Showing posts with label விகடன். Show all posts
Showing posts with label விகடன். Show all posts

விகடன் தலையங்கம்.

இந்த வார விகடனில் என்ன தேசமோ ?! என்ற தலைப்பில் ஒரு தலையங்கம்.

பாகிஸ்தானை எதிர்த்து இந்திய படைகளை வழிநடத்தி பங்களாதேஷ் என்கிற சுதந்திர நாட்டை உருவாக்கிக்கொடுத்த ஃபீல்டு மார்ஷல் மானெக்ஷா அவர்களின் மறைவுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தாத ஜனாதிபதி, பிரதமர், கவர்னர், முப்படைத்தளபதி, முதல்வர் என்று அனைவரையும் ஒரு பிடி பிடித்து, அரசியல் கட்சித்தலைவரைகளையும் சாடி, இறுதியில் இந்த தேசமே தலை குனிய வேண்டும் என்று முடித்துள்ளது.

விகடனாரின் இந்த ஆதங்கம் புரிகிறது. இதில் எந்த தவறும் இல்லை.
விகடனாரே, அரசின் உயர் பதவியில் இருப்பவர்கள், அரசியல்வாதிகள் ஆகியோரை ஒரு பிடி பிடித்த நீங்கள் ஏன் நாண்கு தூண்களில் ஒரு தூணாக கருதப்படும் பத்திரிக்கையை மட்டும் விட்டுவிட்டீர்?

சின்டு முடித்த திரிஷா, திண்டாடிப்போன நயனதாரா என்ற தலைப்பில் உப்பு பெறாத ஒரு விஷயத்தை உங்களின் ஜூ வி யில் ஸ்பெஷல் பக்கங்களில் எழுதியுள்ளீர்.

சுட்ட பழம் கெட்ட பழமா என்று கவர்ச்சிப்படத்துடன் ஒரு நேர்முகம். குசேலனுக்கும் , தசாவதாரத்துக்கும் கவர் ஸ்டோரி.

கருணாநிதி குடும்ப கலாட்டாவுக்கு தவறாமல் கழுகாரின் 1 பக்க ரிப்போர்ட். அடுத்த முதல்வர் ஸ்டாலின் என்று உங்கள் கற்பனை ரிப்போர்ட் 2 இதழ்களுக்கு ஒரு முறை.

முத்தம் கொடுத்தாரா சிம்பு என்று 3 வாரமாக ஆராய்ச்சிக்கட்டுரை..

நடிகைகளின் இடையையும் , தொடையையும் ஓப்பீடு செய்யாத கேள்வி பதில் இல்லை..அட்டைப்படத்தில் அரையாடை நடிகைகள் அல்லது உச்சத்தில் இருக்கும் நட்சத்திரங்கள்..

இப்படியெல்லாம் போகும் உங்களின் பத்திரிக்கையில் தேடி பார்க்கிறேன், ஒரு பக்கம் கூட ஃபீல்டு மார்ஷல் மானெக்ஷா பற்றிய கட்டுரை இல்லையே??

திரிஷாவும் நயனதாராவும் எழுதினால், அசின், நமிதாவின் அரையாடை அல்லது ரஜினியின் படத்தை அட்டையில் போட்டால் தேறும் சில்லரை இவரின் அட்டைப்படத்தையோ, 2 பக்க கட்டுரையோ எழுதினால் தேறாது என்பதால் தானே இவர் பற்றி தலையங்கத்தில் 6 வரி எழுதி அதுவும் அவன் கெட்டவன், அவன் கேவலமானவன் என்று காட்டிவிட்டு போக மட்டுமே..

சினிமாவையும், கிரிக்கெட்டையும், அரசியலையும் மக்களை விட , உங்களின் காசுக்காக தூக்கிவைத்து எழுதி எழுதி மக்களை மடையர்களாக மாற்றியுள்ளது உங்கள் பத்திரிக்கை துறை தானே??

அப்புறமென்ன, கிரிக்கெட்டை கொண்டாட தெரிந்த தேசத்துக்கு இவரை கொண்டாட தெரியவில்லையே என்று ஒரு போலி ஆதங்கம் உங்களுக்கு?

திரிஷாவின் , நமிதாவின் தொப்புளை , லைலாவின் கால் இடுக்கை போகஸ் செய்துக்கொண்டு இருந்த உங்கள் பத்திரிக்கை காமிராக்களுக்கு என்ன ஒரு கரிசனம் இந்த தேசத்தின் மீது திடிரென்று???

பத்திரிக்கைதுறை சார்ந்தோர், உங்கள் விகடனார் குழுவில் இருந்து எத்துனை பேர் அங்கே சென்றீர்கள் இறுதி மரியாதை செய்ய??

உங்கள் தலையங்கத்தில் ஒரு இடத்தில் " அரசியல் தலைவர்களுக்கு, மானெக்ஷா என்ற மாமனிதரின் மறைவு, இருந்த இடத்திலேயே ஒரு அறிக்கை எழுதிக் கொடுத்து, காகிதத்தோடு கடமையைக் கழித்துக்கொண்ட ஒரு சடங்காகிவிட்டது! என்று எழுதியுள்ளீர்கள்.
உங்களின் இந்த தலையங்கத்துக்கும் அந்த அறிக்கைக்கும் என்ன வித்தியாசம்?? இது தலையங்கம், அது அறிக்கை, இது 10 வரிகள், அறிக்கை 3 - 4 வரிகள் இருக்கலாம்... அது மட்டுமே வித்தியாசம்..

இந்த அரசியல்வாதிகள், தேசம் அனைவருமே வெட்கப்படவேண்டும் , மாற்றுக்கருத்து இல்லை.. இவர்கள் அனைவரையும் விட, பத்திரிக்கை துறையே அவமானப்படவேண்டும் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள்.

விகடன் தலையங்கம் :
'உயிர், மண்ணுக்கு!' என்ற வார்த்தைகளின் உண்மை உதாரணம் அவர்; எதிரியின் துப்பாக்கிக் குண்டு தன் உடலில் பாய்ந்தபோதும், குருதி சிந்தியபடியே களத்தில் போராடிய மாவீரர்; தன் தியாகங்களை முரசறைந்து விளம்பரம் தேடிக்கொள்ள விரும்பாத தூய தேசபக்தர்; எத்தகைய தருணத்திலும் அதிகார வர்க்கத்துக்கு 'ஆமாம் சாமி' போடாதவர்!
வெற்றுக் கோஷங்களில் தன்னை உயர்த்திப் பிடிக்காமல், உண்மையான உதாரணத் தலைவனாக வாழ்ந்து காட்டிய அந்த மாமனிதர் ஃபீல்டு மார்ஷல் மானெக்ஷா!
பாகிஸ்தானை எதிர்த்து, இந்தியப் படைகளைச் சிங்கம் போல வழிநடத்தி, பங்களாதேஷ் என்ற சுதந்திர நாட்டை உருவாக்கிக் கொடுத்த மானெக்ஷா, தன் இறுதிக் காலத்தைத் தமிழகத்தில் கழித்து, இங்கேயே தன் இன்னுயிரை நீத்திருப்பது நமக்கெல்லாம் வரலாற்றுப் பெருமை!
ஆனால், அந்த வரலாற்று நாயகருக்கு நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்த வேண்டும் என்று இந்த நாட்டின் ஜனாதிபதி, முப்படைத் தளபதிகள் எனத் துவங்கி... பிரதமர், ராணுவ அமைச்சர், மாநில முதல்வர் என யாருக்குமே எண்ணம் இல்லை என்பது எத்தகைய கொடுமை!
ஆதரவு கொடுக்கும் அரசியல் கட்சிகளின் அரசியல் மாநாடுகளில் கலந்துகொண்டு, மணிக்கணக்கில் புகழுரைகள் ஆற்றத் தெரிந்த அரசியல் தலைவர்களுக்கு, மானெக்ஷா என்ற மாமனிதரின் மறைவு, இருந்த இடத்திலேயே ஒரு அறிக்கை எழுதிக் கொடுத்து, காகிதத்தோடு கடமையைக் கழித்துக்கொண்ட ஒரு சடங்காகிவிட்டது!
'கிரிக்கெட் விளையாட்டில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் உலகக் கோப்பை வென்றதைக் கூடிக் கொண்டாடத் தெரிந்த இந்த தேசத்துக்கு, ஒரு யுத்தத்தையே வென்று கொடுத்து மானம் காத்த மாமனிதருக்கு மரியாதை செய்யத் தெரியவில்லையே!' என்று உலகமே அதிர்ச்சியுடன் பார்க்கிறது.
இதற்காக, இந்த தேசமே வெட்கத்தில் தலைகுனியத்தான் வேண்டும்
நன்றி - விகடன்