ஞாநியும் அவர் யோசனைகளும்.

இது ஒரு தொடர்கதையாகிவிட்டது. ஞாநி பக்கங்கள் எழுதுவதும் அது சர்ச்சையாவதும். 2 வரிகள் ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில் எழுதிவிட்டு, 25 வரிகளை கட்டுரையை நிரப்ப எழுதுவதை ஞாநி வழக்கமாக்கிகொண்டுள்ளார்.

ஆக்கப்பூர்வமான விஷயங்கள் எழுதுவதை விடுத்து, தன் தனிப்பட்ட விருப்பு வெறுப்பை தினிப்பதாகவே அவரின் பக்கங்கள் போகிறது.

இந்த வார பக்கத்தை பெட்ரோல் விலை ஏற்றம் குறித்து எழுதி நிரப்பியுள்ளார்.. அவர் விலையுர்வு பற்றி எழுதியுள்ளது, வரி விதிப்பு , அரசியல் பற்றி எழுதியது ஒரு பக்கம்..

ஆனால் சில யோசனைகளை அவர் கூறியுள்ளது தான் வியப்பாக உள்ளது. யோசித்து தான் எழுதினாரா.. அல்லது நக்கல் அடித்து யோசனைகள் தெரிவித்துள்ளாரா புரியவில்லை.

யோசனை 1. கார், டூவீலருக்கு லிட்டர் விலை: ரூ 100. விமான பெட்ரோலுக்கு சலுகை எதுவும் கூடாது. ஆட்டோ, சரக்கு லாரிகள், ரயில் எஞ்சின் முதலியவற்றுக்கான பெட்ரோல், டீசலுக்கு மட்டுமே சலுகை விலை.

மக்களிடம் அநியாய வசூல் செய்யும் ஆட்டோக்கு சலுகை விலை, கஷ்டப்பட்டு உழைத்து டூவீலர் கார் வாங்கியவருக்கு 100 ரூ. அதிலும் அவர் அரசுக்கு வரி கட்டுபவர். ஆட்டோ ஓட்டுனர் வரி கட்டுகிறாரா என்று தெரியவில்லை.. அல்லது டூ வீலர் வைத்திருப்பவர்கள் எல்லாம் வசதி படைத்தவர்கள் , அவர்கள் நடுத்தர வர்க்கம் என்பது ஞாநியின் வாதமா??

யோசனை 2. பள்ளி, கல்லூரி மாணவர்கள் யாரும் டூவீலர் ஓட்ட அனுமதியில்லை. சைக்கிளை மட்டுமே பயன்படுத்தலாம். உடலுக்கும் நல்லது. பர்ஸுக்கும் நல்லது.

யோசனை 3. சைக்கிளில் சென்று வரும் தொலைவில் வீடு உள்ளவர்களுக்கு மட்டுமே அந்தந்த வட்டாரப் பள்ளி,கல்லூரிகளில் அட்மிஷன் தரப்படவேண்டும்.

ஒன்றோடு ஒன்று தொடர்புடை இந்த 2 யோசனைகள் பற்றி என்ன சொல்ல??

ஞாநி அவர்களே, என்ன பிரச்சனை உங்களுக்கு, நீங்கள் கருணாநிதிக்கு அறிவுரை சொன்னது போல, நீங்களும் எழுத்துப்பனியில் இருந்து ஒய்வு பெற்று,அமைதி காணலாம். ஒரு நல்ல சைக்காட்ரிஸ்ட்டை பார்க்கலாம்.

சைக்கிளில் சென்று வரும் தூரம் என்பதற்கு என்ன அளவுகோல் வைப்பீர்கள்? ஓரு வேளை அப்படி சேர்த்த பிறகு, ஒரு மாணவன் சூழ்நிலை காரணமாக வீடு மாறினால், உடனடியாக டி. சி கொடுத்துவிடுவீர்களா?

இன்றைய சூழலில் நடுத்தர வர்கத்தினர், நகர்புறத்திற்கு சற்று தள்ளி வீடு கிடைத்தாலும் தங்கள் பட்ஜெட்டுக்கு அடக்கமாக இருக்கட்டும் என்று, வீடு வாங்குவதோ அல்லது வாடகைக்கோ செல்கிறார்கள். அந்த நிலையிலும், தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல கல்வி கிடைக்கு வீட்டிலுருந்து சற்று தள்ளி இருக்கும் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்புகிறார்கள். நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் சார்?

அந்த பள்ளிக்கு அருகில் எவ்வளவு விலை இருந்தாலும் அங்கே தான் வீடு வாங்க வேண்டும், அல்லது குடி புக வேண்டுமா? இல்லை, வீட்டின் அருகில் இருக்கும் ஏதோ ஒரு பள்ளியில் படிக்க வைக்கட்டும் என்றா??
பள்ளிகள் இப்போது வேன், பஸ் வசதி செய்து தருகிறதே, அவர்களுக்கு என்ன விலை பெட்ரோல் தரலாமென்று சொல்லுங்களேன்?

யோசனை 4. அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் அன்றாடம் பஸ், ரயில்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

கிழிஞ்சது கிருஷ்ணகிரி, ஏற்கனவே அவங்கவங்க கார் ல போகும் போதே பொது மக்கள் படும் அவஸ்தை தாங்கல, இதுல இவங்களும் பஸ், ரயில்னு வந்துட்டா.. அவ்ளோதான்.. மான்புமிக... . பயனம் செய்யும் பேருந்து, ரயில்னு பேருந்து நிலையம், ரயில் நிலையம் அமர்களப்படும்.. நல்லாத்தான் இருக்கும்..

யோசனை 5. நகரிலும் எந்தச் சாலையிலும் புதிய மேம்பாலங்கள் அடுத்த பத்தாண்டுகளுக்குக் கட்டக் கூடாது. புதிய உள்ளூர் ரயில் திட்டங்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு.

நல்லதொரு யோசனை.. எறும்புக்கு பயந்து வீட்டை கொளுத்துடா நு சொல்றீங்க.. இந்த யோசனையால் என்ன சாதிக்க முடியும்? இதுக்கு பெட்ரோல் விலைக்கும் என்ன சம்பந்தம்..

பாலம் எல்லாம் சிமென்ட் - தண்ணி கலந்து தானே கட்டுறாங்க?? இல்லை சிமென்ட் டீசல் கலந்து கட்டுறாங்களா?

, ஒரு வேளை பாலங்கள் இல்லாமல், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால், மக்கள் டூ வீலர், கார் வாங்க பயப்படுவாங்களா?? அப்படி பார்த்தா , இதே கட்டுரையில் நீங்க சொன்ன கூடுதல் பஸ் விடும் மேட்டர் எப்படி?? அந்த கூடுதல் பஸ் எல்லாம் போக்குவரத்து நெரிசல் இல்லாம எப்படி போகும்?? ஓ போட வைத்த இது தான் "ஓ" பக்க யோசனை

அப்படியே பத்தாண்டுக்கு எந்த திட்டமும் போடகூடாது, எந்த வளர்ச்சி பனிகளும் நடக்ககூடாது, அரசாங்கத்தை முடக்கிட்டா, வேலை வாய்ப்பு இல்லாம பன்னிட்டா.. யாரும் வெளிய போற வேலை இருக்காது, டூ வீலர், கார், பஸ் ஓடவேண்டிய அவசியமில்லாம, பெட்ரோல் விலை தானா குறைந்திடும்நு ஒரு யோசனை சொல்லுங்களேன்..

யோசனை 7. ஒரு காரில் ஒருவர்/இருவர் மட்டுமே பயணம் செய்வதைக் கண்டால், ஸ்பாட் ஃபைன் போடப்படும்.

இந்த யோசனை தான் டாப்.. இதை போய் 7 வது யோசனையா சொல்லிட்டீங்களே. இது தான் நெ 1 ல இருக்கனும்..
ஒரு குடும்பத்துல 4 பேரு. அப்பா, அம்மா 2 குழந்தைகள். காலைல எல்லோரும் கிளம்பி 2 குழந்தைகளை பள்ளில விட்டுட்டு அங்கிருந்து 2 கிமீ தூரத்துல இருக்க அலுவலகத்துல மனைவியை விட்டுட்டு அங்கிருந்து 5 கிமீ தூரம் இருக்கும் தன் அலுவலகத்துக்கு கனவர் போகிறார்,
இப்போ எப்படி, எங்கெல்லாம் ஸ்பாட் ஃபைன் போட வேண்டும்?

நமக்கே ஒரு அவசரமென்றால், டூ வீலர் எடுத்துக்கொண்டு ஓடுவோம்.. அந்த நேரத்தில் அக்கம் பக்கம் வீடுகளில் விசாரித்து யாரையாவது கூட்டிக்கொண்டு போகவேண்டுமா? இல்லை ஸ்பாட் ஃபைன் தவிர்க்க சும்மான்வானும் ஒருவரை பின்னால் அமர வைத்து செல்லவேண்டுமா?

அப்படியே அரசாங்க பேருந்து கூட்டம் இல்லாமல் சென்றால் அதற்கும் ஸ்பாட் ஃபைன் போடலாமா?

இருந்தாலும் உங்க இந்த யோசனை டராபிக் கான்ஸ்டபிள், போலிஸ்காரர்களுக்கு சர்க்கரை பொங்கல் தான்.. கல்லா கட்டலாமே...

இந்த யோசனைகளுக்காக உங்களுக்கு ஸ்பெஷல் ஓ போடலாம் திரு
யோசனை திலகம் ஞாநி அவர்களே.

காசா , பணமா, இன்னும் நிறைய யோசனை சொல்லுங்க அடுத்த ஓ பக்கத்துல.. எப்படி பண வீக்கத்தை குறைக்கலாம், எப்படி வேலை வாய்ப்பை பெருக்கலாம்னு..

நன்றி

தசாவதாரம் பார்த்தவர்களே.. - ப்ளீஸ் யாராவது சொல்லுங்களேன்

தசாவதாரம் ரீலிஸான தியேட்டர்களின் எண்ணிக்கையை விட இங்கே தசாவதாரம் படம் பற்றிய விமர்சன பதிவுகள் அதிகம்..

பல படத்தை புகழ்ந்தும், வெகு சில படம் நல்ல இல்லை என்றும் எழுதப்பட்டுள்ளது. மிகச்சிலர் வழக்கம் போல இதனையும், பார்பனீயம் அது இது என்று உளறிக்கொட்டியுள்ளார்கள்..

படம் பார்த்த மக்களே இங்கே எனக்கு 2 விஷயங்களை மட்டும் தெளிவு படுத்துங்களேம்.. தயவு செய்து.. இது தெரியாமல் சிந்து பைரவி ஜனகராஜ் நிலையில் இருக்கின்றேன்...

1. உங்கள் விமர்சனம் படிக்கும் போது , கதை என்பது ஒரு அரிய கண்டுபிடிப்பை தீவரவாதிகள் கையில் சிக்காமல் காப்பற்ற நடக்கும் நிகழ்வுகள் என்று தெரிகிறது. கமலின் பல வேடங்கள் இந்த கதையின் ஓட்டத்தில் எப்படி சேரும் என்று ஓரளவு ஊகிக்க முடிகிறது ஆனால், இந்த ரங்கராஜன் கேரக்டரும், 12, நூற்றாண்டு நிகழ்வுகளும், சைவ - வைணவ போராட்டங்களும் ஏன்? இந்த கதையோட்டத்தில் எப்படி ஒன்றி வருகிறது என்று யாரும் எழுத வில்லையே ஏன்? அது மிகப்பெரிய சஸ்பென்ஸா???

2. இந்த படத்தில், சைவ , வைணவ சன்டை காட்சி.. ரங்கநாதருடன் கமலை கட்டி கடலில் போடுவது, கீதை மேல் நிற்பது போன்று பல காட்சிகள் இருப்பதாக வழக்கு தொடரப்பட்டு , அவை தள்ளுபடி செய்யப்பட்டது அனைவரும் அறிந்ததே.

நீதிமன்றமும், படத்தை பார்த்துவிட்டு ஆட்சேபம் இருந்தால் வழக்கு போட சொல்லியுள்ளது..

படம் பார்த்தவர்களே சொல்லுங்கள்.. மீன்டும் வழக்கு போட முகாந்திரம் உள்ளதா?? ட்ரையிலரில் பார்த்தது போல, கடவுள் சிலையுடன் கமலை கட்டி கடலில் போடுவது போல இருக்கிறதா?? ஆட்சேபத்திற்குறய காட்சிகள் உள்ளதா??

விமர்சனங்கள் படித்த போது, சைவ , வைணவ சன்டை இருப்பதாக, கடலில் வீசும் காட்சிகள் இருப்பதாக தெரிகிறது.. ஆனால் தெளிவாக யாரும் அது பற்றி எழுதாததால், புரியவில்லை..

படம் பார்த்து விமர்சனம் எழுதிய யாரும் இது பற்றி எழுதாததால் இந்த பதிவு போடும்படி ஆகிவிட்டது.. !!!

குறிப்பாக , சர்ச்சையை கிளப்பிய 2 வது விஷயம் பற்றியாவது எழுதியிருக்கலாம் நன்பர்களே.. லக்கியார் எழுதியிருப்பார் என நினைத்தேன்.. விட்டு விட்டார்..

படம் பார்த்தவர்களே, கொஞ்சம் தெளிவுப்படுத்துங்களேன்..
நன்றி..

யதார்த்தம் - சிறுகதை

சற்றே பெரிய சிறுகதை ...

வடபழனிக்கு ஒரு வேலையாக வந்தேன். வந்ததே வந்தோம் முருகனை பார்த்துட்டு போகலாம்னு கோவிலுக்கு போய் தரிசனம் செய்துவிட்டு, பிரகாரம் சுற்றிவிட்டு, ஒரமாக இடம் பார்த்து அமர்ந்தேன்.

எதேச்சையாக, என்னை கடந்து சென்ற ஒரு உருவத்தை பார்த்தேன்.

கருநீல புடவையில், சரியாக பார்க்கும் முன்பே என்னை கடந்துவிட்டாள்.
அவளாக இருக்குமோ? சரியாக பார்க்கலயே. அடச்சே, கொஞ்சம் வேகமா திரும்பி பார்த்திருக்கலாமே... என்னையே நொந்துக்கொண்டேன்.

அவளாக இருக்க கூடாது என்று ஒரு பக்கம், ஆனால் பாழாய் போன மனது அவளாக இருக்கட்டுமே என்று ஆசைப்பட்டது.

சரி, எப்படியும் சுற்றிக்கொண்டு இந்தப்பக்கம் தானே வரவேண்டும். எதிர்புறத்தை பார்த்து கண்கள் காத்துக்கொண்டிருக்க, மனது மெல்ல மூண்றாண்டுகள் பின்னோக்கி சென்றது.

விசிட்டர் என்ற செய்தி கேட்டு, அலுவலக வரவேற்பறைக்கு சென்றேன்.. அங்கே HSBC அடையாள அட்டையுடன் ஒரு வாலிபர், நடுத்தர வயது பெரியவர் ஒருவர் மற்றும் சுமார் 23, 24 வயது பெண் ஒருவரும் அமர்ந்திருக்க, இதில் யார் நம்மை பார்க்க, என்ற குழப்பத்தோடு மூவருக்கும் நடுவே நின்று பொத்தாம்பொதுவாக ஐ ஆம் சுரேஷ் என்றேன்.

ஹலோ சார், மென்மையான குரலில் அந்த பென்.. இந்த பெண்ணா?? நம்மை பார்க்கவா? வியப்போடும் , தயக்கத்தோடும்.. ஹலோ என்றேன்.
நீங்க.........?

என் பெயர் சுதா.. அறிமுகப்படுத்திக்கொண்டாள்.. என் குழப்பத்தை புரிந்துக்கொண்டிருப்பாள் போல, உடனடியாக உங்க நன்பன் குமார் அனுப்பினார், வேலை விஷயமாக.. சுருக்கமாக சொல்லி முடித்தாள்.

என் கல்லூரி நன்பன் குமார், நேற்று என்னை தொலைப்பேசியில் அழைத்து, தன் தூரத்து உறவுக்கார பெண் ஒருவர் வேலை தேடுவதாகவும், முடிந்த உதவியை செய்யும்படி கேட்டிருந்தது சட்டென்று நினைவக்கு வந்தது

வாருங்கள் என்று அந்த பெண்ணை அழைத்துக்கொண்டு கேண்டினுக்கு சென்றேன்.

டீ ஆர் காபி என்றேன்..

வேண்டாம் சார், நளினமாக மறுத்தாள்.

பரவாயில்லை சொல்லுங்க, நோ பார்மாலிட்டிஸ் என்றேன்..

காபி என்றாள்.

இருவருக்கும் காபி சொல்லிவிட்டு அமர்ந்தோம்.

சார், குமார் சொல்லிருப்பாரு, வேலை விஷயமாக அடுத்த வாரம் தான் உங்களை பார்க்க சொன்னார், பட் இந்த பக்கம் ஒரு வேலையா வந்தேன்..அதான் இப்பவே பார்த்துட்டு போகலாமேனு.. தயக்கமாக பேசினாள்.

நோ பராப்ளம், சொல்லுங்க, என்ன படிச்சிருக்கீங்க, எனி எக்ஸ்பீரியன்ஸ் கேள்விகளை அடுக்கினேன்.

எம் சி யே சார், 2 வருடம் எக்ஸ்பீரியன்ஸ் சார், JAVAவில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறேன் சார். சொல்லி முடித்தாள்.

வரும்போதே பை நிறைய எடுத்து வந்திருக்கீங்களா இல்லை வழியில சீப்பா இருக்குனு வாங்கிட்டு வந்தீங்களா??

சற்று குழப்பமாக பார்த்தாள்...என்னது சார்?

இல்லை, இவ்ளோ "சார்" சொல்றீங்ளே அதான் கேட்டேன்..

மெதுவாக சிரித்து வைத்தாள், சரியான கடி என்று மனதிற்குள் நினைத்திருக்கலாம்.

சுரேஷ்னே கூப்பிடுங்க என்றேன்..காபி வந்தது, பேசிக்கொண்டே இருவரும் குடித்து முடித்தோம்.. செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை பரிமாறிக்கொண்டு விடைப்பெற்றுச்சென்றாள்.

மீண்டும் என் இடத்திற்கு வந்த அமர்ந்தேன்.. அவளை பற்றி அப்போது தான் சற்று யோசித்துப்பார்தேன்.

அளவான உயரம், சுமார் என்று சொல்ல முடியாத அதே நேரத்தில் அழகு தேவதை என்றும் சொல்ல முடியாத, பார்ப்பவரை மீண்டும் ஒரு முறை நிச்சயம் திரும்பி பார்க்க செய்யும் வசீகரமான முகம். அழகாகத்தான் இருக்கிறாள். நினைவகளோடு வேலையில் மூழ்கிப்போனேன்..

மறுநாள் சுதாவிடம் இருந்து மின்னஞ்சல்,

ஹலோ சுரேஷ், தங்கள் நேரத்துக்கு மிக்க நன்றி, காபிக்கும் சேர்த்து.
இதனோடு என் பயோடேட்டா இனைத்துள்ளேன், மிக்க நன்றி, சுதா என்று சுருக்கமாக இருந்தது.

அவளின் பயோடேட்டாவை ஒருமுறை பார்த்துவிட்டு, சிறு மாற்றங்கள் செய்து, எங்கள் அலுவலக தேர்வுக் குழுவிற்கு அனுப்பி வைத்தேன்.

ஒரு சனிக்கிழமை காலை 8.30 மனி இருக்கும்.. எழுந்திருக்கலாமா வேண்டாமா என்ற என்னத்தில் படுத்திருந்த என்னை செல்போன் மனி எழுப்பியது. எடுத்து ஹலோ என்றேன்.

ஹலோ சுரேஷ், சுதா ஹியர், குட் மார்னிங். சற்று சகஜமாகி இருந்தாள்..

ஹாய், குட் மார்னிங் எப்படி இருக்கீங்க.. என்ன ஆச்சு? நேர்முக தேர்வுக்கு அழைப்பு ஏதாச்சும் வந்ததா? ஆவலாக கேட்டேன்.

"யெஸ்", நேற்று மாலை உங்க எச்-ஆர் கிட்ட இருந்து போன் வந்தது, திங்கட்கிழமை 11 மனிக்கு நேர்முக தேர்வு. உங்க கிட்ட சொல்லலாம்னு போன் பன்னேன்.

குட், ஆல் தி பெஸ்ட் , சில பொதுவான விஷயங்களை பேசிவிட்டு, நேர்முக தேர்வுக்கு சில குறிப்புகள் கொடுத்தேன்..

நேர்முக தேர்வு முடிந்தது.. நன்றாக செய்ததாகவும், தேர்வாகிவிட்டதாகவும் தொலைபேசியில் அழைத்து சொன்னாள், சந்தோஷமாக இருந்தது..

நான்கு நாட்களில் வேலைக்கு சேர்ந்தாள்.

அவ்வப்போது இருவரும் சந்தித்துக்கொண்டோம், நிறைய பேசினோம்.. ஒரிரு மாதங்களிலேயே நல்ல நன்பர்களாகிப்போனோம்..நளினமாக உடையனிந்து அவள் கடக்கும் போது பலரின் பார்வை அவள் மேல் மொய்த்தது எனக்கு பொறாமையாகவும் இருந்தது.

என்னடா மாப்ளே, உன்னை அடிக்கடி சுதா கூட பாக்கறோம்..என்ன மேட்டரு??? மச்சம்டா உனக்கு.. சூப்பர் ஆளுடா .. கலக்கு.. நன்பர்கள் நக்கலடித்தனர்..

டேய் அப்படியெல்லாம் இல்லடா , பொய் கோபம் காட்டினாலும் மனசுக்குள் சந்தோஷமாகவே இருந்தது..

ஆறு மாதங்கள் உருண்டோடியது, இந்த ஆறு மாதத்தில் இருவரும் இன்னும் மிக நெருங்கிய நன்பர்களாகி இருந்தோம்..வாங்க , போங்க எல்லாம் வா போ என்றானது. அவளுக்கு என்ன என்ன பிடிக்கும் என்று நானும் , எனக்கு என்ன பிடிக்கும் என்று அவளும் விரல் நுனியில் வைத்திருக்கும் அளவிற்கு மிக நெருங்கிய நன்பர்களாகிப்போனோம்சில முறை அவள் என் வீட்டிற்கும் , பல முறை அவள் வீட்டிற்கு நானும் சென்று வந்திருந்தோம்...

மேலும் 2 மாதங்களுக்கு பிறகு, ஒரு நாள் காண்டீனில், சமேசா ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்த நேரத்தில் .

என்ன சுதா, அப்புறம் என்ன விஷயம்?

உங்கிட்ட பேசறதுக்கு எதுவும் இல்லையா? கேள்விக்கு எதிர் கேள்வி கேட்டாள்.

அப்படி இல்லை , சரி சொல்லு, லாஸ்ட் டைம் உங்க வீட்டுக்கு வரும் போது அம்மா சொன்னாங்களே, அது என்ன?

...என்ன சொன்னாங்க? இது சுதாவின் எதிர்கேள்வி.

நீயும் தானே அங்கே இருந்தே .... சுதாவின் திருமணம் பற்றிய பேச்சு வந்தது .. அவள் வாயாலேயே ஆரம்பிக்க வேண்டுமென எதிர்பார்த்து கேள்வியை வீசினேன்..

ஓ!! அதுவா, ஆமாம்பா உண்மையாதான்யா, எதிர் வீட்டு பசு நிஜமாவே ஒரே பிரசவத்துல 2 குட்டி போட்டுச்சு .. அமைதியாக சொல்லிவிட்டு ஒரு பார்வை பார்த்தாள்.

எனக்கு ரொம்ப முக்கியம் அது.. அந்த பசு 2 குட்டி போட்டா என்ன , 20 குட்டி போட்டாத்தான் எனக்கென்ன?

ஓ! அப்போ எங்க வீட்டுக்கு நீ வந்தா, எங்கம்மா உன்கிட்ட தேவையில்லத விஷயத்தை எல்லாம் பேசுறாங்கனு சொல்றீயா?.. என்னை
வம்புக்கிழுத்தாள்.

ஐயோ என்னமா நீ, சரி சரி, உன் கல்யாண விஷயம்ப்பா... சொல்லிமுடித்துவிட்டு.. சே! என்ன மனுஷன்டா நீ, ஒரு பொன்னுகிட்ட பேசி விஷயத்தை வரவழைக்க முடியல . சரண்டர் ஆயிட்டே? மனதுக்குள் சொல்லிக்கொண்டேன்..

ஹ்ம்ம்.. அதை நேரடியா கேட்க என்னடா(அப்பப்போ இதுவும் உண்டு) தயக்கம் உனக்கு ? மீண்டும் கேள்வி வந்தது.

அம்மா தாயே, கேள்விக்கு எதிர் கேள்வி கேட்காம பதில் சொல்லமாட்டீயா நீ?ஆர்டர் பன்ன சமோசா வந்தது. பதில் வரலயே என்றவாறே சுமதியை பார்த்துக்கொண்டே சமாசாவை கையிலெடுத்தேன்...

ஒரு வாரமாவே இந்த பேச்சு வீட்ல போயிட்டு இருக்கு சுரேஷ்.

நீ என்ன சொன்னே சுதா? சமோசாவை கடித்துக்கொண்டே கேட்டேன்..

நான் எதுவும் சொல்லலயேமா, எனக்கும் சேர்த்து தானே நீ சமோசா சொன்னே? கடித்தாள்

ப்ளீஸ், சற்று கோபமாகவே சொன்னேன்...

சரி சரி , சாரி , சொல்லுங்க என்றாள்.

நீ தான் சொல்லனும் , நான் கேட்ட கேள்விக்கு என்ன பதில்?

பொன்னுக்கு கல்யாணம் பண்ணி வைக்க நேரம் வந்ததா பெத்தவங்க நினைக்கிறாங்க, இதுல நான் என்ன சொல்லட்டும்..

அது சரி உனக்கு எப்போடா? பார்க்க ஆரம்பிச்சுட்டாங்களா இல்லயா? யாரந்த அதிர்ஷ்டசாலி?

தங்கை கீதா இருக்காளே , அவளுக்கு பார்த்துட்டு இருக்கோம், உனக்குத்தான் தெரியுமே, எதுவும் சரியா அமையல..அதான் அம்மா இப்போ ரெண்டு பேருக்கும் சேர்த்து பார்க்கலாம், யாருக்கு முதல்ல முடியுதோ , முடியட்டும்னு சொன்னங்க. நேத்து தான் பேசிகிட்டாங்க.

அப்போ கூடிய சீக்கிரமா அந்த அதிர்ஷ்டசாலி வருவானு சொல்லு!ஹே,

அதென்ன அப்போ இருந்து "அதிர்ஷ்டசாலி , அதிர்ஷ்டசாலி"னு...அதெல்லாம் ஒன்னுமில்லை..அவள் அப்படி சொல்வதை மனதுக்குள் ரசித்தாலும், வெளியில் காட்டிக்கொள்ளவில்லை.

இல்லை சுரேஷ், உன்கிட்ட இவ்வளவு நாள் பழகியதிலிருந்து சொல்றேன், உனக்கு நல்ல மனசு, கோபம் வந்து பார்த்ததில்லை, ஒரு பிரச்சனையை அடுத்தவங்க இடத்திலும் இருந்து பார்க்கும் குணம், வேலையில சின்சியாரிட்டி.. ரியலி டா, ஷீ ஷ¤ட் பி லக்கி .. சற்று உணர்ச்சிவசபட்டுத்தான் போனாள்.

மீதமிருந்த சமோசா, டீயை முடித்துவிட்டு, கிளம்பினோம்..

இரவு 10.00 மணி, வீட்டில் படுத்திருந்த எனக்கு அவள் சொல்லிய வார்த்தைகள் இதமான இருந்தது... கைத்தொலைபேசி எடுத்து, "என்ன செய்கிறாய்" என்று எஸ்எம்எஸ் அனுப்பினேன்.

ரொம்ப வெயிலடிக்குது அதான் போயி வத்தல் காய போட்டுட்டு வந்தேன்.. நக்கலாக பதில் வந்தது .."என்ன கிண்டலா" மற்றொரு பதில் அனுப்பினேன்.

பின்ன, ராத்திரி 10 மனிக்கு என்ன பன்னுவாங்க... இதென்ன கேள்வி, படுத்துட்டு இருக்கேன்டா, பதில் வந்தது.

சரி, சாயந்திரம் அதிஷ்டசாலினு சொன்னியே சுதா..,ஆமா சொன்னேன்பா..என்ன அதுக்கு..

இல்லை.. நாம ஏன் அந்த அதிர்ஷ்டசாலியா இருக்ககூடாதுனு எப்பவாச்சும் நெனச்சிருக்கியா? எதோ ஒரு வேகத்தில் கேட்டுவிட்டேன்..

சற்று நேரம் ஏதும் பதிலில்லைதப்பா கேட்டிருந்தா மன்னிச்சுடு, மீண்டும் ஒரு எஸ்எம்எஸ் அனுப்பினேன்.

இல்லப்பா, தப்பு இல்லை ..நாளைக்கு ஆபிஸ்ல பேசாலாமே , தூக்கம் வருதுப்பா..குட் நைட் என்றேன்...மறுநாள் அலுவலகத்தில் மீண்டும் ஆரம்பித்தேன். என்ன சுதா நேற்று நான் கேட்டதை தப்பா எடுத்துகிட்டியா? சாரிம்மா ..

ஹே சுரேஷ் , அதெல்லாம் ஒன்னுமில்லை.. தெரியலமா.. எனக்கு இதுவரைக்கும் காதல்ன்ற என்னமே வந்ததில்லை.. கல்யாணமே கூட ஒன்னும் பெரிய விஷயமா எனக்கு படலமா.. ஏதோ வீட்ல சொல்லுவாங்க பன்னிக்குவேன்..அவ்ளோதான்.. சரி அதை விடு ..

அப்புறம் ஏதோ ப்ராஜக்ட் விஷயமா சிங்கபூர் போக வேண்டியிருக்கும்னு சொன்னியே என்னாச்சு? பேச்சை மாற்றினாள்.
கன்பார்ம்ட், பதினெட்டாம் தேதி கிளம்பனும் , இன்னும் 11 நாள் இருக்குமா..

சிறுது நேரம் பேசிவிட்டு இருவரும் கிளம்பினோம்..மொத்ததில் நாசூக்காக நான் காதலை சொன்னதைப்போலவே அவளும் நாசூக்காக மறுத்துவிட்டாள்...

ஆனால் நட்பில் எந்த விரிசலும் விழவில்லை, அதுவரை சந்தோஷம்.சிங்கப்பூர் பயணத்துக்கான வேலைகளில் நாட்கள் வேகமாக ஓடியது... நடுவிலே சுதாவிற்கு java program ல் ஒரு பிரச்சனை. குறித்த நேரத்தில் முடிக்க முடியாமல் போய்விடுமோ என என்னிடம் சொல்லி வருத்தப்பட்ட, இரண்டு நாட்கள் சனி , ஞாயிறு இருவரும் அலுவலகம் வந்து எட்டு மனி நேரம் அவளுடனேயே செலவழித்து வேலையை முடித்துக்கொடுத்தேன்.

மறுநாள் கிளம்ப வேண்டும், படுக்கையில் இருந்தபடியே, எல்லாம் எடுத்து வைத்துவிட்டேனா என்று யோசனையில் இருந்தவனை எஸ்எம்எஸ் சத்தம் அழைத்தது..சுதாவிடம் இருந்து தான், ஒற்றை வரியில், "சுரேஷ்" என்று,என்னமா? பதில் அனுப்பினேன்.. நாளைக்கு இந்த நேரம் நீ ரொம்ப தூரத்துல இருப்பே இல்லையா?

ஆமாம் சுதா ஒரு மாதம் இல்லயா? என்னை மறந்துடுவீயா சுரேஷ்?

ஸ்டுப்பிட்..என்ன பேத்தல் இது, எப்படி உன்னை மறப்பேன்..

ஹ்ம்ம்..என்னமோ மாதிரி இருக்குடா, பர்ஸ்ட் டைம் நம்ம நட்பு ஆரம்பிச்சு, இப்படி போறே இல்லயா?

ஆமாம்மா எனக்கும்தான் கஷ்டமா இருக்கு..பட் அபிஷியல் என்ன பன்னட்டும்?சரிப்பா மணி பத்து, நீ தூங்கு, காலையில நிறைய வேலை இருக்கும்.. ட்ராவல் பன்னனும்.

சரிம்மா குட்நைட்.

மறுநாள் காலை அனைவருக்கும் சொல்லிவிட்டு, விமான நிலைய செக்-அப் முடித்துவிட்டு விமானத்தில் ஏறுவதற்கு காத்திருந்த நேரத்தில் மெசேஜ் வந்தது சுதாவிடமிருந்து.,.

சுரேஷ், நீ சொன்னது மாதிரி நடக்குமா..?புரிந்துக்கொண்டபோதிலும் காட்டிக்கொள்ளாமல் பதில் அனுப்பினேன், என்ன நான் சொன்னது?

"அந்த அதிர்ஷ்டசாலியா ஏன் நான் இருக்ககூடாது சுரேஷ்", பதில் வந்தது..

சந்தோஷமாக இருந்தது..வெறுமனே பை, டேக் கேர்மா மெசேஜ் அனுப்பிவிட்டு செல்போனை அனைத்தேன்..சுதாவை விட்டு பல மைல் தூரம் கடல் தாண்டி வந்துவிட்டேன்..எஸ் எம் எஸ் தொடர முடியவில்லை என்ற போதிலும்.. எங்கள் அலுவலகத்தில் உள்ள இன்டர்னல் சாட்டிங் சிஸ்டம் மற்றும் மின்ஞசல் மூலம் தொடர்பு கொண்டோம்..சுதாவிடம் இருந்து ஒரு நாள் தொலைப்பேசி வந்தது...

ஷேம நல விசாரிப்புகள் முடிந்து, விஷயத்துக்கு வந்தாள்..சுரேஷ், என் கடைசி எஸ்எம்எஸ் க்கு நீ எதுவும் சொல்லலயே..என்ன சொல்றதுனு தெரியலயே..ஏன்? நீ தானே ஆரம்பிச்சு வெச்சே.. நேரடியாக கேட்டாள்..ஓ! அப்போ உனக்கே அது தோனல.. நான் கேட்டதாலே. வந்ததா .. ?

ஏ..அப்படி இல்லை..எனக்கும் இருந்திருக்கும்னு நினைக்கிறேன்..ஆமா சுதா மனசுல தோனுச்சு சொல்லிட்டேன்.. அப்புறம் யோசிச்சா...தங்கச்சி இருக்கா ..என்ன பன்றதுஇதெல்லாம் சரியா வருமானு இருக்கு.. ஒன்னுமே புரியலை..அப்போ நீ இல்லைனு சொல்லிட்டேனு எடுத்துக்கவா? பாவமாக கேட்டாள்..இல்ல இல்லைமா, சுதா, இல்லைனு சொல்ல முடியல..அதே நேரம் எப்படி இது நடக்கும்னு தெரியல..என்னமோ மாதிரி இருக்குமா..சரி , யோசிச்சு சொல்லுப்பா..சற்று நேரம் பேசிவிட்டு தொலைப்பேசியை துண்டித்தோம்..

பார்காமலே காதல், நாக்கறுத்த காதல், மூக்குடைத்த காதலுக்கிடையில், ஐ லவ் யூ சொல்லாமல்..கடிதம், ரோஜா தராமல்.. மெல்ல ஒரு காதல் ஆரம்பித்திருந்தது...

பனி முடிந்து, சென்னை வந்தேன்..முன்பெல்லாம் இரண்டு நாளைக்கு ஒரு முறை சந்தித்துக்கொண்டவர்கள், இப்போது ஒரு நாளைக்கு மூன்று முறை சந்தித்து கொள்ள காரணத்தை ஏற்படுத்திகொண்டோம்..என் மனது மட்டும் நிலையாக இல்லை.. குரங்கு மனசு என்றால் என்ன என்பது அப்போதுதான் புரிந்தது..இது நடக்குமா, நிச்சயமா வீட்ல ஒத்துக்க மாட்டாங்க .. தங்கை வேற கல்யாண வயசுல ... என்ன பன்றது சுதாவை ஏமாத்தற மாதிரி இருக்குமா... இல்லை வேண்டாம்னு சொல்லிடலாமா? அதற்கும் மனசு வரலயே.....

ஓவ்வொரு முறை பேசும்போதும் அவள் கேட்பதும் , நான் குழப்பமாக பதில் சொல்வதும்..இப்படியே போனது..ஒரு முறை அப்படி பேசும் போது..என்ன சுரேஷ்..நீ எனக்குத்தானே? நேரடியாக கேட்டாள்..

என்ன சொல்றதுனு தெரியலயே சுதா ..உங்க வீட்ல ஒத்துப்பாங்களா? கேட்டேன்.

இல்லைப்பா ஒத்துக்க மாட்டாங்க..ஆனா எனக்கு நீ வேணுமே, கனவனாக... நீ மட்டும் சரினு தெளிவா சொல்லிட்டா , நான் எங்க வீட்ல கேட்பேன்... ஆனா உன் கிட்ட இருந்தே சரினு பதில் வரலயே..இப்படியே மூன்று மாதங்கள் ஓடிபோனது..

ஒரு வெள்ளிகிழமை பேசினோம், சரி சுதா நான் ஞாயிற்றுகிழமை எங்க வீட்ல பேசிடறேன்.. சரிப்பா, மிகவும் மகிழ்ந்து போனாள்..முதல் முறையாக ஐ லவ் யூ சொன்னேன்.. மீ டு, அவளும் சொன்னாள்..இருவருமே அன்று மாலை நடக்கபோவதை அப்போது அறியவில்லை..வீட்டிற்கு வந்தேன்.. மணி 9.30, வழக்கமாக 7.30 மனிக்கெல்லாம் வீட்டுக்கு வரும் கீதா இன்னும் வரவில்லை.. அனைவரும் பதட்டமாகி போனோம்..எங்கெல்லாமோ தேடியும் 11.30 மனிவரை எந்த செய்தியும் இல்லை..11.45 ஒரு போன், யாரோ ஒருவன் பேசினான்... கீதாவும் நானும் நான்கு மாதங்களாக காதலித்தோம்,. நீங்க ஒத்துக்கமாட்டீங்கனு தெரியும்.. அதனால், மதியம் ஒரு கோவிலில் திருமணம் செய்துக்கொண்டோம்..தொலைப்பேசி துண்டிக்கப்பட்டது..வீடே சூனியம் பிடித்தது போலாகியது.. உறவினர்கள் வந்தனர்.. விசாரித்ததில் மறுநாள் கீதா இருக்குமிடம் தெரிந்தது.. போய் பேசி பார்த்தோம் ..வரவே முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டாள்..மகளே இல்லை என உதறிவிட்டு அப்பா அம்மா இருவரும் வந்துவிட்டனர்..அதே கவலையில் அம்மாவிற்கு உடல் நலக்குறை ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்த்தோம்..இரண்டே நாளில் என்னவெல்லாமோ நடந்துவிட்டது..

இரண்டு நாட்கள் லீவு எடுத்துவிட்டு , அம்மா கொஞ்சம் தேறி வீட்டுக்கு வந்ததும் அலுவலகம் வந்தேன்.. இடையிலே சுதாவிடமிருந்து போன் வந்தது..அவசர வேலையாக சேலம் போகிறேன்..வந்து சொல்கிறேன்.. பொய் சொன்னேன்.... வீட்ல பேசிட்டியா என்ற கேள்விக்கு கூட, வந்து சொல்கிறேன் என கூறிவிட்டேன். புதன்கிழமை இருவரும் தனியாக சந்திதோம்.

என்னப்பா ஆச்சு, எனி ப்ராப்ளம்? முகமே சரியில்லையே... என்னப்பா.. ஒத்துக்கலயா?? திட்டுனாங்களா??என்னை சகஜத்திற்கு கொண்டு வரவா அல்லது ஆழம் பார்க்கவா தெரியவில்லை, அடிக்கடி கேட்கும் அந்த இரண்டு கேள்விகளை கேட்டாள். நான் யார் செல்லம்? நீ யார் செல்லம்.. ?

மற்ற நேரங்களில் சொல்வது போல "என் செல்லம்" "உன் செல்லம்" என்று சொல்லாமல் அவளை பார்த்தபோதே, புரிந்துக்கொண்டாள்.

என்ன ஆச்சு, எதுவா இருந்தாலும் சொல்லு..அனைத்தையும் சொல்லி முடித்தேன்.. கடைசியாக அம்மா என்னை அழைத்து , அவ தான் குடும்ப மானத்தை வாங்கிட்டா.. நீ அப்படி எதுவும் செய்ய மாட்டேனு தெரியும்.. இருந்தாலும் கேக்கறேன்பா.. என் தலைல கை வெச்சு சத்தியம் பன்னு , அப்படி எதுவும் பன்ன மாட்டேனு.. வேறு வழி தெரியாமல் சத்தியம் செய்ததையும் சேர்த்தே சொல்லி முடித்தேன்..

அவள் கண்கள் கலங்கிபோனது, மனதை போலவே..4 நாட்கள் கழித்து சற்று தெளிந்த பிறகு,

என்னப்பா, நிச்சயமா நடக்காதா? சுதா தான் ஆரம்பித்த்தாள்..தெரியலமா..என்ன பன்னட்டும்...?அம்மாவ நினைத்தா..ஏற்கனவே உடம்பு முடியாக இருக்காங்க..சுதா, தன் பொன்னு இப்படி பன்னிட்டாளேனு நினைச்சு அம்மா இப்படி ஆயிட்டாங்க..அதே மாதிரி தானே aunty க்கும் இருக்கும்..ஆமா சுரேஷ்.. என்னப்பா பன்னலாம்..நீயே சொல்லுமா...இல்லப்பா நீ சொல்லு..

எனக்கு என்னமோ இது நடக்காதுனு படுது சுதா...அப்போ உங்க வீட்ல பாக்கற பொன்னை..இழுத்தாள்...

இல்லைமா எப்படி முடியும் என்னால? உன்னால முடியுமா??என்னை ஒரு மாதிரி பார்த்தாள்..நிச்சயமா இப்போ போய் வீட்ல இதல்லாம் சொல்ல முடியாது .. அதே நேரத்துல வேற கல்யானமும் பன்னிக்க முடியாது.. இப்படியே கல்யாணம் பன்னிக்காம கடைசி வரைக்கும் இருந்திடலாமா?

தலையாட்டினாள்.........அன்றோடு அடிக்கடி பார்த்துக்கொள்வதெல்லாம் நின்று போனது....மூன்று மாதத்தில் எனக்கு வேறொரு கம்பெனியில் வேலை கிடைத்து , இந்த வேலையை ராஜினாம செய்துவிட்டு சென்றேன்.. கடைசியாக அவள் என்னிடம் சொன்னது "என்னை மறந்துடாதே சுரேஷ்.."இரண்டு மூன்று மாதங்கள் அவளோடு மின்னஞ்சல், தொலைப்பேசி மூலம் தொடர்பிருந்தது..,
பின்பு அதுவும் நின்று போனது..

ஒரு வருடத்துக்கு பிறகு என் நன்பன் மூலம் அவளுக்கு திருமணமான விஷயம் தெரிந்துக்கொண்டேன்..

மீண்டும் நிகழ்காலத்திற்கு வந்தேன்..கண்கள் கலங்கி இருந்தது...

இதோ நான் சற்று முன்பு பார்த்த பெண் .. அவளே தான்...சுதா ..சுதாவே தான்...பார்க்கலாமா , வேண்டாமா என்று நான் யோசித்துக்கொண்டிருக்கும் போதே அவளும் என்னை பார்த்துவிட்டாள்..அருகில் வந்தாள்.. என்ன பேசுவதென்றே தெரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தோம்... அவள் தான் ஆரம்பித்தாள் ... எப்படி இருக்கே சுரேஷ்.....??ஹ்ம்ம்.. நீ??இருக்கேன் ..

..என்னங்க இங்கே வாங்க.. சற்று தள்ளி நின்று யாரோடோ பேசிக்கொண்டிருந்தவரை அழைத்தாள்...இது என் ·பிரண்ட் சுரேஷ்,

சுரேஷ் இவர் என் கனவர் ஸ்ரீராம் , அறிமுகப்படுத்தி வைத்தாள்.. அவரும் இரண்டு வார்த்தை பேசிவிட்டு , சுதா பேசிட்டு இரு நான் அவரை அனுப்பிட்டு வரேன்.. என்னிடமும் எக்ஸ்க்யூஸ் கேட்டுக்கொண்டு, ஏற்கனவே பேசிக்கொண்டிருந்தவரை நோக்கி நடந்தார்...

கல்யாணம் .......... ? இழுத்தாள் இல்லை என்பது போல தலையாட்டினேன்..

கீதா.......?

ஹ்ம்ம்..நல்லா இருக்கா.. போன மாசம் தான் கொழந்தை பொறந்தது..வேற என்ன பேசுவதென்று புரியாமல் மெளனமாகவே இருந்தோம்... இருவர் கண்கள் கலங்கி இருந்தது இருவருக்கு மட்டுமே தெரிந்தது...

அதற்குள் ஸ்ரீராம் வந்தார்.. சற்று நேரம் என்னிடம் பேசிவிட்டு.. , இருவரும் விடைப்பெற்றுக்கொண்டனர்..

ஒரு நாள் வீட்டுக்கு வாங்க சுரேஷ்... ஸ்ரீராம் அழைத்தார்...

சரிங்க என்றேன்..

மெதுவாக நடந்து கோயில் வாசலை நோக்கி வந்தேன். கீதாக்கு குழந்தை பிறந்ததை சொன்னேனே, அப்பவே எனக்கு அடுத்த வாரம் நிச்சயதார்த்தமுனு சொல்லியிருக்கலாமோ????

சொல்லாம விட்டது நல்லதா?? தப்பா??

மனதிற்குள் போராட்டம்..திரும்பிப்பார்த்தேன் ..

அமைதியே உருவான முகத்தோடு சிரித்துக்கொண்டிருந்தார் முருகர்...

தினமலரின் கேடித்தனம்..

இன்றைய தினமலர் நாளிதழில் முதல்வரின் பிறந்தநாள் குறித்த ஒரு செய்தி கட்டுரையில் ஒரு பெட்டி செய்தி வந்துள்ளது. கருணாநிதியை வாழ்த்த பல மறைந்த தலைவர்களின் வேடம் அணிந்து வந்தவர்கள் பற்றிய செய்தி அது.

தினமலர்(ம்) தந்துள்ள செய்தி இது தான் :

ஈ வே ரா அவர்கள் அனைவராலும் பெரியார் என்றே அழைக்கப்படுகிறார் , அதே போல அண்ணாதுரையும் பாசத்துடன் அண்ணா என்றே அழைக்கப்படுகிறார். அப்படியிருக்க, இந்த செய்தியில் இவர்கள் எம் ஜி ஆர் என்று அழைக்கப்படும் எம் ஜி ராமசந்திரனை , "எம் ஜி ஆர்" என்றும், ராஜாஜி என்றழைக்கப்பட்ட ராஜகோபாலச்சாரியை "ராஜாஜி" என்றும் குறிப்பிட்ட தினமலம், மற்ற இருவரை ஈ வே ரா என்றும் அண்ணாதுரை (பெரியார், அண்ணா என்ற வார்த்தைகளை அவர்கள் அச்சு இயந்திரத்தில் அச்சு கோர்க்க முடியாதா?) என்று குறிப்பிட்டது அவர்களின் கேடு கெட்ட மொள்ளமாரித்தனம் அல்லாது வேறு என்னவாக இருக்கும்?

இப்படி ஒரு பத்திரிக்கை நடத்துவதற்கு பதில் அவர்கள் வேறு தொழிலுக்கு செல்லலாம்.. அந்துமனிக்கு அதில் அனுபவம் அதிகம், அது கைக்கொடுக்கும்