சந்தி சிரிக்குது சமுக நீதி.

நமக்கு தெரிந்ததுதான் என்றாலுல் இந்த செய்தியை படித்த போது பகீரென்றது.. இப்படியும் ஒரு பொழைப்பு.. இவர்களுக்கு தங்களின் சம்பாத்தியம் எப்படி உடம்பில் ஒட்டுகிறது என்று தெரியவில்லை. .
அவர்களும் வெட்கப்படவேண்டும், அவசரத்திற்கு பணம் கொடுத்த்தாவது வேலையை நட்த்திக்கொண்டு அவர்களை ஊக்கப்படுத்தும் நாமும் வெட்கப்படவேண்டும்..

குமுதம் குழுவினர் இன்னும் சற்று முயற்சி செய்து அந்த ப்ரோக்கர் , அந்த அலுவலகத்தில் இருக்கும் (இதில் சம்பந்தப்பட்ட) அதிகாரிகள், கையெழுத்திடுக் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் பற்றிய விவரங்களை தந்திருக்கலாம். அந்த ப்ரோக்கரின் பேச்சை டேப் செய்து, அவரின் புகைப்படத்தையும் போட்டிருக்கலாம்.

இப்படி அடையாளம் காண்பிகப்படாத கட்டுரை இந்த கேவலைத்தை படம் பிடித்து மக்களுக்கு காட்டியிருந்தாலும், குறிப்பிட்ட அந்த ப்ரோக்கர், அதிகாரிகள் எரும மாட்டு மேல மழை பெய்தது போல் தான் இதை எடுத்திருப்பார்கள்.. புகைப்பட மற்றும் அவர்கள் பற்றி சில விஷயங்கள் கட்டுரையில் இருந்திருந்தால், அந்த எருமைகளுக்கு சிறிதாவாது உரைத்திருக்கலாம்.. யாருக்கு தெரியும்? அதையும் தங்களிடம் இருக்கும் கரண்சிகளை வைத்து துடைத்துபோடும் ஜென்மங்களாக அதுகள் இருக்கலாம்..


இதோ சாதி சாண்று தரும் அலுவலகத்தின் அசிங்கங்கள் பற்றி குமுதத்தில் வந்த கட்டுரை..


நன்றி : குமுதம்

சாதிகள் இல்லையடி பாப்பா!' என்று பாடிய சுப்பிரமணிய பாரதிக்கு சாதிச் சான்றிதழ்! அதுவும் பிற்படுத்தப்பட்டவர் என்று!
என்ன, ஆச்சரியமாக இருக்கிறதா? ஆச்சரியப்படவோ அதிசயிக்கவோ இதில் எதுவுமே இல்லை... உங்களிடம் காசிருந்தால் போதும் நீங்கள் விரும்பும் ஜாதியில் உங்களுக்கான இடம் ஒதுக்கப்படும். அவ்வளவு ஏன்? உங்களுக்குப் பிறக்காத குழந்தை முதல் மூன்று தலைமுறைக்கு முன் மறைந்த உங்கள் மூதாதையர் வரை யாருக்கு வேண்டுமானாலும் எந்த சாதியிலும் நீங்கள் இடஒதுக்கீடு பெறலாம்.
அப்படித்தான் பாரதியாருக்கும் வகுப்பு மாறி இடம் ஒதுக்கப்பட்டது. பாரதி மறைந்து எண்பத்தேழு ஆண்டுகளுக்குப் பின்பு, `புதுப்பேட்டையில் இருக்கிறார். அவருக்கு ஜாதி கிடையாது. ஆனால் சான்றிதழ் வேண்டும்!' என்று நாம் கேட்ட இரண்டாவது நாளே நாடார் சமூகத்தில் அவரைச் சேர்த்து நம்மை பிரமிக்க வைத்துவிட்டனர்!

நிஜமான தகவல்களைச் சொல்லி, நியாயமான சான்றிதழைக் கேட்டால் பெறுபவரை நேரில் வரச்சொல்லி, பிறப்புச் சான்றிதழில் என்ன ஜாதி? பள்ளிக்கூட சான்றிதழில் என்ன ஜாதி? விலாசத்தை உறுதிப்படுத்த, ரேஷன் அட்டை, வாக்காளர் அட்டை, டிரைவிங் லைசன்ஸ் நகல் என பலவற்றைக் கேட்டு பாடாய்ப்படுத்தும் அதிகாரிகள், இடைத்தரகர்களிடம் மட்டும் எதுவுமே கேட்காமல் நீட்டிய இடத்தில் கையெழுத்துப் போடுவதன் காரணம்தான் நமக்குப் புரியவில்லை.

பாரதியார் பெயரில் இந்த கம்யூனிட்டி சர்டிஃபிகேட் வாங்க நாமும் பெரிதாக ஒன்றும் சிரமப்படவில்லை.சில ஆயிரங்களை இடைத்தரகரிடம்இழந்தோம். அவ்வளவுதான். கொஞ்சம் சிரமப்பட்டது பொருத்தமான புரோக்கரை கண்டுபிடிக்க மட்டும்தான்.

அதற்காக, அந்த அலுவலகத்தின் உள்ளேயும் வெளியேயும் நம் விசாரணையைத் தொடங்கி அலைந்து கொண்டிருந்ததை அவர்களும் கண்காணித்திருக்க வேண்டும். கொஞ்சம் சோர்ந்து ஒரு மரநிழலில் சற்று ஒதுங்கிய நேரத்தில் கரெக்டாக வந்தார் ஆஜானுபாகுவான அந்த ஆள்.

``சாருக்கென்ன, சாதி சர்டிஃபிகேட் வேணுமா?'' என்று சம்மன் இல்லாமல் அவர் ஆஜராக, அப்பொழுதே நம் முயற்சியில் பாதி முடிந்துவிட்ட மாதிரிதான்!

``எந்த புரூஃபும் இல்லாம `பி.சி.' சர்டிஃபிகேட் வேணும்னா சார்ஜ் ஜாஸ்தியாகும். நாளும் முன்ன பின்ன ஆகும்! சரின்னா ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் குடுங்க! வேலை முடிஞ்சதும் மீதி!'' என்று நேரிடையாகவே அவர் மேட்டருக்கு வர, நமக்கு கொஞ்சம் தயக்கம்தான்! ஆனாலும் காசைக் கொடுத்துட்டு, சான்றிதழுக்கான விவரங்களை ஒரு துண்டுக் காகிதத்தில். `சி. சுப்பிரமணிய பாரதி, தந்தை பெயர் சின்னசாமி என்று மட்டும் எழுதிக் கொடுத்தோம். நாம் என்ன எழுதினோம் என்பதைப் பற்றி அந்த புரோக்கர் கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை.
நம்மைப் பார்த்து, ``ரெண்டு நாள் கழிச்சு வாங்க! எல்லாம் ரெடியா இருக்கும்!'' என்று சொன்னவர், அடுத்த நிமிஷம் எங்கே போனார்னே தெரியலை. அந்த புரோக்கரின் நேர்மையை உறுதிப்படுத்த இன்னும் சில புரோக்கர்களிடம் விசாரித்தோம். `பர்ஃபெக்ட் பார்ட்டி'ன்னு பலரும் சர்டிஃபிகேட் தந்தனர்.
ரெண்டு நாள் கழிச்சு சொன்னமாதிரி நாமும் அங்கே போக, வண்டியை நிறுத்தி ஸ்டாண்ட் போடுவதற்குள் அதே ஆள் கையில் சர்டிஃபிகேட்டுடன் நின்றார். சர்டிஃபிகேட்டைப் பார்த்தால் சி.சுப்பிரமணியன் என்றிருந்தது.

```பாரதி,' எங்கய்யா?''ன்னு கேட்க, ``அதென்னங்க பெரிய விஷயம்!''னு போனவர் பத்தே நிமிடத்தில் சுப்பிரமணிய பாரதியின் பெயரில்

பிற்படுத்தப்பட்டோருக்கான முறையான சான்றிதழுடன் வந்தார். அதைப் பார்த்ததும் நம் கண்களையே நம்மால் நம்ப முடியவில்லை. கொஞ்சம் உற்றுப் பார்த்ததும்தான் தெரிந்தது சின்னச்சாமி என்ற தகப்பனார் பெயரை சின்னராஜ் என்று தவறாகக் குறிப்பிட்டிருந்தது. அதையும் மாற்ற முடியுமா என புரோக்கரைத் தேடினோம். பார்ட்டி எஸ்கேப்.

புரோக்கருக்கு பாரதியைத் தெரியாமல் இருக்கலாம். கையெழுத்துப்போட்ட அதிகாரிக்குமா சந்தேகம் வந்திருக்காது! `இவர்கள் பாரதியை மறந்துவிட்டார்களா? அல்லது பணத்தைத் தவிர வேறு எதுவும் இவர்கள் நினைவில் இல்லையா?'

`இந்த அலுவலகத்தில் மட்டும்தான் இப்படி நடக்கிறதா? இல்லை எல்லா இடத்திலும் இதுதான் நிலைமையா?இதையெல்லாம் தெளிவுபடுத்திக்கொள்ள மற்றொரு இடத்திற்குச் சென்றோம்...

இம்முறை ஒரு சினிமா பிரபலத்தின் பெயரில் சாதிச் சான்றிதழ் பெற்றுப் பார்ப்போம் என்று முடிவு செய்தோம்... குஷ்பு பெயரைத் தேர்வு செய்தோம்...

இது இரண்டாவது அனுபவம் என்பதால் வேலை சுலபமாகவே இருந்தது. புரோக்கர் கேட்டதைவிட, `ஐநூறு ரூபாய் அதிகம் தருகிறோம்; அவசரம்!' என்று நாம் சொன்னதும் வேலைகள் விரைந்து நடந்தன. அந்த அவசரத்தில் குஷ்பு_சுந்தர் என நாம் எழுதிக் கொடுத்ததை எப்படிப் புரிந்துகொண்டார்களோ தெரியவில்லை. சுந்தரைத் தகப்பனார் என்று மாற்றிவிட்டனர். சாதியையும் அவர்கள் சவுகரியத்திற்கு மறவர் என முடிவு செய்து கொண்டனர்.
சாதியும், முறையும் எப்படி இருந்தால் என்ன, தவறு செய்கிறார்களா? இல்லையா? என்பதுதான் முக்கியம் என்று நாமும் அதைப் பெரிதுபடுத்தவில்லை. ஆனாலும் பேச்சுக்கு, ``இந்த சர்டிஃபிகேட் ஒரிஜினல்தானா?'' என்று கேட்டோம்.

``இது செல்லாத இடம் ஒன்று இந்தியாவில் இல்லை! என்னவொன்று இதனுடைய நகலை மட்டும் அலுவலகத்தில் இருந்து அப்புறப்படுத்திவிடுவோம்!'' என்று சர்வசாதாரணமாகச் சொல்கிறார்கள். இதைச் செய்ய தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட புரோக்கர்கள் ஓர் அமைப்பாகவே செயல்படுகிறார்களாம்.

ஆக, பாரதியார் நாடார் ஆவதும்; குஷ்பு மறவர் ஆவதும் இவ்வளவு எளிது என்றால், பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடெல்லாம் யாருக்காக? எதற்காக? எதுவாயினும், விற்கப்படுவது சான்றிதழ் அல்ல சமூக நீதி என்பதைப் புரிந்துகொண்டு, அதன் காவலர்கள் உரிய நடவடிக்கை எடுத்தால் சரி!.

விகடன் தலையங்கம்.

இந்த வார விகடனில் என்ன தேசமோ ?! என்ற தலைப்பில் ஒரு தலையங்கம்.

பாகிஸ்தானை எதிர்த்து இந்திய படைகளை வழிநடத்தி பங்களாதேஷ் என்கிற சுதந்திர நாட்டை உருவாக்கிக்கொடுத்த ஃபீல்டு மார்ஷல் மானெக்ஷா அவர்களின் மறைவுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தாத ஜனாதிபதி, பிரதமர், கவர்னர், முப்படைத்தளபதி, முதல்வர் என்று அனைவரையும் ஒரு பிடி பிடித்து, அரசியல் கட்சித்தலைவரைகளையும் சாடி, இறுதியில் இந்த தேசமே தலை குனிய வேண்டும் என்று முடித்துள்ளது.

விகடனாரின் இந்த ஆதங்கம் புரிகிறது. இதில் எந்த தவறும் இல்லை.
விகடனாரே, அரசின் உயர் பதவியில் இருப்பவர்கள், அரசியல்வாதிகள் ஆகியோரை ஒரு பிடி பிடித்த நீங்கள் ஏன் நாண்கு தூண்களில் ஒரு தூணாக கருதப்படும் பத்திரிக்கையை மட்டும் விட்டுவிட்டீர்?

சின்டு முடித்த திரிஷா, திண்டாடிப்போன நயனதாரா என்ற தலைப்பில் உப்பு பெறாத ஒரு விஷயத்தை உங்களின் ஜூ வி யில் ஸ்பெஷல் பக்கங்களில் எழுதியுள்ளீர்.

சுட்ட பழம் கெட்ட பழமா என்று கவர்ச்சிப்படத்துடன் ஒரு நேர்முகம். குசேலனுக்கும் , தசாவதாரத்துக்கும் கவர் ஸ்டோரி.

கருணாநிதி குடும்ப கலாட்டாவுக்கு தவறாமல் கழுகாரின் 1 பக்க ரிப்போர்ட். அடுத்த முதல்வர் ஸ்டாலின் என்று உங்கள் கற்பனை ரிப்போர்ட் 2 இதழ்களுக்கு ஒரு முறை.

முத்தம் கொடுத்தாரா சிம்பு என்று 3 வாரமாக ஆராய்ச்சிக்கட்டுரை..

நடிகைகளின் இடையையும் , தொடையையும் ஓப்பீடு செய்யாத கேள்வி பதில் இல்லை..அட்டைப்படத்தில் அரையாடை நடிகைகள் அல்லது உச்சத்தில் இருக்கும் நட்சத்திரங்கள்..

இப்படியெல்லாம் போகும் உங்களின் பத்திரிக்கையில் தேடி பார்க்கிறேன், ஒரு பக்கம் கூட ஃபீல்டு மார்ஷல் மானெக்ஷா பற்றிய கட்டுரை இல்லையே??

திரிஷாவும் நயனதாராவும் எழுதினால், அசின், நமிதாவின் அரையாடை அல்லது ரஜினியின் படத்தை அட்டையில் போட்டால் தேறும் சில்லரை இவரின் அட்டைப்படத்தையோ, 2 பக்க கட்டுரையோ எழுதினால் தேறாது என்பதால் தானே இவர் பற்றி தலையங்கத்தில் 6 வரி எழுதி அதுவும் அவன் கெட்டவன், அவன் கேவலமானவன் என்று காட்டிவிட்டு போக மட்டுமே..

சினிமாவையும், கிரிக்கெட்டையும், அரசியலையும் மக்களை விட , உங்களின் காசுக்காக தூக்கிவைத்து எழுதி எழுதி மக்களை மடையர்களாக மாற்றியுள்ளது உங்கள் பத்திரிக்கை துறை தானே??

அப்புறமென்ன, கிரிக்கெட்டை கொண்டாட தெரிந்த தேசத்துக்கு இவரை கொண்டாட தெரியவில்லையே என்று ஒரு போலி ஆதங்கம் உங்களுக்கு?

திரிஷாவின் , நமிதாவின் தொப்புளை , லைலாவின் கால் இடுக்கை போகஸ் செய்துக்கொண்டு இருந்த உங்கள் பத்திரிக்கை காமிராக்களுக்கு என்ன ஒரு கரிசனம் இந்த தேசத்தின் மீது திடிரென்று???

பத்திரிக்கைதுறை சார்ந்தோர், உங்கள் விகடனார் குழுவில் இருந்து எத்துனை பேர் அங்கே சென்றீர்கள் இறுதி மரியாதை செய்ய??

உங்கள் தலையங்கத்தில் ஒரு இடத்தில் " அரசியல் தலைவர்களுக்கு, மானெக்ஷா என்ற மாமனிதரின் மறைவு, இருந்த இடத்திலேயே ஒரு அறிக்கை எழுதிக் கொடுத்து, காகிதத்தோடு கடமையைக் கழித்துக்கொண்ட ஒரு சடங்காகிவிட்டது! என்று எழுதியுள்ளீர்கள்.
உங்களின் இந்த தலையங்கத்துக்கும் அந்த அறிக்கைக்கும் என்ன வித்தியாசம்?? இது தலையங்கம், அது அறிக்கை, இது 10 வரிகள், அறிக்கை 3 - 4 வரிகள் இருக்கலாம்... அது மட்டுமே வித்தியாசம்..

இந்த அரசியல்வாதிகள், தேசம் அனைவருமே வெட்கப்படவேண்டும் , மாற்றுக்கருத்து இல்லை.. இவர்கள் அனைவரையும் விட, பத்திரிக்கை துறையே அவமானப்படவேண்டும் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள்.

விகடன் தலையங்கம் :
'உயிர், மண்ணுக்கு!' என்ற வார்த்தைகளின் உண்மை உதாரணம் அவர்; எதிரியின் துப்பாக்கிக் குண்டு தன் உடலில் பாய்ந்தபோதும், குருதி சிந்தியபடியே களத்தில் போராடிய மாவீரர்; தன் தியாகங்களை முரசறைந்து விளம்பரம் தேடிக்கொள்ள விரும்பாத தூய தேசபக்தர்; எத்தகைய தருணத்திலும் அதிகார வர்க்கத்துக்கு 'ஆமாம் சாமி' போடாதவர்!
வெற்றுக் கோஷங்களில் தன்னை உயர்த்திப் பிடிக்காமல், உண்மையான உதாரணத் தலைவனாக வாழ்ந்து காட்டிய அந்த மாமனிதர் ஃபீல்டு மார்ஷல் மானெக்ஷா!
பாகிஸ்தானை எதிர்த்து, இந்தியப் படைகளைச் சிங்கம் போல வழிநடத்தி, பங்களாதேஷ் என்ற சுதந்திர நாட்டை உருவாக்கிக் கொடுத்த மானெக்ஷா, தன் இறுதிக் காலத்தைத் தமிழகத்தில் கழித்து, இங்கேயே தன் இன்னுயிரை நீத்திருப்பது நமக்கெல்லாம் வரலாற்றுப் பெருமை!
ஆனால், அந்த வரலாற்று நாயகருக்கு நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்த வேண்டும் என்று இந்த நாட்டின் ஜனாதிபதி, முப்படைத் தளபதிகள் எனத் துவங்கி... பிரதமர், ராணுவ அமைச்சர், மாநில முதல்வர் என யாருக்குமே எண்ணம் இல்லை என்பது எத்தகைய கொடுமை!
ஆதரவு கொடுக்கும் அரசியல் கட்சிகளின் அரசியல் மாநாடுகளில் கலந்துகொண்டு, மணிக்கணக்கில் புகழுரைகள் ஆற்றத் தெரிந்த அரசியல் தலைவர்களுக்கு, மானெக்ஷா என்ற மாமனிதரின் மறைவு, இருந்த இடத்திலேயே ஒரு அறிக்கை எழுதிக் கொடுத்து, காகிதத்தோடு கடமையைக் கழித்துக்கொண்ட ஒரு சடங்காகிவிட்டது!
'கிரிக்கெட் விளையாட்டில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் உலகக் கோப்பை வென்றதைக் கூடிக் கொண்டாடத் தெரிந்த இந்த தேசத்துக்கு, ஒரு யுத்தத்தையே வென்று கொடுத்து மானம் காத்த மாமனிதருக்கு மரியாதை செய்யத் தெரியவில்லையே!' என்று உலகமே அதிர்ச்சியுடன் பார்க்கிறது.
இதற்காக, இந்த தேசமே வெட்கத்தில் தலைகுனியத்தான் வேண்டும்
நன்றி - விகடன்

ஞாநியும் அவர் யோசனைகளும்.

இது ஒரு தொடர்கதையாகிவிட்டது. ஞாநி ஓ பக்கங்கள் எழுதுவதும் அது சர்ச்சையாவதும். 2 வரிகள் ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில் எழுதிவிட்டு, 25 வரிகளை கட்டுரையை நிரப்ப எழுதுவதை ஞாநி வழக்கமாக்கிகொண்டுள்ளார்.

ஆக்கப்பூர்வமான விஷயங்கள் எழுதுவதை விடுத்து, தன் தனிப்பட்ட விருப்பு வெறுப்பை தினிப்பதாகவே அவரின் ஓ பக்கங்கள் போகிறது.

இந்த வார ஓ பக்கத்தை பெட்ரோல் விலை ஏற்றம் குறித்து எழுதி நிரப்பியுள்ளார்.. அவர் விலையுர்வு பற்றி எழுதியுள்ளது, வரி விதிப்பு , அரசியல் பற்றி எழுதியது ஒரு பக்கம்..

ஆனால் சில யோசனைகளை அவர் கூறியுள்ளது தான் வியப்பாக உள்ளது. யோசித்து தான் எழுதினாரா.. அல்லது நக்கல் அடித்து யோசனைகள் தெரிவித்துள்ளாரா புரியவில்லை.

யோசனை 1. கார், டூவீலருக்கு லிட்டர் விலை: ரூ 100. விமான பெட்ரோலுக்கு சலுகை எதுவும் கூடாது. ஆட்டோ, சரக்கு லாரிகள், ரயில் எஞ்சின் முதலியவற்றுக்கான பெட்ரோல், டீசலுக்கு மட்டுமே சலுகை விலை.

மக்களிடம் அநியாய வசூல் செய்யும் ஆட்டோக்கு சலுகை விலை, கஷ்டப்பட்டு உழைத்து டூவீலர் கார் வாங்கியவருக்கு 100 ரூ. அதிலும் அவர் அரசுக்கு வரி கட்டுபவர். ஆட்டோ ஓட்டுனர் வரி கட்டுகிறாரா என்று தெரியவில்லை.. அல்லது டூ வீலர் வைத்திருப்பவர்கள் எல்லாம் வசதி படைத்தவர்கள் , அவர்கள் நடுத்தர வர்க்கம் என்பது ஞாநியின் வாதமா??

யோசனை 2. பள்ளி, கல்லூரி மாணவர்கள் யாரும் டூவீலர் ஓட்ட அனுமதியில்லை. சைக்கிளை மட்டுமே பயன்படுத்தலாம். உடலுக்கும் நல்லது. பர்ஸுக்கும் நல்லது.

யோசனை 3. சைக்கிளில் சென்று வரும் தொலைவில் வீடு உள்ளவர்களுக்கு மட்டுமே அந்தந்த வட்டாரப் பள்ளி,கல்லூரிகளில் அட்மிஷன் தரப்படவேண்டும்.

ஒன்றோடு ஒன்று தொடர்புடை இந்த 2 யோசனைகள் பற்றி என்ன சொல்ல??

ஞாநி அவர்களே, என்ன பிரச்சனை உங்களுக்கு, நீங்கள் கருணாநிதிக்கு அறிவுரை சொன்னது போல, நீங்களும் எழுத்துப்பனியில் இருந்து ஒய்வு பெற்று,அமைதி காணலாம். ஒரு நல்ல சைக்காட்ரிஸ்ட்டை பார்க்கலாம்.

சைக்கிளில் சென்று வரும் தூரம் என்பதற்கு என்ன அளவுகோல் வைப்பீர்கள்? ஓரு வேளை அப்படி சேர்த்த பிறகு, ஒரு மாணவன் சூழ்நிலை காரணமாக வீடு மாறினால், உடனடியாக டி. சி கொடுத்துவிடுவீர்களா?

இன்றைய சூழலில் நடுத்தர வர்கத்தினர், நகர்புறத்திற்கு சற்று தள்ளி வீடு கிடைத்தாலும் தங்கள் பட்ஜெட்டுக்கு அடக்கமாக இருக்கட்டும் என்று, வீடு வாங்குவதோ அல்லது வாடகைக்கோ செல்கிறார்கள். அந்த நிலையிலும், தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல கல்வி கிடைக்கு வீட்டிலுருந்து சற்று தள்ளி இருக்கும் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்புகிறார்கள். நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் சார்?

அந்த பள்ளிக்கு அருகில் எவ்வளவு விலை இருந்தாலும் அங்கே தான் வீடு வாங்க வேண்டும், அல்லது குடி புக வேண்டுமா? இல்லை, வீட்டின் அருகில் இருக்கும் ஏதோ ஒரு பள்ளியில் படிக்க வைக்கட்டும் என்றா??
பள்ளிகள் இப்போது வேன், பஸ் வசதி செய்து தருகிறதே, அவர்களுக்கு என்ன விலை பெட்ரோல் தரலாமென்று சொல்லுங்களேன்?

யோசனை 4. அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் அன்றாடம் பஸ், ரயில்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

கிழிஞ்சது கிருஷ்ணகிரி, ஏற்கனவே அவங்கவங்க கார் ல போகும் போதே பொது மக்கள் படும் அவஸ்தை தாங்கல, இதுல இவங்களும் பஸ், ரயில்னு வந்துட்டா.. அவ்ளோதான்.. மான்புமிக... . பயனம் செய்யும் பேருந்து, ரயில்னு பேருந்து நிலையம், ரயில் நிலையம் அமர்களப்படும்.. நல்லாத்தான் இருக்கும்..

யோசனை 5. நகரிலும் எந்தச் சாலையிலும் புதிய மேம்பாலங்கள் அடுத்த பத்தாண்டுகளுக்குக் கட்டக் கூடாது. புதிய உள்ளூர் ரயில் திட்டங்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு.

நல்லதொரு யோசனை.. எறும்புக்கு பயந்து வீட்டை கொளுத்துடா நு சொல்றீங்க.. இந்த யோசனையால் என்ன சாதிக்க முடியும்? இதுக்கு பெட்ரோல் விலைக்கும் என்ன சம்பந்தம்..

பாலம் எல்லாம் சிமென்ட் - தண்ணி கலந்து தானே கட்டுறாங்க?? இல்லை சிமென்ட் டீசல் கலந்து கட்டுறாங்களா?

ஓ, ஒரு வேளை பாலங்கள் இல்லாமல், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால், மக்கள் டூ வீலர், கார் வாங்க பயப்படுவாங்களா?? அப்படி பார்த்தா , இதே கட்டுரையில் நீங்க சொன்ன கூடுதல் பஸ் விடும் மேட்டர் எப்படி?? அந்த கூடுதல் பஸ் எல்லாம் போக்குவரத்து நெரிசல் இல்லாம எப்படி போகும்?? ஓ போட வைத்த இது தான் "ஓ" பக்க யோசனை

அப்படியே பத்தாண்டுக்கு எந்த திட்டமும் போடகூடாது, எந்த வளர்ச்சி பனிகளும் நடக்ககூடாது, அரசாங்கத்தை முடக்கிட்டா, வேலை வாய்ப்பு இல்லாம பன்னிட்டா.. யாரும் வெளிய போற வேலை இருக்காது, டூ வீலர், கார், பஸ் ஓடவேண்டிய அவசியமில்லாம, பெட்ரோல் விலை தானா குறைந்திடும்நு ஒரு யோசனை சொல்லுங்களேன்..

யோசனை 7. ஒரு காரில் ஒருவர்/இருவர் மட்டுமே பயணம் செய்வதைக் கண்டால், ஸ்பாட் ஃபைன் போடப்படும்.

இந்த யோசனை தான் டாப்.. இதை போய் 7 வது யோசனையா சொல்லிட்டீங்களே. இது தான் நெ 1 ல இருக்கனும்..
ஒரு குடும்பத்துல 4 பேரு. அப்பா, அம்மா 2 குழந்தைகள். காலைல எல்லோரும் கிளம்பி 2 குழந்தைகளை பள்ளில விட்டுட்டு அங்கிருந்து 2 கிமீ தூரத்துல இருக்க அலுவலகத்துல மனைவியை விட்டுட்டு அங்கிருந்து 5 கிமீ தூரம் இருக்கும் தன் அலுவலகத்துக்கு கனவர் போகிறார்,
இப்போ எப்படி, எங்கெல்லாம் ஸ்பாட் ஃபைன் போட வேண்டும்?

நமக்கே ஒரு அவசரமென்றால், டூ வீலர் எடுத்துக்கொண்டு ஓடுவோம்.. அந்த நேரத்தில் அக்கம் பக்கம் வீடுகளில் விசாரித்து யாரையாவது கூட்டிக்கொண்டு போகவேண்டுமா? இல்லை ஸ்பாட் ஃபைன் தவிர்க்க சும்மான்வானும் ஒருவரை பின்னால் அமர வைத்து செல்லவேண்டுமா?

அப்படியே அரசாங்க பேருந்து கூட்டம் இல்லாமல் சென்றால் அதற்கும் ஸ்பாட் ஃபைன் போடலாமா?

இருந்தாலும் உங்க இந்த யோசனை டராபிக் கான்ஸ்டபிள், போலிஸ்காரர்களுக்கு சர்க்கரை பொங்கல் தான்.. கல்லா கட்டலாமே...

இந்த யோசனைகளுக்காக உங்களுக்கு ஸ்பெஷல் ஓ போடலாம் திரு
யோசனை திலகம் ஞாநி அவர்களே.

காசா , பணமா, இன்னும் நிறைய யோசனை சொல்லுங்க அடுத்த ஓ பக்கத்துல.. எப்படி பண வீக்கத்தை குறைக்கலாம், எப்படி வேலை வாய்ப்பை பெருக்கலாம்னு..

நன்றி

தசாவதாரம் பார்த்தவர்களே.. - ப்ளீஸ் யாராவது சொல்லுங்களேன்

தசாவதாரம் ரீலிஸான தியேட்டர்களின் எண்ணிக்கையை விட இங்கே தசாவதாரம் படம் பற்றிய விமர்சன பதிவுகள் அதிகம்..

பல படத்தை புகழ்ந்தும், வெகு சில படம் நல்ல இல்லை என்றும் எழுதப்பட்டுள்ளது. மிகச்சிலர் வழக்கம் போல இதனையும், பார்பனீயம் அது இது என்று உளறிக்கொட்டியுள்ளார்கள்..

படம் பார்த்த மக்களே இங்கே எனக்கு 2 விஷயங்களை மட்டும் தெளிவு படுத்துங்களேம்.. தயவு செய்து.. இது தெரியாமல் சிந்து பைரவி ஜனகராஜ் நிலையில் இருக்கின்றேன்...

1. உங்கள் விமர்சனம் படிக்கும் போது , கதை என்பது ஒரு அரிய கண்டுபிடிப்பை தீவரவாதிகள் கையில் சிக்காமல் காப்பற்ற நடக்கும் நிகழ்வுகள் என்று தெரிகிறது. கமலின் பல வேடங்கள் இந்த கதையின் ஓட்டத்தில் எப்படி சேரும் என்று ஓரளவு ஊகிக்க முடிகிறது ஆனால், இந்த ரங்கராஜன் கேரக்டரும், 12, நூற்றாண்டு நிகழ்வுகளும், சைவ - வைணவ போராட்டங்களும் ஏன்? இந்த கதையோட்டத்தில் எப்படி ஒன்றி வருகிறது என்று யாரும் எழுத வில்லையே ஏன்? அது மிகப்பெரிய சஸ்பென்ஸா???

2. இந்த படத்தில், சைவ , வைணவ சன்டை காட்சி.. ரங்கநாதருடன் கமலை கட்டி கடலில் போடுவது, கீதை மேல் நிற்பது போன்று பல காட்சிகள் இருப்பதாக வழக்கு தொடரப்பட்டு , அவை தள்ளுபடி செய்யப்பட்டது அனைவரும் அறிந்ததே.

நீதிமன்றமும், படத்தை பார்த்துவிட்டு ஆட்சேபம் இருந்தால் வழக்கு போட சொல்லியுள்ளது..

படம் பார்த்தவர்களே சொல்லுங்கள்.. மீன்டும் வழக்கு போட முகாந்திரம் உள்ளதா?? ட்ரையிலரில் பார்த்தது போல, கடவுள் சிலையுடன் கமலை கட்டி கடலில் போடுவது போல இருக்கிறதா?? ஆட்சேபத்திற்குறய காட்சிகள் உள்ளதா??

விமர்சனங்கள் படித்த போது, சைவ , வைணவ சன்டை இருப்பதாக, கடலில் வீசும் காட்சிகள் இருப்பதாக தெரிகிறது.. ஆனால் தெளிவாக யாரும் அது பற்றி எழுதாததால், புரியவில்லை..

படம் பார்த்து விமர்சனம் எழுதிய யாரும் இது பற்றி எழுதாததால் இந்த பதிவு போடும்படி ஆகிவிட்டது.. !!!

குறிப்பாக , சர்ச்சையை கிளப்பிய 2 வது விஷயம் பற்றியாவது எழுதியிருக்கலாம் நன்பர்களே.. லக்கியார் எழுதியிருப்பார் என நினைத்தேன்.. விட்டு விட்டார்..

படம் பார்த்தவர்களே, கொஞ்சம் தெளிவுப்படுத்துங்களேன்..
நன்றி..