வரலாம். அதனை எப்படி எதிர்கொன்டு, இந்த கைது ஏற்படுத்தப்போகும் அரசியலில் சுழலில் சிக்கிவிடாமல், சீரழிந்து விடாமல் இந்த ஈழ உணர்வை எடுத்து செல்ல வேண்டிய கடமையும் உங்களுக்குள்ளது.

வைகோ மேல் பல அதிருப்தி இருந்தாலும், இந்த நேரத்தில் ஒரு தமிழ் ஈழ உணர்வாளனை (அரசியல் காரணமாக எதிரனியில் இருந்தாலும்) சிறை கம்பிக்குள் அடைத்து வைப்பது சற்று கஷ்ட்டமாகவே உள்ளது.. நீண்ட நாட்கள் அவரை முடக்கி விட வேண்டாம்..

மாநிலங்களவை தேர்தல் - சபாஷ் வைகோ, சறுக்கல் ஜெ.

பல வருடங்களுக்கு பிறகு முதன்முறையாக நல்ல முடிவை எடுத்துள்ளார் வைகோ. முதுகெலும்பு வலையாமல் ஒரு சுயமான முடிவு.

தோல்விக்குத்தான் அதிக வாய்ப்புள்ள 7 வது மாநிலங்களவை சீட்டை தாராளமாக விட்டு தருவது போல் விட்டுத்தந்த அம்மாவின் முகத்திலடித்தார்போல் போட்டியிடப்போவது இல்லை என்ற அறிவிப்பு கொடுத்த வைகோ வை பாராட்டலாம்.

அதிமுக போட்டியிட்டிருந்தால் கூட பரவாயில்லை, ஆனால் மதிமுக போட்டி என்று வந்திருந்தால், ஆளும் தி மு க எந்த விலை கொடுத்தாவது மதிமுகவின் தோல்வியை உறுதி செய்ய முயன்று அதில் நிச்சயம் வெற்றியும் பெற்றிருக்கும்.

அது மட்டுமின்றி, போட்டி என்பதை ம தி மு கவினர் பலரே ஏற்றுக்கொண்டிருக்கமாட்டார்கள். அதிலும் போட்டியிட்டு தோல்வி என்பது மிக மோசமான நிலையாகவே இருந்திருக்கும். மதிமுகவிற்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச மானம் மரியாதையும் காற்றில் பறந்திருக்கும்.

ஆக, இந்த ஒரு விஷயத்திலாவது, வைகோ கொஞ்சம் சுயமாக யோசித்து முடிவெடுத்துள்ளார்.

இந்த மாநிலங்களவை தேர்தல் மூலம் அம்மாவிற்கு 2 சறுக்கல்கள்.. ஒன்று மதிமுகவுடன் சலசலப்பு.. இரண்டாவது வக்கில் ஜோதி.

இதுவரை 'ஜெ'வின் பல வழக்குகளில் ஆஜராகி வந்த ஜோதி தனக்கு சீட் இல்லை என்றதும் அ தி மு க வில் இருந்து விலகியது மட்டுமின்றி, தான் ஆஜராகி வந்த ஜெ , மற்றும் அதிமுகவினரின் அனைத்து வழக்குகளில் இருந்தும் தன்னை விடுவித்துக்கொண்டார். ஜெ க்கு மட்டும் தான் ஆப்படிக்க தெரியுமா என்ன? ஜோ விற்கும் தெரியும் போல. ஜெ வின் பிரதான வக்கீல் என்ற முறையில் அவருக்கு ஜெ பற்றிய பல திரைமறைவு விஷயங்கள் தெரிந்திருக்க வாய்ப்பு அதிகம்.

ஜோதி எந்த மாதிரி முடிவெடுக்க போகிறார்? ஆளும் கட்சி ஜோதியை எப்படி பயன்படுத்திக்கொள்ளும் என்று பொருத்திருங்து பார்க்கவேண்டும்.. பல அதிசய காட்சிகள் அரங்கேறும் வாய்ப்புள்ளது

யார் யாரையோ எப்படி எப்படியோ சமாளித்த ஜெயாவிற்கு ஜோதி பெரிய விஷயமில்லை என்றாலும், நிச்சயமாக ஜெவிற்கு இது சறுக்கலே..

சத்தியமூர்த்தி பவனில் வெட்டுக்குத்து , வேட்டி சேலை கிழிப்பு எதுவுமில்லாமல் , ஜெயந்தியும் , வாசனும் தெரிவாகி இருப்பதும் ஒரு ஆறுதல்.. வாழ்க காங்கிரஸ் ஜனநாயகம் :)

அதல்லாம் விடுங்க.. இப்படி தெரிவாகி போகும் நம்ம மாநிலங்களவை எம் பிக்கள் , அங்கே போய் அப்படி என்னத்த கிழிக்கிறாங்கனுத்தான் ஒன்னும் புரியல.. யாராச்சும் தெரிஞ்சா சொல்லுங்க..