சந்தி சிரிக்குது சமுக நீதி.
நமக்கு தெரிந்ததுதான் என்றாலுல் இந்த செய்தியை படித்த போது பகீரென்றது.. இப்படியும் ஒரு பொழைப்பு.. இவர்களுக்கு தங்களின் சம்பாத்தியம் எப்படி உடம்பில் ஒட்டுகிறது என்று தெரியவில்லை. .
அவர்களும் வெட்கப்படவேண்டும், அவசரத்திற்கு பணம் கொடுத்த்தாவது வேலையை நட்த்திக்கொண்டு அவர்களை ஊக்கப்படுத்தும் நாமும் வெட்கப்படவேண்டும்..
குமுதம் குழுவினர் இன்னும் சற்று முயற்சி செய்து அந்த ப்ரோக்கர் , அந்த அலுவலகத்தில் இருக்கும் (இதில் சம்பந்தப்பட்ட) அதிகாரிகள், கையெழுத்திடுக் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் பற்றிய விவரங்களை தந்திருக்கலாம். அந்த ப்ரோக்கரின் பேச்சை டேப் செய்து, அவரின் புகைப்படத்தையும் போட்டிருக்கலாம்.
இப்படி அடையாளம் காண்பிகப்படாத கட்டுரை இந்த கேவலைத்தை படம் பிடித்து மக்களுக்கு காட்டியிருந்தாலும், குறிப்பிட்ட அந்த ப்ரோக்கர், அதிகாரிகள் எரும மாட்டு மேல மழை பெய்தது போல் தான் இதை எடுத்திருப்பார்கள்.. புகைப்பட மற்றும் அவர்கள் பற்றி சில விஷயங்கள் கட்டுரையில் இருந்திருந்தால், அந்த எருமைகளுக்கு சிறிதாவாது உரைத்திருக்கலாம்.. யாருக்கு தெரியும்? அதையும் தங்களிடம் இருக்கும் கரண்சிகளை வைத்து துடைத்துபோடும் ஜென்மங்களாக அதுகள் இருக்கலாம்..
இதோ சாதி சாண்று தரும் அலுவலகத்தின் அசிங்கங்கள் பற்றி குமுதத்தில் வந்த கட்டுரை..
நன்றி : குமுதம்
சாதிகள் இல்லையடி பாப்பா!' என்று பாடிய சுப்பிரமணிய பாரதிக்கு சாதிச் சான்றிதழ்! அதுவும் பிற்படுத்தப்பட்டவர் என்று!
என்ன, ஆச்சரியமாக இருக்கிறதா? ஆச்சரியப்படவோ அதிசயிக்கவோ இதில் எதுவுமே இல்லை... உங்களிடம் காசிருந்தால் போதும் நீங்கள் விரும்பும் ஜாதியில் உங்களுக்கான இடம் ஒதுக்கப்படும். அவ்வளவு ஏன்? உங்களுக்குப் பிறக்காத குழந்தை முதல் மூன்று தலைமுறைக்கு முன் மறைந்த உங்கள் மூதாதையர் வரை யாருக்கு வேண்டுமானாலும் எந்த சாதியிலும் நீங்கள் இடஒதுக்கீடு பெறலாம்.
அப்படித்தான் பாரதியாருக்கும் வகுப்பு மாறி இடம் ஒதுக்கப்பட்டது. பாரதி மறைந்து எண்பத்தேழு ஆண்டுகளுக்குப் பின்பு, `புதுப்பேட்டையில் இருக்கிறார். அவருக்கு ஜாதி கிடையாது. ஆனால் சான்றிதழ் வேண்டும்!' என்று நாம் கேட்ட இரண்டாவது நாளே நாடார் சமூகத்தில் அவரைச் சேர்த்து நம்மை பிரமிக்க வைத்துவிட்டனர்!
நிஜமான தகவல்களைச் சொல்லி, நியாயமான சான்றிதழைக் கேட்டால் பெறுபவரை நேரில் வரச்சொல்லி, பிறப்புச் சான்றிதழில் என்ன ஜாதி? பள்ளிக்கூட சான்றிதழில் என்ன ஜாதி? விலாசத்தை உறுதிப்படுத்த, ரேஷன் அட்டை, வாக்காளர் அட்டை, டிரைவிங் லைசன்ஸ் நகல் என பலவற்றைக் கேட்டு பாடாய்ப்படுத்தும் அதிகாரிகள், இடைத்தரகர்களிடம் மட்டும் எதுவுமே கேட்காமல் நீட்டிய இடத்தில் கையெழுத்துப் போடுவதன் காரணம்தான் நமக்குப் புரியவில்லை.
பாரதியார் பெயரில் இந்த கம்யூனிட்டி சர்டிஃபிகேட் வாங்க நாமும் பெரிதாக ஒன்றும் சிரமப்படவில்லை.சில ஆயிரங்களை இடைத்தரகரிடம்இழந்தோம். அவ்வளவுதான். கொஞ்சம் சிரமப்பட்டது பொருத்தமான புரோக்கரை கண்டுபிடிக்க மட்டும்தான்.
அதற்காக, அந்த அலுவலகத்தின் உள்ளேயும் வெளியேயும் நம் விசாரணையைத் தொடங்கி அலைந்து கொண்டிருந்ததை அவர்களும் கண்காணித்திருக்க வேண்டும். கொஞ்சம் சோர்ந்து ஒரு மரநிழலில் சற்று ஒதுங்கிய நேரத்தில் கரெக்டாக வந்தார் ஆஜானுபாகுவான அந்த ஆள்.
``சாருக்கென்ன, சாதி சர்டிஃபிகேட் வேணுமா?'' என்று சம்மன் இல்லாமல் அவர் ஆஜராக, அப்பொழுதே நம் முயற்சியில் பாதி முடிந்துவிட்ட மாதிரிதான்!
``எந்த புரூஃபும் இல்லாம `பி.சி.' சர்டிஃபிகேட் வேணும்னா சார்ஜ் ஜாஸ்தியாகும். நாளும் முன்ன பின்ன ஆகும்! சரின்னா ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் குடுங்க! வேலை முடிஞ்சதும் மீதி!'' என்று நேரிடையாகவே அவர் மேட்டருக்கு வர, நமக்கு கொஞ்சம் தயக்கம்தான்! ஆனாலும் காசைக் கொடுத்துட்டு, சான்றிதழுக்கான விவரங்களை ஒரு துண்டுக் காகிதத்தில். `சி. சுப்பிரமணிய பாரதி, தந்தை பெயர் சின்னசாமி என்று மட்டும் எழுதிக் கொடுத்தோம். நாம் என்ன எழுதினோம் என்பதைப் பற்றி அந்த புரோக்கர் கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை.
நம்மைப் பார்த்து, ``ரெண்டு நாள் கழிச்சு வாங்க! எல்லாம் ரெடியா இருக்கும்!'' என்று சொன்னவர், அடுத்த நிமிஷம் எங்கே போனார்னே தெரியலை. அந்த புரோக்கரின் நேர்மையை உறுதிப்படுத்த இன்னும் சில புரோக்கர்களிடம் விசாரித்தோம். `பர்ஃபெக்ட் பார்ட்டி'ன்னு பலரும் சர்டிஃபிகேட் தந்தனர்.
ரெண்டு நாள் கழிச்சு சொன்னமாதிரி நாமும் அங்கே போக, வண்டியை நிறுத்தி ஸ்டாண்ட் போடுவதற்குள் அதே ஆள் கையில் சர்டிஃபிகேட்டுடன் நின்றார். சர்டிஃபிகேட்டைப் பார்த்தால் சி.சுப்பிரமணியன் என்றிருந்தது.
```பாரதி,' எங்கய்யா?''ன்னு கேட்க, ``அதென்னங்க பெரிய விஷயம்!''னு போனவர் பத்தே நிமிடத்தில் சுப்பிரமணிய பாரதியின் பெயரில்
பிற்படுத்தப்பட்டோருக்கான முறையான சான்றிதழுடன் வந்தார். அதைப் பார்த்ததும் நம் கண்களையே நம்மால் நம்ப முடியவில்லை. கொஞ்சம் உற்றுப் பார்த்ததும்தான் தெரிந்தது சின்னச்சாமி என்ற தகப்பனார் பெயரை சின்னராஜ் என்று தவறாகக் குறிப்பிட்டிருந்தது. அதையும் மாற்ற முடியுமா என புரோக்கரைத் தேடினோம். பார்ட்டி எஸ்கேப்.
புரோக்கருக்கு பாரதியைத் தெரியாமல் இருக்கலாம். கையெழுத்துப்போட்ட அதிகாரிக்குமா சந்தேகம் வந்திருக்காது! `இவர்கள் பாரதியை மறந்துவிட்டார்களா? அல்லது பணத்தைத் தவிர வேறு எதுவும் இவர்கள் நினைவில் இல்லையா?'
`இந்த அலுவலகத்தில் மட்டும்தான் இப்படி நடக்கிறதா? இல்லை எல்லா இடத்திலும் இதுதான் நிலைமையா?இதையெல்லாம் தெளிவுபடுத்திக்கொள்ள மற்றொரு இடத்திற்குச் சென்றோம்...
இம்முறை ஒரு சினிமா பிரபலத்தின் பெயரில் சாதிச் சான்றிதழ் பெற்றுப் பார்ப்போம் என்று முடிவு செய்தோம்... குஷ்பு பெயரைத் தேர்வு செய்தோம்...
இது இரண்டாவது அனுபவம் என்பதால் வேலை சுலபமாகவே இருந்தது. புரோக்கர் கேட்டதைவிட, `ஐநூறு ரூபாய் அதிகம் தருகிறோம்; அவசரம்!' என்று நாம் சொன்னதும் வேலைகள் விரைந்து நடந்தன. அந்த அவசரத்தில் குஷ்பு_சுந்தர் என நாம் எழுதிக் கொடுத்ததை எப்படிப் புரிந்துகொண்டார்களோ தெரியவில்லை. சுந்தரைத் தகப்பனார் என்று மாற்றிவிட்டனர். சாதியையும் அவர்கள் சவுகரியத்திற்கு மறவர் என முடிவு செய்து கொண்டனர்.
சாதியும், முறையும் எப்படி இருந்தால் என்ன, தவறு செய்கிறார்களா? இல்லையா? என்பதுதான் முக்கியம் என்று நாமும் அதைப் பெரிதுபடுத்தவில்லை. ஆனாலும் பேச்சுக்கு, ``இந்த சர்டிஃபிகேட் ஒரிஜினல்தானா?'' என்று கேட்டோம்.
``இது செல்லாத இடம் ஒன்று இந்தியாவில் இல்லை! என்னவொன்று இதனுடைய நகலை மட்டும் அலுவலகத்தில் இருந்து அப்புறப்படுத்திவிடுவோம்!'' என்று சர்வசாதாரணமாகச் சொல்கிறார்கள். இதைச் செய்ய தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட புரோக்கர்கள் ஓர் அமைப்பாகவே செயல்படுகிறார்களாம்.
ஆக, பாரதியார் நாடார் ஆவதும்; குஷ்பு மறவர் ஆவதும் இவ்வளவு எளிது என்றால், பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடெல்லாம் யாருக்காக? எதற்காக? எதுவாயினும், விற்கப்படுவது சான்றிதழ் அல்ல சமூக நீதி என்பதைப் புரிந்துகொண்டு, அதன் காவலர்கள் உரிய நடவடிக்கை எடுத்தால் சரி!.