Showing posts with label புகை. Show all posts
Showing posts with label புகை. Show all posts

இந்தியாவில் புகைப்பிடிக்க தடையா?

அக்டோபர் 2 முதல் இந்தியாவில் புகைப்பிடிக்க தடை என்ற சட்டம் கொண்டு வந்து தீவிரமாக அமல் படுத்தினார் நம் சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமனி ராமதாஸ் அவர்கள்.


பல தரப்பிலிருந்தும் இந்த சட்டத்திற்கு பலவாறான கருத்துக்கள் வந்தது. சிலர் இந்த சட்டத்தை அமல் படுத்துவதில் இருக்கும் நடைமுறை சிக்கலை எடுத்துரைத்தார்கள். சிலர் இந்த சட்டம் PASSIVE SMOKING தடுப்பதற்கு கொண்டுவரப்பட்டுள்ளது, குறை கூறவேண்டாம் என்றார்கள்.

இந்த சட்டத்தை முழுமையாக அமல் படுத்துவதில் இருக்கும் நடைமுறை சிக்கல், மேலும் எத்துனை மாதங்கள் இது தாக்குப்பிடிக்கும், பான் பராக் தடையை போலத்தான் இந்த சிகரெட் தடையும் மாறும் வாய்ப்புள்ளது என்ற என் ஆதங்கத்தை நானும் சின்ன அய்யா - சிறு யோசனை என்ற தலைப்பில் பதிவாக இட்டேன்

அக்டோபர் 2 க்கு பிந்தைய நிகழ்வுகளான இலைங்கைப்போர், அமெரிக்க தேர்தல், இங்கிலாந்து கிரிக்கெட், மும்பை தீவிரவாத தாக்குதல், கலைஞர் - மாறன் இனைப்பு, 5 மாநில தேர்தல் இத்யாதி இத்யாதி எல்லாம் இந்த சிகரெட் பிடிக்க தடை பற்றிய செய்திகளை சட்டத்தை பின்னுக்கு தள்ளிவிட்டது. பின்னுக்கு என்பதை விட, மறக்கடிக்கவே செய்துவிட்டது

சட்டம் அமல்படுத்தப்பட்டு 2 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், அமலாக்கம் எந்த நிலையில் உள்ளது?

முதல் 15 நாட்கள் மிக கடுமையான கன்கானிப்பு. ஆங்காங்கே அரசாங்க அறிவிப்பு, சுகதாரத்துறையின் சார்பாக விளம்பரங்கள், பா ம க வின் பசுமைதாயகத்தின் சார்பில் ஆங்காங்கே விளம்பர தட்டி, விழிப்புனர்வு பிரச்சாரம் (பிரச்சாரத்தில் ஈடுபட்ட பா ம க கரைவேட்டிகளே, இடையில் மேடையின் பின்னால் சென்று 2 வலி வலித்துவிட்டு வந்தது வேறு கதை),
மிகப்பெரும் அளவில் பொது இடங்களில் புகைப்பிடிப்பது கட்டுப்படுத்தப்பட்டது. டீ கடை , பொட்டிக்கடையின் வாசலில் புகை மூட்டமாக இருக்கும் நிலை மாறியது. ஓரிருவர் கடை மறைவில் நின்று பயந்து பயந்து எட்டிப்பார்த்து தம் இழுத்ததை பார்க்க முடிந்தது.
டீக்கடையின் உள்ளே கூட புகைப்பிடிக்க அனுமதிக்கப்படவில்லை. மிக தெரிந்த ரெகுலர் கஸ்டமர்களுக்கு மட்டுமே டீ கடைகள் அனுமதி தந்தது.

அடடா! இந்த சட்டத்தின் மூலம் பெருமளவில் புகைப்பது குறைந்து. கடைவாயில்கள், தெருவீதிகள், பொது இடங்களில் புகை மன்டலம் குறைந்து, (PASSIVE SMOKING ) பேசிவ் ஸ்மோகிங் குறைந்து விட்டதே என்று சந்தோஷப்பட்டது அடுத்த 10 நாட்களில் புஸ்ஸாகிப்போனது தான் வேதனை.

கிட்டதட்ட 15 - 20 வது நாட்கள் மட்டுமே இந்த சட்டம் அமல் படுத்தப்பட்டது.. 21 வது நாளில் இருந்து மெல்ல மாற்றம் தெரிந்தது.. கடை மறைவிலும் ,கதவு இடுக்கிலும் நின்று புகைத்தவர்கள் வெளி வந்து நின்று புகைக்க துவங்கினர்..
கடை வாசலில் 2, 3 பேர் மட்டுமே புகைத்தது 5, 6 , 7.. என்று மெதுவாக ஏறத்துவங்கியது. பொது இடங்களிலும் கண்கானிப்பு இல்லை என்ற நிலை வந்த பிறகு நம் புகையாளிகள் வழக்கம் போல ஒளித்துவைத்திருந்த சிகரெட்-தீப்பெட்டியை தைரியமாக வெளியில் எடுத்தனர்.. பேருந்து நிலையம் , ஓட்டல், டீக்கடை, சாலைகள் என்று அனைத்து இடங்களும் பழைய குருடி கதவை திறடி என்பதற்கு ஏற்ப மாறிவிட்டது..
இந்திய திருநாட்டில் ஒரு சட்டத்தின் நிலை இது தானா?? 15 நாட்களுக்கு மேல் ஒரு சட்டத்தை அமல் படுத்த முடியவில்லை..

இந்தியாவில் புகைக்க தடையிருக்கிறது என்று சொன்னால் யாராவது நம்புவார்களா?

ஒரே ஆறுதலான விஷயம்- பல அலுவலக வளாகங்களில் ஸ்மோக் ஜோன் (SMOKE ZONE) என்பதை எடுத்துவிட்டுருந்தனர். வெளியிலும் கட்டுப்பாடு இருந்தததால் அலுவலக நேரத்தில் புகைப்பிடிக்கும் பழக்கம் இருப்போரின் புகைத்தல் பெருமளவில் கட்டுப்படுத்தப்படிருந்து. ஆனால் இப்போது வெளியில் கட்டுப்பாடு தளர்ந்துவிட்டதால் அதிலும் ஓட்டை விழுந்துவிட்டது.
அலுவலக வளாகத்தில் இருந்து வெளியே நடந்து வந்து புகைக்க வேண்டும் என்ற நிலையில், சோம்பல் காரணமாக சிலரின் புகைப்பழக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.. ஆனால் இதுவும் எத்தனை நாள் ??? மீண்டும் அலுவலக வளாகங்களில் புகைப்பிடிக்கும் பகுதி வராது என்று நிச்சயமாக சொல்ல இயலாது.. 2 மாதத்தில் வெளியிடங்களில் வந்த இந்த நிலை, மேலும் 5 மாதத்தில் அலுவலக வளாகங்களுக்கும் வரும் நிலை தான் தெரிகிறது.
ஆரம்பத்தில் இந்த சட்டத்தை செயல்படுத்துவதில் இருக்கும் சிக்கல்கள் பற்றி கேள்வி எழுப்பபட்ட போது ஆயிரம் விளக்கங்களை சுகாதாரத்துறை கொடுத்திருதாலும், இன்றைய நிலையில் சட்டத்தை அமல் படுத்துவதில், அரசும், சுகாதாரத்துறையும், காவல் துறையும் பசுமைத்தாயகமும் படுதோல்வி அடைந்து விட்டதாகவே உள்ளது..

இந்த தடையை ஊர்ஜிதப்படுத்திய உச்சநீதிமன்றம் என்ன செய்கிறது?? யாராவது பொது நல வழக்கு தொடரட்டும் என வாயிற்கதவை அகலத்திறந்து வைத்து காத்திருக்கிறதா..??
பான் பராக் தடை என்பது எப்படி ஆனதோ , அதே கதி தான் சிகரெட்டுக்கும் ஆனது.. போதை வஸ்துக்கள் பவர் தெரிகிறது..
சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது,
திட்டம் போட்டு திருடுற (புகைக்குற) கூட்டம் திருடிக்கொண்டே (புகைத்துக்கொண்டே) இருக்குது .
திருடனாய் (புகைப்பவனாய்) பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை (புகையை) ஒழிக்க முடியாது..

சின்ன அய்யா - சிறு யோசனை

மான்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமனி ராமதாஸ் அவர்களே, வணக்கம்.

புகையிலைப்பொருட்களால் ஏற்படும் ஆபத்தில் இருந்து மனிதர்களை காப்பாற்றும் தங்களின் அவா பாராட்டப்படவேண்டியதே. பல காலமாகவே இது பற்றி பேசி வரும் நீங்கள் , இப்போது எடுத்திருக்கும் இந்த பொது இடங்களில் புகைக்க தடை என்ற முடிவு நல்ல முடிவு.

பான் பராக் போன்ற வஸ்த்துக்கள் விற்பனை தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ளது என்று சொன்னால் யாராவது நம்புவார்களா?? எனக்கு தெரிந்து 3 வருடங்களுக்கு முன் பான்பராக் விற்பனை தடை செய்யப்பட்ட்து.. முதல் 2 மாதங்கள் விற்பனை இல்லாமால் இருந்தது , விற்றவர்கள் பிடிபட்டனர் என்று பத்திரிக்கைகள் செய்தி வாசித்தது.. பின்பு , சில மாதங்களுக்கு வெளியில் தொங்கவிடாமல், உள்ளே வைத்து தெரிந்தவர்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்டு, பின்னர் தைரியம் வந்து எப்போதும் போல வெளியே சரம் சரமாக தொங்கவிடப்பட்டு வியாபாரம் சக்கை போடு போடுகிறது.. ஆனால் தமிழகத்தில் பான்பராக் விற்பனக்கு தடை என்று அரசானை சொல்லும்..

இந்த தடையினால் என்ன நடந்தது தெரியுமா??
பான்பராக் என்ற ஒரே ஐயிட்டம் இருந்தது போய், லஷ்மி சூப்பார், Hஆன்ஸ், அது இது என்று புது புது வகைகள் வந்தது தான் மிச்சம்.

சரி, சிகரெட்டுக்கு வருவோம்..
உள்ளபடியே மக்கள் மீது உங்களுக்கு இருக்கும் அக்கரை புரிகிறது.. உங்களின் இலக்கு புகைப்பிடிக்காதவர் உள்ள நாடுஎன்பது தானே.. புகையிலையால் புற்று வந்து மனிதர்கள் இறக்க கூடாது என்ற நல்ல எண்ணம் என்பது தெரிகிறது..

விழிப்புணர்வு பிரச்சாரம் மூலம் புகையிலைப்பழக்கதை ஒழிக்கமுடியுமா என்றால், மிக மிக மிக சொற்பமானவர்கள் மட்டுமே காது கொடுத்து கேட்டு புகைப்பதை தவிர்ப்பார்கள். அகவே அது முழு பலன் தராது.

பொது இடங்களில் புகைக்க தடை என்பதன் மூலம் முழு பலன் வருமா என்றால் சந்தேகமே.புகைப்பிடிப்பதை நிறுத்திடவேண்டும் என்று நினைப்பவர்கள் மட்டுமே, இந்த சட்டத்தை பயன்படுத்தி புகைப்பதை தவிர்ப்பவர். மற்றவரெல்லாம், திருட்டுத்தனமாக இன்டு இடுக்கில் புகுந்துக்கொண்டு புகைக்கத்தான் போகிறார்கள்..
ஓவ்வொரு சந்துக்கும் ஆட்களை நியமித்து உங்களால் கண்கானிக்க முடியுமா அமைச்சரே?

வீட்டுக்கு பயந்து திருட்டு தம் அடித்தவர்கள் இப்போது போலிஸுக்கும் , சட்டத்துக்கும் பயந்து திருட்டு தம் அடிப்பார்கள்.. அவ்வளவே..இன்னும் சிலர், பிடித்தால் பார்க்கலாம் என்று பொது இடங்களில் புகைப்பதை பார்க்க முடிகிறது.இந்த சட்டமும், பான் பராக் தடை சட்டம் போல் 6 மாதத்தில் நீர்த்து போகாது என்ற உங்களால் உறுதியாக சொல்ல முடியுமா அன்புமனி சார்.
உங்களின் பசுமை தாயகம், பா ம க சார்ப்பாக ஒரு பொதுக்கூட்டம் ஒன்று நடத்திப்பாருங்களே... மேடையின் பின்னால், மேடையில் கீழே இருந்தெல்லாம் புகை வருகிறதா இல்லயா என்று..

இவ்வளவு உயரிய நோக்கில் நீங்கள் கொண்டுவந்த இந்த சட்டம், இத்துனை நடைமுறை சிக்கலோடு இருப்பது சற்று வேதனையே.. ஏன் தலையை சுற்றி மூக்கை தொடும் இந்த வேலை?? .

இதைவிட, புகையிலை பொருட்கள் தயாரிப்பையே நீங்கள் தடை செய்யலாமே..இப்போதிருக்கும் இந்த சட்டத்தின் மூலம் 15 - 20 % குறிக்கோள் நிறைவேறும்.. ஆனால் நீங்கள் துனிந்து புகையிலை பொருட்கள் உற்பத்தியை தடை செய்தால், 90% குறிக்கோள் நிறைவேறும்..

உங்களின் நோக்கமும், இந்த தடையும் போற்றுதலுக்குரியது.. அதை குறை சொல்லவில்லை.. ஆனால் செய்வன திருந்தச்செய் என்றே சொல்கிறோம்..
அதை செய்வதில் உங்களுக்கும் உங்கள் அரசுக்கும், கட்சிக்கும் ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா??

உண்மையிலேயா உங்களுக்கு மக்களின் உடல்நலத்தில் அவ்வளவு அக்கரை இருக்கும் பட்சத்தில், இதற்கு முயற்சி செய்யுங்கள் சின்ன அய்யா...!