கலைஞரே - திசைமாறிடுமா தமிழின உணர்வு?
நீண்ட நெடிய மவுனத்திற்கு பிறகு இப்போது தான் தமிழ உணர்வுடன் ஒட்டு மொத்த தமிழகமும் (ஒரு சில மைனாரிட்டி தமிழ் எதிர்ப்பாளர்கள் நீங்கலாக) ஈழத்து தமிழர்களுக்கு ஆதரவாக திரண்டு வந்துள்ளனர்.
ராஜீவ் காந்தியின் சம்பவத்துக்கு பிறகு அமைதி காத்தோம். 18 வருடங்கள் ஈழ ஆதரவு நிலையை வெளிக்காட்டாது, உள்ளேயே பொதித்து வைத்தோம்.. நேர்ந்துவிட்ட ஒரு துன்பியல் சம்பவத்துக்காக தன்டனைக்காலாமான 18 ஆண்டுகள் உருண்டோடி இதோ இப்பொழுது ஒருமித்த கருத்து வந்துள்ளது.
இந்த நேரத்தில் வந்துள்ள வைகோ கைது என்ற செய்தி, இந்த உணர்வை திசை திருப்புமா?
காலையில் ஜெயலலிதாவின் அறிக்கை "விடுதலை புலி ஆதரவு / பிரிவினைவாதம் பேசுவோரை நான் ஆட்சியில் இருந்திருந்தால் கைது செய்து இருப்பேன்" என்று , மாலையில் வைகோ கைது.
கலைஞரே, ஏன் இந்த முடிவு?
நாளை முதல் தலைப்பு செய்திகளில் 'வைகோ கைது' மற்றும் அது தொடர்பான அரசியல் செய்திகள் முன்னிலைப்பட்டு, ஈழம் பற்றிய செய்திகள் பின்னுக்குத்தள்ளப்படுமா?
பலவாறான கருத்துக்கள் வரலாம். வைகோ மட்டும் ஏன் கைது?
விடுதலை புலி ஆதரவு என்றால், ராமதாஸ், பழ நெடுமாறன், பாரதிராஜா, சீமான், அமீர், திருமா என்று பலரை நோக்கி கைகள் நீளலாம்..
இன்று ஈழ்விடுதலைக்காக உங்களுடன் நிற்கும் அனைவரையும் நோக்கி இரு விரல் நீளலாம்.. என்ன செய்வீர்கள்? அனைவரும் உள்ளே சென்று விட்டல் , பிறகு??
இல்லை பிரிவினைவாதம் என்று சொல்லப்பட்டாலும், கேற்றவாறு விரல்களும், கைகளுலும் நீளும்..
நிச்சயம் வைகோவிற்கு பரிந்து இல்லையென்றாலும், ஈழத்து பிரச்சனையில் ஒன்றுப்பட்டோரின் ஒற்றுமையை குலைக்க ஒரு கூட்டம் காத்திருக்கிறது.. என்ன செய்யப்போகின்றீர்கள்?
ஈழத்துப்பிரச்சனைகளை பின்னுக்கு தள்ளிவிட நேரம் பார்த்துக்கொண்டிருக்கும் சில பத்திரிக்கை, தொலைகாட்சி ஊடகங்களும், வைகோ கைதினை வைத்து நடுவில் புகுந்து குட்டையை குழப்பிடுவார்களோ?
குறிப்பாக தங்களின் (உள்நாட்டு) !! பிரச்சனைக்காக, தங்களை தற்காத்துக்கொள்ள சன், தினகரன் எப்போது தமிழக அரசியலில் குழப்பம் ஏற்படுத்தி ஆதாயம் கானலாம் என்று காத்திருக்கிறது.. அதே போல, இந்து, தினமலர் போன்ற பத்திரிக்கைகள் உங்களுக்கே தெரிந்த காரணங்களுக்காக ஈழம் குறித்து ஏற்பட்டிருக்கும் ஒற்றுமையை எப்படி திசை திருப்பலாம் என்று காத்திருக்கிறது.. இந்த நிலையில் அவர்களுக்கு இந்த செய்தி அல்வா சாப்பிட்டது போல் ஆகாதா?
ஜெயலலிதா தந்திரமாக ஒரு சித்து விளையாட்டு விளையாடிவிட்டாரோ என தோண்றுகிறது
இலங்கை பிரச்சனை பேசியதற்கு வைகோ கைது என்று திரித்து பாமரனை நம்ப வைத்திடும் அளவுக்கு சாமர்த்தியம் நிறைந்தவர்கள் நம் பத்திரிக்கையாளர்கள்..
மேலும் மூக்கு , கண் , காது வைத்து சின்டு முடித்து, இந்த பிரச்சனையை முன்னுக்கு எடுத்து வந்து ஈழப்பிரச்சனையை பின்னுக்கு தள்ளிட சாமர்த்தியம் நிறைந்த கழுகார்களும், வம்பானந்தாக்களும், ராங் கால் ராஜாக்களும் இங்கே அதிகம்.
கலைஞரே, இந்த கைதின் காரணத்தை தெளிவாக மக்களிடம் எடுத்து செல்லவேண்டிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது.. நிச்சயம் இப்போது உங்களோடு கைக்கோர்த்திருக்கும் தமிழீழ ஆதரவாளர்களிடம் இருந்தும் கேள்விக்கனைகள் வரலாம். அதனை எப்படி எதிர்கொன்டு, இந்த கைது ஏற்படுத்தப்போகும் அரசியலில் சுழலில் சிக்கிவிடாமல், சீரழிந்து விடாமல் இந்த ஈழ உணர்வை எடுத்து செல்ல வேண்டிய கடமையும் உங்களுக்குள்ளது.
வைகோ மேல் பல அதிருப்தி இருந்தாலும், இந்த நேரத்தில் ஒரு தமிழ் ஈழ உணர்வாளனை (அரசியல் காரணமாக எதிரனியில் இருந்தாலும்) சிறை கம்பிக்குள் அடைத்து வைப்பது சற்று கஷ்ட்டமாகவே உள்ளது.. நீண்ட நாட்கள் அவரை முடக்கி விட வேண்டாம்..