சென்னை மந்தைவெளி பேருந்து நிறுத்தம். மாலை சுமார் 5.30 மணி..
ஐயா, வணக்கமுங்க.. இந்த விலாசத்துக்கு எப்படி போவோனுங்க?
குரல் கேட்டு, வெகு சுவாரஸ்யமாக அப்போது தான் பார்த்துவிட்டு வந்த திரைப்படத்தை பற்றி அலசிக்கொண்டிருத்த இரண்டு இளைஞர்களும் எரிச்சலாக திரும்பிப்பார்த்தார்கள்..
கையில் கசங்கிய காகிததுண்டுடன் அந்த பெரியவர் நின்றுக்கொண்டிருந்தார்..கலைந்த தலை, மெல்லிய கூன் விழுந்த தேகம், கறுத்த நிறம், பழுப்பேறிய வேட்டி, சட்டை, தாடி , மீசையுடன் பார்பதற்கே சற்று முகம் சுளிக்கும்படி தான் இருந்தார்.. கையில் ஒரு மஞ்ச கலர் துனிப்பை... வெற்றிலை கரையேறிய பற்கள் தெரிய சிரித்தவாறே "இந்த வெலாசம் எங்க இருக்கு தம்பி..."
வேண்டா வெறுப்பாக, குடு இப்படி என்று துண்டு சீட்டை வாங்கி பார்த்த இருவரில் ஒருவன்,
என்னய்யா இது ஈரமா, பாதி எழுத்து அழிஞ்சு போயிருக்கு, தெரு பேர கானோம், சைதாப்பேட்டைனு மட்டும் இருக்கு..,... தண்ணில போட்டுடியா??
இல்லை தம்பி, பஸ்ல வந்த கசகசப்பு, வேர்வைல நெனஞ்சு போச்சுப்பா..
அவர் செல்லி முடித்த அடுத்த நொடியில், வலது கையிலிருந்த காகித துண்டை இடது கைக்கு மாற்றிக்கொண்டான். மேலும் ஒரு முறை பார்த்துவிட்டு, அவரிடமே திருப்பி கொடுத்தான்.. திருப்பி கொடுத்தான் என்பதை விட , அவர் மேல் வீசினான் என்று தான் சொல்ல வேண்டும்..
சொல்லுப்பா, எப்படி போவனும்? ஒரு மைல் தூரம் இருக்குமா? அப்பாவியாக கேட்டார்.
ஹ்ம்ம்ம்.. ஒரு மைல் தூரமில்லை, ரெண்டு சேவல் தூரம் போகனும்.. நக்கலடித்து விட்டு சிரித்தான்..கூட இருந்தவனும் சேர்ந்துக்கொண்டான்..
அவர்களின் நையாண்டியை கூட புரிந்துகொள்ளாமல், பதிலுக்காக காத்திருந்தார் பெரியவர்...
எந்த ஊருயா நீ? சைதாபேட்டைல இருக்க தெருவுக்கு மந்தைவெளில வந்து விசாரிச்சு உயிரை வாங்குற..
மாயவரம் பக்கம் தம்பி.. ஒரு சின்ன கிராமம்..
ஆமா, ஆமா , நீ இருக்க லட்சனத்துக்கு சின்ன கிராமத்துல இல்லாம, போயஸ் கார்டன்லயா இருப்பே??மூஞ்சி , மொகரைய பாரு.. எப்படிய்யா இங்கே வந்தே??
கோயம்பேடு வந்து எறங்கி ஒரு தம்பிய கேட்டேன்..அந்த தம்பி தான் ஒரு பஸ்ல ஏத்திவுட்டுச்சு.. இங்கே வந்துட்டேன்..
யோவ், பஸ் சைதாப்பேட்டை வந்தப்ப என்ன பன்னிட்டு இருந்தே?? எறங்கி தொலச்சி இருக்க வேண்டியது தானே..
தெரியலயேப்பா.. ஒடம்பு வலி...அப்டியே கண்ணு அசந்துட்டேன்..
நல்ல ஆளுயா நீ.. அப்படி ஓரமா நில்லு, சைதாபேட்டைனு போட்டு பஸ் வரும்..ஏறிப்போ..
சரிப்பா, ரொம்ப நன்றி... அமைதியாக நின்றார் பெரியவர்...
இருவரும் மீண்டும் திரை விமர்சனத்தை தொடர்ந்தனர்...தம்பி , மீண்டும் இடைமறித்தார்..
என்னய்யா ரோதனையா போச்சு உன்கூட..என்ன வேணும்? டீ சாப்பிட 2 ரூ வேணுமா???தம்பி,
சாமி புன்னியத்துல காசு கொஞ்சம் இருக்குப்பா... அது வேணாம்..
ஆமா, இவரு ரிஸர்வ் பேங்க் கவர்னர்.. நக்கலடித்தான்.. சரி என்ன சொல்லு...
எழுதப்படிக்க தெரியாதுப்பா, கொஞ்சம் சைதாப்பேட்டை பஸ் வந்தா சொல்லுங்கப்பா...
ஆமாய்யா, மாயவரத்து பக்கத்து கிராமத்துல இருந்து ஒரு மஞ்ச பைய தூக்கிட்டு வர காட்டானுங்களுக்கு வழி சொல்லி பஸ் ஏத்திவிடத்தான் இவன் மந்தைவெளியிலும் , நான் அன்னா நகர்லயும் இருக்கோம் பாரு....
தம்பி, கொஞ்சம் தயவு பன்னுங்கப்பா..
யோவ், இப்ப எதுக்கு நீ அங்கே இருந்து இவ்ளோ தூரம் இங்கே சென்னைக்கு வந்தே... நீயெல்லாம் வரலைனு சென்னை அழுதுச்சா?? வந்துடறானுங்க பாரு ஒரு மஞ்ச பைய தூக்கிட்டு, குளிப்பானுங்களோ , மாட்டானுங்களோ.. அழுக்கு துனிய போட்டுகிட்டு... பட்டிக்காட்டானுங்க..
மானம் பாத்த பூமி , மழை இல்லாம பட்டுப்போச்சுய்யா.. அறுப்பு இல்ல, கழுனி வேலையுமில்ல..வவுறு காயுது.. எங்க பிரசிடென்ட் ஐயா தான் மெட்ராஸ்ல கல்லு ஒடைக்கற வேலை இருக்கு போய் பொழச்சிக்கோடனு வெலாசம் கொடுத்து அனுப்பி வெச்சார்... பொறுப்பாக பதில் சொன்னார்...
அவர் சொல்லியதை இவர்கள் காதில் வாங்கியதாகவே தெரியவில்லை.. அவர்கள் கவனமெல்லாம் சாலையை கடக்க எதிர் பக்கத்தில் நின்றுக்கொண்டிருந்த அந்த இரண்டு நவநாகரீக காலேஜ் பெண்கள் மீதே இருந்தது...
டேய் மாப்ளே, அங்க பாருடா ரெண்டு சூப்பர் ·பிகர் வருது.. அந்த மஞ்சள் சுடிதார் சூப்பர்டா ..டேய் அதவிட பச்சை டீ சர்ட், ஜீன்ஸ் போட்டிருக்காளே அவ சூப்பர்டா... பஸ் ஸ்டாப்புக்கு தான் வராங்கடா... கவர் பண்ணமுடியுதானு பாரு...
தம்பி... பஸ் வந்தா... பெரியவர் இடைமறித்தார்...
அட, இந்தாளு வேற .. யோவ்..அப்படி ஓரமா போயி நில்லு வந்தா சொல்றேன், ஏறிப்போ... போயா..கொஞ்சம் தூர போய் நில்லு.. தொன தொனனு அறுக்காத .. புரியுதா..
டேய் இன்னும் கொஞ்சம் தூர போய் நிக்க சொல்லுடா அந்தாள.. பிகருங்க வர நேரத்துல அவன் பக்கத்துல நின்னு பேசிட்டு இருந்தா நம்ம இமேஜ் என்ன மச்சி ஆகறது... மந்தைவெளிகாரன் எரிச்சலோடு சொன்னான்..
இரண்டு பெண்களும் ஒரு வழியாக சாலையை கடந்து வந்து , இவர்களுக்கு ஒரு 10 அடி தள்ளி நின்றார்கள்...
இருவரில் ஒருவன் சீப்பை எடுத்து தலை சீவிக்கொண்டான், மற்றொருவன் ஒரு படி மேலே போய் பாக்கெட்டில் இருந்த கருப்பு கண்ணாடியை எடுத்து மாட்டிகொண்டான்...
மாப்ள, ஒரு தம் போடலாமாடா.. ஸ்டைலா ஒரு தம் போட்ட சூப்பரா இருக்கும்டா.. நிச்சயம் நம்மள பார்பாளுங்க... என்ன சொல்ற...
எதிர் திசையில் இருந்த பெட்டிக்கடைக்கு சென்று சிகரெட் வாங்கி பற்றிவைத்து புகை விட்டார்கள்...aனால் இந்த பெண்கள் தான் அவர்களை கண்டுக்கொண்டாதாகவே தெரியவில்லை...
அதுவரை வேறொரு திசையில் பார்த்துக்கொண்டிருந்த பெரியவர் இந்த பக்கம் திரும்பி அவர்கள் இல்லாததை கண்டு திகைத்துப்போனார்.. இப்போ யாரை கேட்பது என்று சுற்றுமுற்றும் பார்த்தவர் கண்களில் அந்த பெண்கள் பட்டனர்..
அருகே சென்றார்..
தாயி, கொஞ்சம் சேதாபேட்டை பஸ் வந்தா சொல்லுங்க தாயி.. பாவமாக சொன்னார்
இரண்டு பெண்களும் அவரை ஏற இறங்க பார்த்துவிட்டு, ஏதும் சொல்லாமல் சற்று தள்ளி நின்றனர்..
பெரியவர் சற்று நெருங்கி..அம்மாடி கண்ணுங்களா படிக்கத்தெரியாதாவன்மா ..ஒத்தாசை பன்னுங்கம்மா.. கெஞ்சும் தொனியில் கேட்டார்.
ஒ ! காட், வாட் இஸ் திஸ் நியூசன்ஸ், ஹைலி இர்ர்ரிடேட்டிங் யா... நுனி நாக்கு ஆங்கிலத்தில் வெளுத்து வாங்கினாள் ஜீன்ஸ் போட்டவள்...
யெஸ், இதுக்கு தான் ஆட்டோல போலாம்னு சொன்னே.. கேட்டியா , அந்தாளு மூஞ்சியும் , துனியும், கொமட்டிட்டு வருதுடி.. ·பீல் லைக் வாமிட்டிங், யூ நோ !! ஒத்து ஊதினாள் சுடிதார்..
இன்னமும் அவர்கள் பதிலுக்கு காத்திருந்தார் பெரியவர்...
கொஞ்சம் கூட நாகரிகம் இல்லாம, சே.. இதுக்கு தான்யா இந்த வில்லேஜ் ஆளுங்கள சிட்டிக்குள்ள வர கவர்மெண்ட் தடை போடனும்.. பேசிக்கொண்டே இன்னும் சற்று தள்ளிப்போய் நின்றுக்கொண்டனர்...
டேய்! அங்க பாருடா அந்த நாட்டுபுறத்தான் அந்த பிகருங்கள பிடிச்சிக்கிட்டான்.. நல்ல வேணும் அதுங்களுக்கு.. இவ்ளோ ஸ்மார்ட்டா ரெண்டு பேரு லுக் விட்டுட்டு இருக்கோம்.. நம்ம பக்கமே திரும்பாம...நக்கல் புடிச்சவளுங்க...நல்லா வேனும்... அல்ப சந்ஷோசம் அடைந்தார்கள் அந்த இரண்டு இளைஞர்கள்..
பெரியவர் அங்கிருந்த மேலும் நாலைந்து பேரிடம் கேட்டு பார்த்தார்...
யோவ் தூர போயா,
தள்ளி நில்லுயா வந்தா சொல்றேன்,
கழுத்தறுப்பு... நானே அண்ணா நகர் பஸ் எப்பவரும்னு தெரியாம நிக்கறேன்,
பெரிசு, ஒதுங்கி நில்லு... வந்தா சொல்லுவாங்க..
இப்படிபட்ட பதிலே வந்தது.... பாவமாக சற்று ஒதுங்கி நின்றார்.. யாரவது சொல்லுவார்கள் என்ற நம்பிக்கையில்...
ஒரு பேருந்து வந்து நின்றது... அது சைதாப்பேட்டை போகுமா? பெரியவர் தவித்துப்போய் விட்டார்
ஐயா இது போவுமா, போவுமா அனைவரிடமும் கேட்டுப்பார்த்தார்.....பதில் வரவில்லை..
அனைவரும் அந்த பேருந்தில் ஏறுவதிலும்.. பின்னால் வரும் அடுத்த பேருந்தை நோக்கி ஓடுவதிலேயே குறியாக இருந்தார்கள்..
பெரிசு, இது போவாது இது அன்னா நகர் போது... அதோ பின்னாடி வருது பாரு அது போவும் ..போ .. யாரோ ஒருவர் சொல்லிவிட்டு முதல் பேருந்தில் ஏறினார்...
பெரியவர் பின்னால் நிற்கும் இரண்டாவது பேருந்தை நோக்கிச்சென்றார்...
ஜீண்ஸ¤ம், சுடிதாரும் கூட முதல் பேருந்தில் ஏறி ஜன்னலோரும் இருக்கையில் அமர்ந்தார்கள்..
இளைஞர்களும் சுறுசுறுப்பானார்கள், டேய் உனக்கு பஸ் வந்தாச்சு... ·பிகருங்க கூட அதுலதாண்டா ஏறுதுங்க .. போய் ஏறு .. என்ஜாய் பன்னு,
சரிடா அப்புறம் நான் கிளம்பறேன்... நாளக்கு காலைல மறக்காம வீட்டுக்கு வா..
டேய் மாப்ள சீக்கிரம் ஓடுடா வண்டிய எடுத்துட்டான்... சொல்லிக்கொண்டே , பக்கத்து சந்தில் சென்று மறைந்தான் ஒருவன் மந்தைவெளிகாரன்...
ஓடி வந்தவன் ஜன்னல் கம்பியை பிடித்து ..லாவகமாக வலதுகாலை படிக்கட்டின் நுனியில் வைக்கவும், டிரைவர் ஆக்ஸிலேட்ரை வேகமாக மிதிக்கவும்.. எதிர்பாராதவிதமாக கால் இடறி அவன் கீழே விழ .. ஒரு சில மனித்துளியில் அனத்தும் நடந்துவிட்டது.....
கீழே விழுந்தவன் உருண்டு போய் ஓரமாக இருந்த ஒரு பாறையில் தலை மோதி, நினைவிழந்து கிடந்தான்.. பின்னந்தலையில் அடிபட்டு ரத்தம் வழிந்துக்கொண்டிருந்தது...
நிறுத்ததில் இருந்து ஒரு இருவது அடி தள்ளி முதல் பேருந்து சடன் பிரேக் அடித்து நின்றது .. இரண்டாவது பேருந்தும் பின்னாலேயே நின்றது..
கூட்டம் கூடிவிட்டது...
மூச்சிருக்கா பாரு ,
போலிஸ் கேஸ் ஆக போதுப்பா.. பாத்து..
அய்யோ , யாரு பெத்த புள்ளயோ.. பாவம்...
இவனுங்க எல்லாம் இப்படித்தான் பா, வண்டி நிக்கற வரைக்கும் ஸ்டைலா பாக்க வேண்டியது.. கிளம்பின உடனே வந்து ஏறவேண்டியது..ஹீரோனு நினைப்பு...
உயிர் இருக்குய்யா, கொஞ்சம் தள்ளுங்கப்பா...காத்து விடுங்க..
பல விதமான குரல்கள் வந்த வண்ணம் இருந்தது...
யாராச்சும் ஒரு துணி இருந்தா குடுங்கப்பா ... தலைல ஒரு கட்டு போட்டு கொஞ்சம் ரத்ததை நிறுத்தலாம்.. யாரோ ஒருவர் சொல்ல .. அவரவர் மற்றவரை பார்த்தார்கள்..யார் தருவார்கள் என்று..
ஒருவன் தன் கைக்குட்டையை நீட்டினான்.. ஏம்ப்பா , இதை வெச்சி கட்டி பிரயோஜனமில்லை... கொஞ்சம் பெரிய துனியா வேனும்..
முதல் பேருந்தின் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்த ஒருத்தர்... ஏம்மா அந்த மஞ்ச துப்பட்டாவ கொஞ்சம் குடும்மா...
கேட்காதது போல், வெடுக்கென முகத்தை திருப்பிக்கொண்டாள் மஞ்ச சுடிதார்..
சரி சரி ஏறுங்கப்பா..நாம கிளம்பலாம்... மணியாச்சு ... ஆறு மணிக்கெல்லாம் வடபழனி டிப்போ போகனும்..ஏற்கனவே லேட்டு... இரண்டாவது பேருந்து கண்டக்டர் குரல் கொடுத்தார்...
யோவ், பெரிசு.. எங்க எறங்கி போற?? சைதாப்பேட்டை தானே கேட்ட ..ஏறு, ஏறுய்யா... அடுத்த பஸ் எப்போ வரும்னு தெரியாது.. லேட்டாகும்... ஏறு...யோவ்.... கண்டக்டர் குரல் கொடுக்க அதை காதில் வாங்காமலேயே இறங்கினார் பெரியவர்...
அடிப்பட்டவனுக்கு அருகில் வந்தார்.. இன்னமும் ரத்தம் வழிந்துக்கொண்டிருந்தது..
இந்தாங்கய்யா.. இதை வெச்சி கட்டி அந்த ரத்ததை கொஞ்சம் நிறுத்துப்பா... மஞ்ச பையில் வைத்திருந்த ஒரே வேட்டியை எடுத்து நீட்டினார் அந்த பெரியவர்...
என்னய்யா புதுசா இருக்கே?? யாரோ ஒருவன் கேட்டான்..
ஆமாங்க, நாளைக்கு மொத தடவையா வேலைக்கு போறப்ப கட்டிக்கலாமுனு நல்லா தோச்சி , இஸ்திரி போட்டு எடுத்துட்டு வந்தேன்யா... பரவல்ல... நான் பாத்துகறேன்.. நீ கட்டுய்யா..ரத்தம் நிக்கட்டும்... கட்டுபோட்டு ஆஸ்புத்திரி தூக்கிட்டு போங்கப்பா.. பாவம் , யாரு பெத்த புள்ளயோ... கொஞ்ச நேரம் முன்னாடி என்கிட்ட கூட நல்லா பேசிட்டு இருந்துச்சு... இப்போ...இப்படி ஆயிபோச்சே. தாயி மகமாயி அந்த புள்ளய காப்பாத்தி குடுதாயி.... வேண்டிகொண்டே பேருந்து நிறுத்தம் நோக்கிச் சென்றார்..
வேட்டி சுத்தமாக இருந்தது, அந்த மாயவரத்தானின் மனசு போலவே!!
சாமி, சைதாபேட்டை போற பஸ் வந்தா கொஞ்சம் சொல்லுப்பா..எழுத படிக்க தெரியாது....வேறு யாரிடமோ அந்த பெரியவர் கேட்பது காதில் விழுகிறது ......................